Thursday, November 10, 2022

உளூவில் நிய்யத் அவசியமா? தொடர் 1

 உளுவிற்கு நிய்யத் அவசியமில்லை என்பது ஹனபி மத்ஹபின் நிலைப்பாடாகும்.இதனை குறித்து விமர்சிக்கப்படுகிறது.நிய்யத் அவசியம் என்பது ஒன்றுபட்ட கருத்து என்பது போல் சித்தரிக்கப்படுகிறது.எனினும், இந்த மஸ்அலா கருத்துவேறுபாடு கொண்டது.ஆனாலும் நிய்யத் அவசியமில்லை என்பதுதான் ஹனபி மத்ஹபில் முன்னுரிமை தரப்படும் கருத்தாக உள்ளது.

மத்ஹப் மறுப்பாளர்களின் வாதம் 
ஒருவர் எந்த அமலைச் செய்தாலும் அந்த அமலைச் செய்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு இருக்க வேண்டும். அந்த எண்ணமில்லாமல் வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது.
ஒருவர் சுப்ஹ் முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமலும் பருகாமலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமலும் இருக்கின்றார்; ஆனால் நோன்பு நோற்கும் எண்ணம் அவருக்கு இல்லை; நேரமின்மையின் காரணமாகவோ, மருத்துவர்களின் ஆலோசனைப்படியோ இவ்வாறு இருக்கின்றார் என்றால், நோன்பாளி கடைப்பிடிக்கும் அனைத்தையும் அவர் கடைப்பிடித்த போதும் நோன்பு நோற்கும் எண்ணம் இல்லாததால் அவர் நோன்பு நோற்றவராக மாட்டார்.
உடற்பயிற்சி என்பதற்காகவோ, அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவோ தொழுகையில் கடைப்பிடிக்கும் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்கின்றார்; ஆனால் தொழுகின்றோம் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்றால் இவர் தொழுகையை நிறைவேற்றியவராக மாட்டார். அது போல் தூக்கக் கலக்கத்தில் எழுந்து தொழுகையில் செய்யும் அனைத்தையும் ஒருவர் செய்கின்றார். ஆனால் தொழுவதாக அவருக்கு உணர்வு இல்லை என்றால் அவரும் தொழுதவராக மாட்டார்.
இது போலத் தான் ஒருவர் உளூவின் போது செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களையும் செய்கின்றார். ஆனால் உளூச் செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் உளூச் செய்தவராக மாட்டார்.
உதாரணமாக ஒருவர் வெளியே சென்று கொண்டிருக்கும் போது மழை பெய்கின்றது. உடல் முழுவதும் நனைந்து விடுகின்றது. உளூவின் போது கழுவ வேண்டிய அனைத்து உறுப்புக்களும் கழுவப்பட்டு விடுகின்றன என்று வைத்துக் கொள்வோம். அல்லது ஆற்றிலோ, அல்லது குளத்திலோ தவறி விழுந்து விட்டார். அல்லது இறங்கிக் குளிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இவருக்கு உளூச் செய்யும் எண்ணம் இல்லாததால் இவர் உளூச் செய்தவராக மாட்டார்.
எல்லா வணக்கங்களுக்கும் நிய்யத் எனும் எண்ணம் அவசியம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.
அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)
நூல்கள்: புகாரீ 1, முஸ்லிம் 3530

நமது பதில்:
ஹதீஸில் அமல்கள் என்பதில் அனைத்து அமல்களும் உள்ளடங்கும் என்று கூறினால் கொடுக்கல்,வாங்கல், குடும்ப வாழ்க்கை, வியாபாரம் போன்றவைகளும் அமல்கள் தான்.இவைகளில் ஒன்றுபட்ட கருத்தின்பேரில் நிய்யத் கடமையில்லை.எனவே அமல்கள் என்பதில் அனைத்து அமல்களும் உள்ளடங்காது என்பதுதான் பொருத்தமானது.ஆதாரத்தின் பேரில் சில அமல்கள் நிய்யத் இல்லாமலும் கூடும் என்பது விதிவிலக்காகும் என்பதை மத்ஹப் மறுப்பாளர்களும் ஏற்றுள்ளனர்.எனவே நாமும் ஆதாரத்தின் பேரில் உளு,குளிப்பை விதிவிலக்காக கருதுகிறோம்.
இந்த ஹதீஸின் கருத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்  முன்னுரிமையான சரியான கருத்து என்னவெனில் அனைத்து அமல்களில் நன்மைக்கு அடிப்படை அஸ்திவாரம் நிய்யத்துதான்.
இதற்கான ஆதாரம் ஹதீஸின் பிற்பகுதியில் வரும் வாசகம்
 فمن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها هجرته ما هاجر إليه  ஒருவரின் ஹிஜ்ரத் உலகத்தை அடைவது நோக்கமாக அல்லது பெண்ணை மணப்பது நோக்கமாக இருந்தால் அவரின் ஹிஜ்ரத் அதனின் பால் இருக்கும்.                                   (புகாரி)
எனவே ஹதீஸின் நோக்கமானது ஹிஜ்ரத்திற்கு நன்மை கிடைக்காது என்பது தான்.மாறாக ஹிஜ்ரத் நிறைவேறாது என்பதில்லை.இந்த ஹதீஸின் பிண்ணனியை ஆராய்ந்தால் இதுதான் சரியானது என்பதை புரிய முடியும்.ஒரு நபர் பெண்ணை நிக்காஹ் செய்வதின் பேரில் ஹிஜ்ரத் செய்தார் எனும் செய்தி நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கிடைத்த போது பெருமானார் அவர்கள் உரையாற்றினார்.அதில் இந்த ஹதீஸை நவின்றார்கள்.
(ஆதாரம்:தப்ரானி ஃபில் முஃஜமில் கபீர்)
இஸ்லாத்தில் ஹிஜ்ரத் என்பது கடமையாக இருந்தது.அனைத்து அமல்கள் நிறைவேறுவதற்கு நிய்யத் என்பது நிபந்தனையாக இருந்தால் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உமது ஹிஜ்ரத் நிறைவேறவில்லை என்பதாக ஏன் கூறவில்லை? உமது கடமை நிறைவேறவில்லை.மக்கா திரும்ப சென்று மீண்டும் ஹிஜ்ரத் செய்ய வேண்டும் என்பதாக ஏன் கூறவில்லை?
இந்த ஹதீஸை குறித்து புகஹாக்கள் எனும் மார்க்க விற்பன்னர்களின் கருத்துக்கள்

