Monday, June 14, 2021

மத்ஹபுகளின் அவசியம்-குர்ஆன்,சுன்னா ஒளியில்/குற்றச்சாட்டுகளும் பதில்களும




மத்ஹபுகளின் அவசியம் தொடர்:3 

அல்லாமா  இப்னுல்ஹுமாம்
(ரஹ்) அவர்கள் இப்னு நுஜைம் (ரஹ்) அவர்கள் தக்லீதின் வரைவிலக்கணத்தை இவ்வாறு எழுதியுள்ளார்கள்:

التقليد العمل بقول من ليس قوله إحدى الحجج بلا حجة منها

தக்லீத் என்பது இமாமின் சொல் ஷரீஅத்தின் அடிப்படையான ஆதாரங்களில் உள்ளதல்ல.
அதன் பேரில் ஆதாரத்தை கேட்காமல் அமல் செய்வதாகும்.
(ஆதாரம்:தய்ஸீருத்தஹ்ரீர் 4/246,شرح المنار لابن نجيم 2/37)  

ஆகவே முகல்லித் இமாமை பின்பற்றுபவர் இமாமின் சொல்லை ஷரீஅத்தின் அடிப்படை ஆதாரமாக கருதவில்லை.மாறாக,அடிப்படை ஆதாரமானது குர்ஆன்,சுன்னா மட்டும்தான்.(இவைகளில் இஜ்மா,கியாஸ் உள்ளடங்கிவிடும்)
எனினும்,இமாம்கள் குர்ஆன் சுன்னாவின் முழுமையான நோக்கங்களை, ஞானங்களை பரிபூரணமாக அறிந்திருப்பதால் நாம் அவர்களின் பக்கம் தேவையுடையவர்களாக இருக்கிறோம்.

இதனை எளிதாக புரிந்து கொள்ள உதாரணத்தை தருகிறோம்.

 இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் நூல் வடிவில் உள்ளது.ஆனால் நாட்டின் பெரும்பாலான இந்திய மக்கள் அரசியலமைப்பு சட்டங்களை ஆராய்ந்து பார்த்து செயல்படுகிறார்களா? பாமரர்கள் ஒருபுறம் இருக்கட்டும்.அரசியலமைப்பு சட்டங்களை அடிப்படையில் கற்காத சிறந்த கல்வியாளர்கள் ஆங்கில மொழியை நல்லமுறையில் கற்றிருந்தாலும், அரசியலமைப்பு சட்டங்களை நேரடியாக ஆராய்ந்து பார்த்து செயல்படுவதற்கு தைரியம் பிறக்காது.சட்டப்பிரச்சனை ஏற்படும்போது திறமையான வக்கீலிடம் சென்று ஆலோசனைப் பெற்று அதன்படி செயல்படுகின்றனர்.வக்கீல் அரசியலமைப்பு சட்டங்களை ஆராய்ந்து வாதங்களை எடுத்து வைப்பார்.இப்பொழுது வக்கீல் சட்டத்தை உருவாக்கியவர் என்பதாக யாராவது கூறுவாரா? இதே போன்று தான் குர்ஆன் சுன்னாவின் சட்டங்களின் கருத்துக்களை,விளக்கங்களை கூறும் முஜ்தஹித்களிடம் (ஆய்வாளர்கள்) நம்பிக்கை வைத்து திரும்புகிறோம்.அதன்படி அமல்செய்கிறோம்.இதற்கு பெயர்தான் தக்லீத்.எனவே குர்ஆன்,சுன்னாவிற்கு பதிலாக முஜ்தஹித்களை பின்பற்றுகிறார்கள் என்பதாக விமர்சிப்பது அறிவுடைமையா? என்பதை சிந்தித்துப் பார்க்கட்டும்!