1)இமாம் அபூ ஜஃபர் தஹாவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:الأعمال بالنيات و إنما لكل امرى ما نوى يريد من الثواب இதன் மூலம் நன்மை என்பது தான் கருத்தாகும்.(ஆதாரம்:ஷர்ஹு மஆனில் ஆஸார் 3/96, ஹதீஸ் இலக்கம்:4651)

2)அபூபக்கர் ஜஸ்ஸாஸ் ராஜி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:و احتمل أن يراد به فضيلة العمل இந்த ஹதீஸின் மூலம் அமல்களுக்குரிய சிறப்பு எனும் கருதுவதற்கு வாய்ப்புண்டு.(ஆதாரம்:ஷர்ஹு முஹ்தஸர் தஹாவி 1/307)

3)அல்லாமா அய்னி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: قوله و لكل امرء ما نوى يدل على الثواب و الاجر நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சொல் ஒவ்வொருவருக்கும் அவன் எண்ணியதை கிடைக்கும் என்பதானது நன்மை,கூலி உண்டு என்பதை அறிவிக்கிறது.(ஆதாரம்:உம்ததுல் காரி 1/30)

4)இமாம் இப்னு ஹுமாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:إذا لم ينو حتى لم تقع عبادة سببا لثواب நிய்யத் இல்லையெனில் உளுவில் கிடைக்கும் நன்மைக்கு காரணமாக அமையாது.(ஆதாரம்: பத்ஹுல் கதீர் 1/32) பிறகு நிய்யத்தின்றி உளு நிறைவேறும் என்பதாக தெளிவுப்படுத்தி கூறியுள்ளார்கள்.

5)ஷம்சுல் அயிம்மா இமாம் ஸர்கஸி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:فإن المراد أن ثواب العمل بحسب அமலுக்குரிய நன்மையானது நிய்யத்தை பொறுத்துதான் அமைந்துள்ளது.

6)அல்லாமா அன்வர்ஷாஹ் கஷ்மீரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: வணக்கங்கள் சரியாகுவதற்கு நிய்யத்துதான் அடிப்படையாக உள்ளது.எனவே நிய்யத்து இல்லையெனில் வணக்கமானது நன்மையை விட்டும் நீங்கிவிடும்.
(ஆதாரம்:பைளுல் பாரி 1/81)

முன்சென்ற மார்க்க அறிஞர்களின் ஒரு சாராரிடத்தில் வணக்கங்களில் நன்மைக்கு அடிப்படையானது நிய்யத்தின் பேரிலாகும்.இதுதான் சரியாகும்.ஒருவர் உளு செய்கிறார்.எனினும்  அதனை நிய்யத்து செய்யவில்லையானால் நன்மை கிடைக்காது.எனினும் தூய்மையாகிவிடுவார்.
உதாரணமாக ஒருவர் தனது ஆடையை சுத்தப்படுத்தும் போது  தொழுவதற்காக என நிய்யத் செய்கிறார்.அவரின் நல்ல நிய்யத்தின் பேரில் நன்மை கிடைக்கும்.எனினும் நிய்யத்தின்றி ஆடையை சுத்தப்படுத்தினால் நன்மை கிடைக்காது.எனினும், ஆடை தூய்மையாகிவிடும் என்பதில் அனைவரும் ஒன்றுப்பட்டுள்ளோம்.இவ்வாறே நாமும் கூறுகிறோம் உளுவில் நிய்யத் செய்யவேண்டும்.எனினும் ஒருவர் நிய்யத் செய்யவில்லையானால் உளு கூடிவிடும்.ஏனெனில் தண்ணீரின் அசலான தன்மையானது தூய்மைப்படுத்துவதாகும்.
வணக்கங்கள் நிய்யத்தின் பேரில் தான் அமைந்துள்ளது எனும் ஹதீஸை முன்வைத்து உளுவிற்கு நிய்யத் அவசியம் என்பதாக வாதிட்டால் நமது கேள்வி என்னவெனில் ஹதீஸில் வந்துள்ள வாசகம் அனைத்து அமல்களுக்கும் நிய்யத் அவசியம் என்பதாகத்தான் வந்துள்ளது.எனவே ஒருவரின் ஆடையில் அசுத்தம் பட்டுவிட்டால் அதனை சுத்தப்படுத்துபவர் நிய்யத் செய்யவில்லையானால் ஆடையானது சுத்தமாகுமா? ஆகாதா? 
தண்ணீர் ஆடையை சுத்தப்படுத்துவதில் நிய்யத்திற்கு வேலை இல்லை.தண்ணீரின் அசலான தன்மை சுத்தப்படுத்துவதாகும்.
முக்கியமான அடிப்படை:உளுவில் நிய்யத்து கடமை என்பதாக ஏற்றால் தண்ணீரானது தூய்மைப்படுத்தும் தன்மையானது நிய்யத்தின் பேரில் அமைந்துவிடும்.நிய்யத் இருந்தால் தூய்மைப்படுத்தும் இல்லையெனில் தூய்மைப்படுத்தாது.இந்த விஷயமானது ஆதாரம்,அறிவிற்கு எதிரானது.ஏனெனில் அல்லாஹ்தஆலா கூறுகிறான் و أنزلنا من السماء ماء طهور வானத்திலிருந்து தூய்மையான நீரை நாம் பொழியச்செய்கிறோம்.(அல்குர்ஆன்)
உம்முஸலமா (ரளி) அவர்கள் கடமையான குளிப்பை குறித்து கேள்வி கேட்டபோது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:إنما يكفيك ان تحثين على راسك ثلاث حثيات من ماء ثم تفضين عليك الماء فتطهرين உனது தலையில் மூன்று தடவை தண்ணீர் ஊற்று.பிறகு உடலில் தண்ணீர் ஊற்று தூய்மையாகிவிடுவாய்.(இது) உனக்கு போதுமாகும்.(ஆதாரம்:ஸஹீஹ் இப்னு குஜைமா ஹதீஸ் எண்:246)
இமாம் இப்னு குஜைமா ,இமாம் இப்னு ஹிப்பான்,இமாம் பஙவி,இமாம் இப்னுல் ஜாரூத், அபூஅவானா போன்ற அறிஞர்கள் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என கூறியுள்ளனர்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தூய்மைப்படுத்துவதற்கு தண்ணீரை ஊற்றுவதை போதுமானது என்பதாக கூறியுள்ளார்கள்.மாறாக நிய்யத் குறித்து எது ஒன்றும் கூறவில்லை.எனவே தூய்மையாகுவதற்கு நிய்யத் அவசியமில்லை என்பது புரிகிறது.
இமாம் இப்ராஹிம் நகயி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:ما أصابه الماء من مواضع الطهور فقد طهر உளுவின் உறுப்புகளில் தண்ணீர் முழுமையாக பட்டுவிட்டால் தூய்மையாகிவிடும்.
இவ்வாறே இமாம் முஹம்மது அலி இப்னு ஹுஸைன் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:حدثنا ابن المبارك عن معمر عن زيد بن اسلم قال سمعت على بن حسين يقول ما أصاب الماء منك و انت جنب فقد طهر ذلك لمكان குளிப்பு கடமையான நிலையில் உனது உடலின் பகுதியில் தண்ணீர் பட்டுவிட்டால் அந்த இடத்தில் தூய்மையாகிவிடுவார்.
(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபூஷைபா ஹதீஸ் இலக்கம்:452 அறிவிப்பாளர் தொடர் சரியானது)

 சுருக்கம் என்னவெனில் குர்ஆன் வசனமும், பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்அவர்களும்,இமாம்களும் உடலை சுத்தப்படுத்தும் வழிமுறையை கூறியுள்ளனர்.எனினும் நிய்யத் குறித்து எது ஒன்றும் கூறவில்லை.எனவே உளு,குளிப்பு போன்ற காரியங்களில் நிய்யத் பர்ளு இல்லை.
மத்ஹப் மறுப்பாளர்களிடத்தில் நமது வாதம் ஒருவரின் வீட்டில் நாய் நுழைந்து பாத்திரத்தில் வாய்வைத்து விட்டது.நிய்யத் இன்றி அதனை கழுவினால் தூய்மையாகுமா? 
துய்மையாகாது   எனில் அல்லாஹுத்தஆலா தண்ணீரை எந்த ஒரு நிபந்தனையுமின்றி தூய்மைப்படுத்தும் என்பதாக ஏன் கூறியுள்ளான்? தூய்மையாகும் எனில் இவ்வாறே நிய்யத் இன்றி உளுவும் நிறைவேறும்.இன்ஷா அல்லாஹ் தொடரும்













Saturday, January 15, 2022

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்

 தக்லீதிற்கு எதிரான  குற்றச்சாட்டுக்களுக்கு பதில்கள்

தொடர்:22 

 

முன்னால் தக்லீத் குறித்த எதார்த்த நிலையை தெளிவாக விளக்கிவிட்டோம்.குர்ஆன்,சுன்னாவில் அது குறித்த ஆதாரங்களை அதனின் பலதரப்பட்ட படித்தரங்களை அதற்குரிய சட்டங்களை திறந்த மனதோடு வாசித்துப் பார்த்தால் ஏராளமான சந்தேகங்கள் நீங்கிவிடும்.எனினும்,சில குற்றச்சாட்டுகளுக்கு குறிப்பாக பதில் அளிக்கும் தேவை உள்ளது.ஏனெனில் பெரும்பாலானவர்களின் உள்ளங்களில் அதனால் தடுமாற்றங்கள் ஏற்படுகிறது.அல்லது பொதுவாக மத்ஹப் மறுப்பாளர்களால் குற்றச்சாட்டு திரும்ப திரும்ப முன்வைக்கப்படுகிறது.