மற்றோர் உதாரணம்:

இமாம் ஜமாஅத் நடைபெறும் போது இமாம் முன்னால் நிற்பார்.யாரை அவர் வணங்குகிறார்? அல்லாஹ்வை தான் வணங்குகிறார்.முக்ததி (இமாமை பின்தொடர்பவர்) யாரை வணங்குகிறார்? அல்லாஹ்வைதான் வணங்குகிறார். இமாமை தக்லீத் (பின்பற்றுவதும்) செய்வதும் இவ்வாறு தான்.இமாமும்,முக்ததியும் அல்லாஹ்வை தான் வணங்குகிறார்கள்.எனினும்,
முக்ததி அவருக்கு பின்னால் தான் நிற்கவேண்டும்.இது போன்றே இமாம்கள் குர்ஆன்,சுன்னாவை அமல்செய்கின்றனர்.நாமும் அவர்களைப் பின்பற்றி குர்ஆன்,சுன்னாவை அமல்செய்கிறோம்.இமாமை தான் முக்ததி வணங்குகிறார் என்பதாக கூறுவது எவ்வளவு பெரிய மடமையோ அதைப் போன்று இமாம்களை, மத்ஹபுகளில் அல்லாஹ்வின் இடத்தில் வைத்து பின்பற்றுகின்றனர் என வாதிடுவதும் பெரிய மடமையாகும்.

தக்லீத் இருநிலைகள் 

ஒன்று, தக்லீத் செய்வதற்கு குறிப்பான முஜ்தஹித் 
(ஆய்வாளர்) இல்லை.மாறாக,ஒரு மஸ்அலாவில்  ஒரு மார்க்க அறிஞரின் வழிமுறையை தேர்ந்தெடுப்பது, மற்றொரு மஸ்அலாவில் வேறு அறிஞரின் வழிமுறையை ஏற்பது இதற்கு تقليد مطلق (தக்லீதே முத்லக்/பொதுவான தக்லீத்) அல்லது تقليد عام (தக்லீதே ஆம்) என்று சொல்லப்படும்.

மற்றொரு நிலை:குறிப்பான ஒரு முஜ்தஹிதான இமாமின் வழிமுறையை அனைத்து மஸ்அலாவிலும் ஏற்று நடப்பது இதற்கு (தக்லீதே ஷஹ்ஸி) தனிநபரை பின்பற்றுவது என சொல்லப்படும்.

விமர்சனம்: தக்லீத் என்பது குருட்டுத்தனமாக பின்பற்றுவதா? 

நமது பதில்:ஹள்ரத் மெளலானா காளி முஹம்மத் அஃலா ஸாஹிப் தானவி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்:

التقليد اتباع الإنسان غيره فيما يقول أو يفعل معتقدا للحقية من غير نظر إلى الدليل كان هذا المتبع جعل قول الغير أو فعله قلادة فى عنقه من غير مطالبة دليل 
தக்லீத் என்பது ஒருவரின் சொல்லை அல்லது செயலை நல்லெண்ணத்தின் பேரில் அது சரியானது என்பதாக விளங்கி ஆதாரத்தை சிந்திக்காமல் பின்பற்றுவதாகும்.மற்றொருவரின் சொல்லை அல்லது செயலை ஆதாரத்தை தேடாமல் தனது கழுத்தில் மாலையாக அணிவதை போன்றதாகும்.(ஆதாரம்:கஷ்பு இஸ்திலாஹாதில் ஃபுனூன் பக்கம்:1178)

அல்லாமா இப்னு மலிக் (ரஹ்) அவர்கள்,அல்லாமா இப்னுல் அய்னி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்:
وهو عبارة عن اتباعه فى قوله أو فعله معتقدا للحقية من غير تأمل فى الدليل 
தக்லீத் எனும் வார்த்தையின் பொருள் ஒருவரின் சொல்லை அல்லது செயலை சத்தியம் என்கிற நம்பிக்கையின் பேரில் ஆதாரத்தை சிந்திக்காமல் பின்பற்றுவதற்கு பெயராகும்.(ஆதாரம்:ஷர்ஹு மினார் பக்கம்:252)

(من غير مطالبة دليل) ஆதாரத்தை ,தேடாமல் (من غير تأمل فى الدليل) ஆதாரத்தை ஆராயாமல் 
என்பதை முன்வைத்து குருட்டுத்தனமாக பின்பற்றுவது என்பதாக விமர்சனம் செய்வது முறையல்ல‌.ஏனெனில் முகல்லித் (பின்பற்றுபவர்) ஆதாரத்தை கேட்கமாட்டார் என்பதால் ஆதாரம் இல்லை என்பதாக புரிந்து கொள்ளக்கூடாது.மாறாக ஆய்வாளரிடம் ஆதாரங்கள் உண்டு.(இது குறித்து பின்னால் ஏராளமான ஆதாரங்களை இன்ஷா அல்லாஹ் குறிப்பிடுவோம்!)

அல்பானி அவர்கள் கூறுவதை பாருங்கள் 

1)ஹைஸமி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:رجاله رجال الصحيح (அதனின் அறிவிப்பாளர்கள் ஆதாரமானவர்கள்) இதனை ஸுயூத்தி ரஹ் அவர்கள் எடுத்து சொல்லியுள்ளார்கள்.பிறகு அல்பானி கூறுகிறார்:قلده السيوطى ஸுயூத்தி (ரஹ்) அவர்கள் அவரை தக்லீத் செய்துள்ளார்.(ஆதாரம்:الضعيفة 2/340)

2)ஒரு ஹதீஸை ஸுயூத்தி (ரஹ்) அவர்கள் பலகீனம் என்கிறார்கள்.மனாவி அவர்கள் ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் சொல்லை முன்வைத்து ஸுயூத்தி (ரஹ்) அவர்களுக்கு மறுப்பளித்து ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானது)என்கிறார்.அல்பானி அவர்கள் எழுதியுள்ளார்:هذا تعقب واه جاءه من التقليد والاستسلام لرد الحافظ ابن حجر دون تبصر மனாவி அவர்கள் இதனை ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானது) என்பதை ஆராயாமல் இருந்தது இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் தக்லீதின் பேரிலாகும்.(ஆதாரம்:الضعيفة 345)

3)ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் ஒரு ஹதீஸை குறித்து رجاله ثقات (அதனின் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்) என எழுதியுள்ளார்.ஸன்ஆனி அவர்களும்,அவரிடத்திலிருந்து எழுதியுள்ளார்.அல்பானி அவர்கள் எழுதியுள்ளார்:قلده الصنعانى ஸன்ஆனி அவரை தக்லீத் செய்துள்ளார்.(ஆதாரம்:الضعيفة 362)

5)ஸன்ஆனி ஒரு ஹதீஸை ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானது) என்பதாக ஏற்பது தாரகுத்னியை தக்லீத் செய்துள்ளார்.(பக்கம்:394)

6)இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் ஒரு ஹதீஸை ஸஹீஹ் என்பதாக கூறியுள்ளார்.அல்பானி அவர்கள் எழுதுகிறார்;قلده فى ذلك شوكانى صديق حسن خان، آلوسى ஷவ்கானி ஸித்தீக் ஹஸன் கான்,ஆலூஸி அவரை (இப்னு கஸீர்)தக்லீத் செய்துள்ளனர்.(ஆதாரம்:பக்கம்,387)

7)இதே போன்று அல்பானி எழுதியுள்ளார்.
ஃகுமாரி,மனாவியை தக்லீத் செய்துள்ளார்.(ஆதாரம்:பக்கம்,69)

8)மனாவி,அவரை (ஹைஸமியை) தக்லீத் செய்துள்ளார்.قلده المناوى (ஆதாரம்:பக்கம்,95)

9)ஃகுமாரி தனது வழமைபோல் அவரை தக்லீத் செய்துள்ளார்.

இறுதியாக அல்பானி தன்னைக் குறித்து எழுதியுள்ளார்;قلدته فى ذلك كله للجنة القائمة على تحقيقه நான் அனைத்திலும் ஆய்விற்காக நிறுவப்பட்ட சபையை தக்லீத் செய்துள்ளேன்.