முதல் குற்றச்சாட்டு:குர்ஆனில் அல்லாஹ் தக்லீதை பழித்துரைத்து கூறுகிறான் 
وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَـتَّبِعُ مَآ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْـٴًـــا وَّلَا يَهْتَدُوْنَ‏

2:170. மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

நமது பதில்: இதற்கு பதில் மிகத் தெளிவானது.அல்லாஹ் தக்லீதை குறித்து பழித்துரைப்பது ஈமானிய விஷயங்களுடன் சம்பந்தப்பட்டது.இந்த வசனத்தில் மார்க்கத்தின் அடிப்படையான கொள்கைகள் கூறப்பட்டுள்ளது.
இணைவைப்பாளர்கள் தவ்ஹீத்,ரிஸாலத் (தூதுத்துவம்)
ஆகிரத் (மறுமை) போன்ற கொள்கைகளில் சத்தியத்தை ஏற்காமல் எங்களின் மூதாதையர்களை எந்த வழியில் நடக்க கண்டோமோ,அந்த வழியில் நடக்கிறோம் என்பதாக கூறினார்கள்.அதாவது அவர்களின் தக்லீத் தீனின் அடிப்படை அம்சங்களில் உள்ளது.இதில் தக்லீத் செய்வது நம்மிடத்திலும் கூடாது.தீர்க்கமான விஷயங்களில்,இறைநம்பிக்கை அம்சங்களில் நம்மிடத்திலும் தக்லீத் செய்வதற்கு வேலை இல்லை என்பதாக தலைப்பின் ஆரம்பத்தில் தெளிவுப்படுத்தி விட்டோம்.அடுத்து,அல்லாஹ் மூதாதையர்களை தக்லீத் செய்வதை பழித்து கூறுவதற்கு இரண்டு காரணங்களை கூறுகிறான்.ஒன்று,.....وما أنزل الله அல்லாஹ் அருளியதை  தெளிவாக புறக்கணித்து தங்களின் மூதாதையர்களின் செயல்களை அதற்கு எதிரில் ஆதாரமாக முன்வைக்கின்றனர்.ஆனால் நாம் அல்லாஹ் அருளியதை புறக்கணிப்பதில்லை.மாறாக,
அதனின் விளக்கத்திற்காக முஜ்தஹிதின்(ஆய்வாளரின்) கூற்றுக்களை நம்பிக்கை கொள்கிறோம்.முஜ்தஹிதின் கூற்றுக்களை தனியானதொரு ஆதாரமாக ஏற்பதில்லை.
அல்லாமா நுஜைம் (ரஹ்) அவர்கள் தக்லீதின் வரைவிலக்கணத்தை கூறுகிறார்கள்:
التقليد العمل بقول من ليس قوله إحدى الحجج بلا حجة منها 
தக்லீத் என்பது இமாமின் சொல் ஷரீஅத்தின் அடிப்படையான ஆதாரங்களில் உள்ளதல்ல.
அதன் பேரில் ஆதாரத்தை கேட்காமல் அமல் செய்வதாகும்.
(ஆதாரம்:தய்ஸீருத்தஹ்ரீர் 4/246,شرح المنار لابن نجيم 2/37)  

இரண்டாவது, மூதாதையர்கள் அறியாதவர்களாக,நேர்வழியான பாதையில் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.ஆனால்,நான்கு இமாம்களும் நேர்வழியில் அறிவில் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை மத்ஹப் மறுப்பாளர்களும் ஏற்கிறார்கள்.எனவே நமது தக்லீதை காபிர்களின் தக்லீதுடன் பொருத்துவது மிகப்பெரும் அநீதியாகும்.

இரண்டாவது குற்றச்சாட்டு
اِتَّخَذُوْۤا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ وَالْمَسِيْحَ ابْنَ مَرْيَمَ‌ ۚ وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَـعْبُدُوْۤا اِلٰهًا وَّاحِدًا‌ ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ ؕ سُبْحٰنَهٗ عَمَّا يُشْرِكُوْنَ‏
அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.(9:31)