மேற்சொன்ன அனைத்திலும் தக்லீத் என்பதாக உள்ளதால் குருட்டுத்தனமாக பின்பற்றுவது என சொல்லலாமா?
 குருடன் குருடனுடன் சென்றால் எதேனும் குழியில் விழுந்துவிடுவான் இதற்குதான் குருட்டுத்தனமான தகலீத் என்று சொல்லப்படும்.ஆனால்,குருடன் பார்வையுள்ளவரின் பின்னால் சென்றால் பார்வையுள்ளவரின் உதவியால் அனைத்து குழிகளையும் தாண்டிவிடலாம்.போய்சேரும் இடத்தையும் அடைந்துவிடலாம்.முஜ்தஹித்கள் ஆய்வாளர்கள் குருடர்கள் அல்ல. (அல்லாஹ் பாதுகாப்பானாக) ஆழ்ந்து பார்ப்பவர்கள் (ஆராய்ந்து கூறுபவர்கள்) எனவே அவர்களின் மூலம் நமது நோக்கத்தை அடைந்துவிடலாம்.

விமர்சனம்:தக்லீத் என்பதின் மூலம் கிலாதத் (கழுத்துப்பட்டி) என்பதாகும்.மிருகங்களின் கழுத்தில் போடப்படும்.எனவே மனிதனை மிருகத்துடன் ஒப்பிட்டு கேவலப்படுத்துகின்றனர்.இது முறையா? 

நமது பதில்:இந்த குற்றச்சாட்டு முழுக்க அறியாமை நிறைந்ததாகும்.கிலாதத் (قلادة) என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு.ஒன்று மிருகங்களின் கழுத்தில் போடப்படும் கழுத்துப்பட்டிக்கு சொல்லப்படும்.மற்றொன்று மனிதனின் கழுத்தில் போடப்படும் மாலைக்கு சொல்லப்படும்.புகாரியில் வரும் தலைப்பு باب القلائد و السخاب للنساء (பெண்கள் கழுத்தணிகளையும்,நறுமண மாலையை அணிதல்) இங்கு கிலாதத்தின்(قلادة)பன்மையாக கலாயித் (القلائد) வந்துள்ளது
புகாரியில் استعارة القلائد (கழுத்து மாலைகளை இரவல் வாங்குவது) என்ற தலைப்பில் வரும் ஹதீஸ் 
ஆயிஷா (ரளி) அவர்கள் استعارت من اسماء قلادة அஸ்மா (ரளி) அவர்களிடம் கழுத்து மாலையை இரவல் வாங்கினார்கள்.(ஆதாரம்:புகாரி1/47)

முஸ்னத் அஹ்மதில் வரும் அறிவிப்பு ஆயிஷா ரளி அவர்கள் கூறுகிறார்கள்:انسلت قلادة لى من عنقى فوقعت எனது மாலை கழுத்திலிருந்து நழுவி விழுந்துவிட்டது.(ஆதாரம்:முஸ்னத் அஹ்மத்,6/272)
எனவே தக்லீதை மிருகங்களுடன் ஒப்பிட்டு கூறுவது மிகப்பெரும் மடமையும்,அரபி மொழி,ஹதீஸை குறித்து அறியாமையும் தான் காரணமாகும்.

விமர்சனம்:தக்லீத் என்பதும்,இத்திபாஃ (பின்பற்றுதல்) என்பதும் வெவ்வேறானதா?

நமது பதில்:தக்லீத்,இத்திபாஃ இரண்டும் நெருங்கிய பொருள் கொண்ட வார்த்தையாகும்.இத்திபாஃ என்பது குர்ஆன்,ஹதீஸை மட்டும்    பின்பற்றுவதற்கு சொல்லப்படும் குறிப்பான வார்த்தை இல்லை.மாறாக,ஷைத்தானை,வழிகெட்ட இணைவைப்பாளர்களை, மூதாதையர்களை பின்பற்றுவதற்கும் கூறப்பட்டுள்ளது. 
     
2:166 اِذْ تَبَرَّاَ الَّذِيْنَ اتُّبِعُوْا مِنَ الَّذِيْنَ اتَّبَعُوْا وَرَاَوُا الْعَذَابَ وَ تَقَطَّعَتْ بِهِمُ الْاَسْبَابُ‏
2:166. (இத்தவறான வழியில்) யாரைப் பின்பற்றினார்களோ அ(த்தலை)வர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள், இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள்; அவர்களிடையேயிருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டுவிடும்.

2:170 وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَـتَّبِعُ مَآ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْـٴًـــا وَّلَا يَهْتَدُوْنَ‏

2:170. மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

28:50 فَاِنْ لَّمْ يَسْتَجِيْبُوْا لَكَ فَاعْلَمْ اَنَّمَا يَـتَّبِعُوْنَ اَهْوَآءَهُمْ‌ ؕ وَمَنْ اَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوٰٮهُ بِغَيْرِ هُدًى مِّنَ اللّٰهِ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ

28:50. உமக்கு அவர்கள் பதில் கூறாவிடில், நிச்சயமாக அவர்கள் தம் மன இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் என்று நீர் அறிந்து கொள்ளும்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து நேர்வழி காட்டியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுபவனைவிட, மிக வழி கெட்டவன் எவன் இருக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் அக்கிரமக்கார சமூகத்தாருக்கு நேர்வழி காட்ட மாட்டான்.

29:12 وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلَّذِيْنَ اٰمَنُوا اتَّبِعُوْا سَبِيْلَـنَا وَلْـنَحْمِلْ خَطٰيٰكُمْ ؕ وَمَا هُمْ بِحٰمِلِيْنَ مِنْ خَطٰيٰهُمْ مِّنْ شَىْءٍ‌ؕ اِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏

29:12. நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம்: “நீங்கள் எங்கள் வழியை (மார்க்கத்தைப்) பின்பற்றுங்கள்; உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்கள் தம் குற்றங்களிலிருந்தும் எதையும் சுமப்பவர்களாக (தாங்குபவர்களாக) இல்லையே! எனவே (உங்கள் குற்றங்களை சுமப்பதற்காகச் சொல்லும்) அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே!

31:21 وَ اِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَـتَّـبِـعُ مَا وَجَدْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ الشَّيْطٰنُ يَدْعُوْهُمْ اِلٰى عَذَابِ السَّعِيْرِ‏

31:21. “அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்” என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் “(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)

இந்த வசனங்களில் இத்திபாஃ (பின்பற்றுவது) என்பது பலவிஷயங்களை பின்பற்றுவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.எனவே தக்லீத் என்பது வேறாகும்.இத்திஃபா என்பது வேறாகும் எனும் வாதம் தவறானது.

நல்லெண்ணத்தின் பேரில் பின்பற்றுவது

ஹழ்ரத் அப்பாஸ் (ரளி) அவர்களின் பிக்ஹ்,புத்திகூர்மை குறித்து யார் அறியாமல் இருக்கமுடியும்? நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,அவருக்கு துஆ செய்தார்கள் اللهم فقه فى الدين و علمه التأويل யாஅல்லாஹ்! தீனில் அவருக்கு சரியான விளக்கத்தை தந்தருள்வாயாக!குர்ஆனின் விளக்கவுரையின் பாதையை அவருக்கு கற்றுத்தருவாயாக! 
எனினும்,அலி (ரளி) அவர்களின் சொல்லை தான் பின்பற்றினார்கள்.

ஹள்ரத் ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்:عن ابن عباس قال إذا حدثنا ثقة عن على لم تتجاوزها நம்பிக்கையான மனிதர்,அலி (ரளி) அவர்களின் பத்வாவை கூறினால் அதனை கடந்து செல்லமாட்டோம்.(ஆதாரம்:பத்ஹுல் பாரி 7/60) இப்னு அப்பாஸ் ரளி அவர்கள் அலி (ரளி)மீது எவ்வளவு நல்லெண்ணம் வைத்திருப்பார்கள்? 