 நமது பதில்: முஜ்தஹிதீன்கள் ஆய்வாளர்கள் ஷரீஅத்தை உருவாக்கியவர்கள் இல்லை.மாறாக,ஷரீஅத்தின் சட்டங்களை விளக்கி கூறுபவர்கள் என்பதாகத்தான் நாம் நம்புகிறோம்.அதுமட்டுமின்றி 
அவர்களின் விளக்கங்களை நம்பிக்கை வைத்து குர்ஆன்,சுன்னாவை தான் பின்பற்றுகிறோம்.குர்ஆன்,சுன்னாவை விட இமாம்களுக்கு முன்னுரிமை தருகிறோம் என்பதாக அபாண்டத்தை, பழியை சுமத்துகின்றனர்.
1)மார்க்கத்தின் அடிப்படை அம்சங்களில் தக்லீத் இல்லை.
2)ஷரீஅத்தின் சட்டங்களில் பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருப்பதில் தக்லீத் இல்லை.
3)குர்ஆன்,சுன்னாவில் உள்ள ஆதாரங்கள் மற்றும் அர்த்தங்கள் தீர்க்கமான, தெள்ளத் தெளிவாக இருந்து அதற்கு எதிரான ஆதாரமும் இல்லாத போது அதில் நாம் கருத்துவேறுபாடு கொள்வதில்லை.உதாரணமாக
 وَالْمُطَلَّقٰتُ يَتَرَ بَّصْنَ بِاَنْفُسِهِنَّ ثَلٰثَةَ قُرُوْٓءٍ ‌
தலாக் கூறப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் காலம் (குர்உ) பொறுத்திருக்க வேண்டும்.(2:228)

மற்றோரு வசனம்:
لِّـلَّذِيْنَ يُؤْلُوْنَ مِنْ نِّسَآٮِٕهِمْ تَرَبُّصُ اَرْبَعَةِ اَشْهُرٍ‌‌ۚ فَاِنْ فَآءُوْ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது; எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.(2:226)

இவ்விரு வசனங்களையும் பார்த்தால் முதல் வசனத்தில் மாதவிடாய் காலம் (குர்உ) என்றும்,மற்றோரு வசனத்தில் நான்கு மாதங்கள் என்றும் வந்துள்ளன.இவ்விரண்டு வசனங்களிலும் முறையே 'மூன்று' 'நான்கு' என்று வந்துள்ள சொற்களில் இரு கருத்துகளுக்கு இடமில்லை. அவை ஒரே கருத்தைக் கொடுக்கக்கூடிய திட்டவட்டமான இரண்டு சொற்களேயாகும்.ஆனால், முதலாவது வசனத்தில் உள்ள 'குர்உ' என்ற சொல்லையும் இரண்டாவது வசனத்திலுள்ள 'அஷ்ஹுர்' (மாதங்கள்) என்ற சொல்லையும் ஆராய்ந்தால் குர்உ என்ற சொல் பல கருத்துகளைக் கொடுக்கக் கூடியதாகவும் அஷ்ஹுர்  என்ற சொல் மாதங்கள் என்ற ஒரே கருத்தையே கொடுப்பதையும் நாம் புரியலாம்.இங்கு இமாம்களுக்கு மத்தியில் மூன்று,நான்கு,மாதங்கள் போன்ற வார்த்தையில் கருத்து வேறுபாடு ஏற்படவில்லை.ஏனெனில் இந்த வார்த்தைகளில் பல அர்த்தங்களுக்கு இடமில்லை.ஆனால் குர்உ எனும் வார்த்தைக்கு மாதவிடாய்,மாதவிடாயிலிருந்து தூய்மையாகுதல் எனும்  இரண்டு விதமான அர்த்தம் உண்டு.இதனால் இமாம்களுக்கு மத்தியில் இயல்பாக கருத்துவேறுபாடு ஏற்படுகிறது.
4)தக்லீத் என்பது குர்ஆன்,சுன்னாவில் பலதரப்பட்ட கருத்துக்களுக்கு வாய்ப்புள்ள போது ஒரு பொருளை குறிப்பாக்குவதற்காக தனது சிந்தனையை பயன்படுத்தாமல் ஆய்வாளரின் புரிதலை ஏற்பதாகும்.
5)முஜ்தஹித்களை (ஆய்வாளர்களை)தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதாக நம்பிக்கை கொள்ளவில்லை.அதுமட்டுமின்றி அவர்களிடத்திலும் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை உறுதியாக நம்புகிறோம்.
6)ஒரு متبحر عالم (ஆழ்ந்த அறிவாற்றல் உள்ள அறிஞர்) 
அவருக்கு முஜ்தஹிதின் (ஆய்வாளரின்) ஏதேனும் கூற்று ஸஹீஹான, தெளிவான ஹதீஸிற்கு மாற்றமாக இருந்து அதற்கு எதிராக முரண்பாடும் இல்லையெனில் அவர் முஜ்தஹிதின் கூற்றை விட்டு விட்டு ஹதீஸின் பேரில் அமல் செய்வது அவசியமாகும்.
ஆக நம்மிடத்தில் தக்லீத் செய்வதில் இத்தனை அம்சங்கள் இருந்தும் வழிகேடு எனவும், இமாம்களை அல்லாஹ்விற்கு நிகராக்கிவிட்டார்கள் எனவும் வாதிட்டால் முழு உலகில் வழிகேட்டை,இணைவைப்பை விட்டும் ஒருவரும் தப்பிக்க முடியாது.மத்ஹப் மறுப்பாளர்கள் கூட நடைமுறையில் தக்லீத் செய்துதான் வருகின்றனர்.அவர்கள் ஒவ்வொருவரும் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் போது முஜ்தஹித்களாக (ஆய்வாளர்களால்) பிறக்கவில்லை.மேலும் ஒவ்வொருவரும் அறிஞராகவும் இல்லை.அறிஞராக இருந்தாலும் அனைத்து மஸ்அலாவிலும், சந்தர்ப்பங்களிலும் குர்ஆன்,சுன்னாவை முழுமையாக அணுகுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.அறிஞர்களாக இல்லாதவர் அவர்களின் உலமாக்களிடத்தில் கேட்டு தக்லீத் செய்கிறார்கள்.இந்த நோக்கத்திற்காக மத்ஹப் மறுப்பாளர்களின் அறிஞர்கள் தங்களது ஆய்வுகளை,தீர்ப்புகளை நூல் வடிவில் வெளியிட்டுள்ளனர்.தீர்ப்புகளில் ஆதாரங்கள் இருந்தாலும், சாமானியன் அவர்கள் கூறிய ஆதாரம் சரியானதா? இல்லையா? என்பதை எப்படி புரிவான்? எனவே மத்ஹப் மறுப்பாளர்களும் அவர்களின் அறிஞர்களின் புரிதலை நம்பிக்கை கொண்டு செயல்படுகின்றனர்.இதற்கு பெயர்தான் தக்லீத்.

Sunday, January 9, 2022

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்

 

தக்லீதின் படித்தரங்கள்

தொடர்:21


மூன்றாவது:மத்ஹபில் முஜ்தஹித் (المجتهد فى المذهب ) 

இஜ்திஹாதின் தரத்தை அடையாதவர்.ஆதாரங்களை எடுப்பதிலும்,அடிப்படை கோட்பாடுகளிலும் அவரின் இமாமான முஜ்தஹிதின் வழிமுறையில் நிலைத்திருப்பார்.ஆனாலும் அடிப்படை விதிகளுக்கு கீழ் கிளைச் சட்டங்களில் நேரடியாக     குர்ஆன்,                     சுன்னா,
ஸஹாபாக்களின் வழிமுறைகள் போன்றவைகளில் ஆராயும் ஆற்றல் பெற்றிருப்பார். இத்தகைய     அறிஞர், முஜ்தஹித்களிடத்தில் கிளைச் சட்டங்களில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் கொண்டிருப்பார்கள்.
ஆனாலும் அடிப்படை விதிகளை கவனித்து இமாமை பின்பற்றுபவர் என்பதாகதான்  அழைக்கப்படுவார்.
உதாரணமாக ஹனபி (ரஹ்) மத்ஹபில் இமாம் அபூயூசுப் (ரஹ்) அவர்கள்,இமாம் முஹம்மது (ரஹ்) அவர்கள்.ஷாபியி (ரஹ்) மத்ஹபில் இமாம் முஜ்னி (ரஹ்) அவர்கள்,இமாம் அபூஸவ்ர் (ரஹ்) அவர்கள்.மாலிக் (ரஹ்) மத்ஹபில் ஸஹுன் (ரஹ்) அவர்கள்,இப்னுல் காஸிம் (ரஹ்) அவர்கள்.அஹ்மத் (ரஹ்) மத்ஹபில் இப்ராஹீமுல் ஹரபி (ரஹ்) அவர்கள், அபூபக்கர் அல்அஸ்ரம் (ரஹ்) அவர்கள்.

அல்லாமா இப்னு ஆபிதீன் ஷாமி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
الثانية طبقة المجتهدين فى المذهب كابى يوسف و محمد و سائر اصحاب أبى حنيفة رح القادرين على استخراج الأحكام عن الأدلة المذكور على حسب القواعد التى قررها استاذهم فإنهم و أن خالفوه فى بعض احكام الفروع و لكنهم يقلدونه فى قواعد الأصول 
புகஹாக்களின் இரண்டாவது சாரார்கள்  மத்ஹபில் முஜ்தஹித்கள் (المجتهد فى المذهب)உதாரணமாக இமாம் அபூயூசுப் (ரஹ்) அவர்கள்,இமாம் முஹம்மது (ரஹ்) அவர்கள்,இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் மற்ற மாணவர்கள் மேற்கூறப்பட்ட ஆதாரங்களிலிருந்து (குர்ஆன்,சுன்னா,இஜ்மா,கியாஸ்) அவர்களின் ஆசிரியர் நிர்ணயித்த விதிகளுக்கு ஏற்ப சட்டங்களை ஆய்ந்து அறியும் ஆற்றல் பெற்றவர்கள்.இதனால் தங்களது இமாமிடத்தில் கிளைச்சட்டங்களில் அதிகமான கருத்து வேறுபாடுகொண்டு            இருப்பார்கள்.
எனினும்,அடிப்படை விதிகளில் அவர்கள் இமாமை பின்பற்றுபவர்களாக தான் கருதப்படுவார்கள்.