அல்லாமா இப்னு ஸஃத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:அனஸ் 
(ரளி) அவர்களிடம் எவராவது கேள்வி கேட்க வந்தால் அவரிடத்தில் கூறுவார்;سلوا مولانا الحسن எனது தோழர் ஹஸனிடம் சென்று கேளுங்கள்.அதற்கு அவர் நாம் உங்களிடம் வந்துள்ளோம் என்பார்.அனஸ் (ரளி) அவர்கள் கூறுவார்கள் அவரிடத்தில் செல்லுங்கள்.உங்களுக்கு அறிவுப்பூர்வமான பதில் அளிப்பார்.நாம் வயோதிகம் அடைந்துவிட்டோம்.
(ஆதாரம்:தபகாது இப்னு ஸஃத் 7/128)

அனஸ் (ரளி) அவர்கள் ஸஹாபி எனினும்,ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் மீது நல்லெண்ணம் நம்பிக்கையை பாருங்கள்.இதற்கு பெயர்தான் தக்லீத் என்று சொல்லப்படும்.

அல்லாமா தஹபி அவர்கள் எடுத்தெழுதியுள்ளார்கள்:ஹழ்ரத் அபூபக்கர் ஹுதலி (ரஹ்) அவர்கள், முஹம்மத் இப்னு ஸீரின் (ரஹ்) அவர்கள் கூறியதை எழுதியுள்ளார்கள்;الزم الشعبى فلقد رأيته يستفتى و الصحابة متوافرون 

ஹள்ரத் இமாம் ஷுஅபி (ரஹ்) அவர்களை (சகவாசத்தை) அவசியமாக்கி கொள்வீராக! ஸஹாபாக்கள் நிறைந்து இருந்தபோது பத்வா கேட்டதை நான் பார்த்தேன்.
(ஆதாரம்:தத்கிரா 1/76)

கவனித்து பாருங்கள்! ஹள்ரத் ஷுஅபி அவர்கள் ஸஹாபி இல்லை.எனினும்,ஸஹாபாக்கள்  வாழும் போதே அவர் பத்வா கொடுத்துக்கொண்டு இருந்தார் என்பதாக ஹள்ரத் முஹம்மத் இப்னு ஸீரின் (ரஹ்) அவர்கள், அன்னாரின் மீது நல்லெண்ணம் வைத்துள்ளார்கள்.

அல்லாமா கதீப் பக்தாதி (ரஹ்) ,ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) எடுத்து சொல்கிறார்கள்:ஒரு மஸ்அலாவின், ஆய்வின் முடிவில் இதில் எந்த ஓர் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இல்லை என்பதாக ஒருவர் கூறினார்.இதன்பேரில் ஹழ்ரத் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் ஹதீஸ் இல்லையென்றால் ஷாபியி (ரஹ்) அவர்களின் சொல் உள்ளதே? ஹள்ரத் ஷாபியி 
(ரஹ்) அவர்களின் சொல்லானது ஆதாரமாக உள்ளது.(ஆதாரம்:தாரீஹ் பக்தாத் 2/67,தஹ்தீப் 9/28)

வாசகர்களே! 
மேற்சொன்ன ஆதாரங்களின் மூலம் அழகாக புரியமுடிகிறது.உம்மத்தின் பெரியோர்களான ஸஹாபாக்கள்,தாபியீன்கள்,
முஜ்தஹித்கள் நல்லெண்ணத்தில்,நம்பிக்கையின் பேரில் பிறரை நம்பினர்.தக்லீத் செய்தனர்.எனவே தக்லீத் என்பது கண்மூடித்தனமாக பின்பற்றுவதல்ல.இமாமிடம் ஆதாரம் இருக்கும்.எனினும் ஆதாரத்தை கேட்காமல் அமல் செய்வர்.ஆதாரத்தை கேட்காமல் அமல் செய்வது சம்பந்தமாக ஸஹாபாக்களின் காலத்தில் தக்லீத் என்ற தலைப்பில் விரிவாக பார்ப்போம்.