நான்காவது: முஜ்தஹித் முத்லக் (المجتهد المطلق) 
இது உயர்ந்த நிலையாகும்.அறிஞர் முஜ்தஹிதாக இருப்பார்.எனினும் சில சமயங்களில் தக்லீத் செய்வார்.எந்த மஸ்அலாவில் குர்ஆனில் அல்லது ஆதாரப்பூர்வமான சுன்னாவில் தெளிவில்லாத போது தனது கியாஸ் (ஒப்பீடு) மற்றும் ஆய்வின் மூலம் அமல் செய்வதற்கு பதிலாக ஸஹாபாக்கள் அல்லது தாபியீன்களின் கூற்றுகளை தேடுவார்கள்.அவைகள் கிடைக்கப்பெற்றால் அதனை தக்லீத் செய்வார்.இது குறித்து முதல் நூற்றாண்டின் சான்றுகள்.
كان ابن عباس إذا سئل عن الأمر فكان فى القرآن أخبر به و إن لم يكن فى القرآن و كان عن رسول الله صلى الله عليه وسلم أخبر به فإن لم يكن فعن أبى بكر وعمر فإن لم يكن قال فيه برأيه 
இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களிடத்தில் எதேனும் விஷயத்தை குறித்து கேட்கப்பட்டால் குர்ஆனில் இருந்தால் அதற்கு ஏற்ப பதில் தருவார்கள்.குர்ஆனில் இல்லையெனில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவிற்கு ஏற்ப பதில் தருவார்கள்.சுன்னாவில் இல்லையெனில் ஹள்ரத் அபூபக்கர் (ரளி) அவர்கள்,ஹழ்ரத் உமர் (ரளி) அவர்களின் வழிமுறைக்கு ஏற்ப பதில் தருவார்கள்.அவ்வாறு இல்லையெனில் தனது ஆய்வு,சிந்தனையின் மூலம் பதில் தருவார்கள்.(ஆதாரம்:ஸுனுத்தாரமி 1/55 தலைப்பு:باب الفتيا و ما فيه من الشدة )
ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் முஜ்தஹித்.எனினும்,தனது ஆய்வின் மூலம் பதிலளிக்காமல் ஹள்ரத் அபூபக்கர் (ரளி) அவர்கள்,ஹழ்ரத் உமர் (ரளி) அவர்களின் வழிமுறையை தக்லீத் செய்து பதில் அளித்துள்ளார்கள்.

ஸுனனுத்தாரமியில் வரும் மற்றோரு அறிவிப்பின் கருத்து:இமாம் ஷுஅபி (ரஹ்) அவர்களிடத்தில் ஒரு மனிதர் வந்து மஸ்அலா கேட்டார்.அதற்கு இமாம் அவர்கள் ஹள்ரத் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களின் கூற்றின் மூலம் பதில் தந்தார்கள்.அந்த மனிதர் உங்களின் கருத்து என்ன? என்பதாக கேட்டார்கள்......இறுதியாக கூறினார்கள்:உமக்கு முன்பாக (ஹள்ரத் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களுக்கு சமமாக) எனது கருத்தை கூறுவதை நான் விரும்பவில்லை.(ஆதாரம்:ஸுனனுத் தாரமி பக்கம்:45,பாகம்:1 தலைப்பு:باب التورع عن الجواب فيما ليس فيه كتاب و لا سنة ) 

இமாம் ஷுஅபி (ரஹ்) அவர்கள் முஜ்தஹித்.(இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் ஆசிரியர்)எனினும் தனது சிந்தனை,ஆய்வை விட ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களை தக்லீத் செய்வதை மிக விரும்பினார்கள்.

Friday, January 7, 2022

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்


தக்லீதின் படித்தரங்கள்

தொடர்:20

இரண்டாவது: ஆழ்ந்த அறிவாற்றல் உள்ள அறிஞர் (عالم متبحر) இவரைக் கொண்டு கருத்து இஜ்திஹாதின் (ஆய்வு செய்யும்) தரத்தை அடையாதவர் எனினும்,குர்ஆன் சுன்னாவின் ஞானங்களில் திறமையும்,ஆழ்ந்த அறிவும் பெற்று திகழ்பவர்.குறைந்தபட்சம் தமது மத்ஹபின் மஸாயில்களை நன்றாக ஆழ்ந்து படித்து பதியவைத்திருப்பவர்.மேலும் அதில் குறிப்பான ஆற்றலை பெற்றிருப்பார்.இவரின் தக்லீத் பொதுமக்களின் தக்லீதை விட்டு மாறுபட்டது.பின்வரும் விஷயங்களில் தனித்த தகுதிகள் இருக்கவேண்டும். 1)தனது இமாமின் மத்ஹபில் ஒரு விஷயத்தில் பல கூற்றுகள் இருந்தால் அதில் இணக்கத்தை ஏற்படுத்தும் அல்லது முன்னுரிமை கொடுக்கும் வழிமுறைகளை அறிந்திருக்கும் தகுதி இருப்பது. 2)எந்த மஸ்அலாவில் இமாமிடமிருந்து தெளிவான விளக்கம் இல்லையெனில் இமாமின் அடிப்படைகளுக்கு ஏற்ப சட்டங்களை ஆய்ந்தறிவது 3)கடுமையான சூழ்நிலைகளில்,நிர்பந்த நிலைகளில் தேவைகளுக்கு ஏற்ப சில சமயங்களில் மற்ற முஜ்தஹிதின் (ஆய்வாளரின்) சொல்லின் பேரில் பத்வா அளிப்பது.இதற்குரிய நிபந்தனைகள்,அடிப்படையான விதிகள் பத்வா நூல்களில் உள்ளது. 4)இமாமின் எதேனும் ஒரு சொல் தெளிவான,ஸஹீஹான ஹதீஸிற்கு மாற்றமாக உள்ளது.மேலும் அதற்கு எதிரான வேறு ஹதீஸ்களும் இல்லை.அத்துடன் இமாமின் சொல்லின் மீது உள்ளம் நிம்மதி பெறவில்லையெனில் இமாமின் சொல்லை விட்டு ஹதீஸின்படி அமல் செய்யலாம். இது குறித்து ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 
اذا وجد المتبحر فى المذهب حديثا صحيحا يخالف مذهبه فهل له أن يأخذ بالحديث و يترك مذهبه فى تلك المسألة؟ فى هذه المسألة بحث طويل و اطال فيها صاحب خزانة الروايات نقلا عن دستور المساكين فلنورد كلامه من ذلك بعينه 
ஆழ்ந்த அறிவாற்றல் உள்ள அறிஞருக்கு (عالم متبحر) தனது மத்ஹபிற்கு மாற்றமாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கிடைத்தால் அவர் ஹதீஸின் படி செயல்படுவதற்கும் அந்த மஸ்அலாவில் அவரின் மத்ஹபை விட்டுவிடுவதற்கும் அனுமதியுள்ளதா? இந்த மஸ்அலாவில் நெடிய ஆய்வு உள்ளது.'கஜானதுர் ரிவாயத்' ஆசிரியர் அவர்கள் தஸ்தூருல் மஸாகீன் அவர்களிடமிருந்து எடுத்தெழுதி இது குறித்து விரிவாக பேசியுள்ளார்.நாமும் இங்கு அதனை அப்படியே எடுத்தெழுதுகிறோம்..... இதன் பிறகு ஹள்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் இந்த மஸ்அலா குறித்து ஆய்வு செய்தவாறு கூறுகிறார்கள்: ஆழ்ந்த அறிவாற்றல் உள்ள அறிஞர் (عالم متبحر) அந்த மஸ்அலாவில் தனது மத்ஹபை விட்டுவிடுவது கூடாது என்பதாக ஒரு சாரார் கூறுகின்றனர்.
எனினும்,அதிகமான உலமாக்கள் அவருக்கு அனுமதி உண்டுஎன்கின்றனர்.எனினும்,இதில் நிபந்தனைகள் உண்டு.அதனை பேணுவது அவசியமாகும். 

1) அறிஞருக்கு முன்னால் கூறிய தகுதிகள் இருக்கவேண்டும். 

2)எந்த ஹதீஸின் பேரில் இமாமின் கூற்றை விடுகிறாரோ அந்த ஹதீஸ் அனைத்து அறிஞரிடத்திலும் ஆதாரப்பூர்வமாக இருக்கவேண்டும்.
ஏனெனில் சில சமயங்களில் ஏதேனும் ஹதீஸ் வலுவானதா? இல்லையா என்பதில் முஜ்தஹித்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்படும்.வலுவானது என்பவர் அமல் செய்வார்.பலகீனமானது என்பவர் அதனை விட்டுவிடுவார்.இந்த சமயத்தில் முஜ்தஹித் ஹதீஸை பலவீனம் என்பதாக கருதி விட்டுவிட்டார்.இதனால் ஆய்வாளராக இல்லாதவர் மத்ஹபை விட்டு விட்டு ஹதீஸை எடுத்து அமல் செய்வது சரியில்லை.
 
3) அந்த ஹதீஸிற்கு முரணாக குர்ஆன் வசனம் அல்லது வேறு ஹதீஸ் இருக்க கூடாது. 

4)அந்த ஹதீஸின் கருத்தானது தெள்ளத் தெளிவாக இருக்கவேண்டும். மனம் உவந்து ஏற்கும் வேறு கருத்து அதற்கு இருக்ககூடாது.ஏனெனில் சில சமயங்களில் ஒரு ஹதீஸில் பல்வேறு அர்த்தங்களுக்கு வாய்ப்பு உண்டு.முஜ்தஹித் ஆய்வில் ஒரு கருத்தை குறிப்பாக்கி இருப்பார்.இதனால் அவரின் மத்ஹப் ஹதீஸிற்கு மாற்றமாக உள்ளது என சொல்லப்படாது.இப்போது முகல்லித் (இமாமை பின்பற்றுபவர்) ஹதீஸின் வேறு கருத்தை தேர்ந்தெடுப்பது பொருத்தமில்லை.ஏனெனில் தக்லீத் என்பது மார்க்க சட்டங்களில் குர்ஆன்,ஹதீஸின்வழிகாட்டுதல்களில் பல்வேறு அர்த்தங்களுக்கு வாய்ப்புள்ள போது ஒரு அர்த்தத்தை தேர்வு செய்வதில் தனது புரிதலை புறந்தள்ளி எதேனும் ஆய்வாளரின் புரிதலின் மீது நம்பிக்கை கொள்வதற்கு சொல்லப்படும்.எனவே இந்த சமயத்தில் முஜ்தஹிதை தக்லீத் செய்தாலும் ஹதீஸிற்கு மாற்றமாக இருப்பதாக கூறப்படாது. 

5)இதே போன்று ஹதீஸின் பேரில் எந்த சொல்லை தேர்வு செய்தாலும் அது நான்கு மத்ஹபுகளின் இஜ்மாவிற்கு (ஒன்றுபடுதல்) மாற்றமாக இருக்க கூடாது.ஏனெனில் நான்கு மத்ஹபுகளை விட்டு வெளியே செல்வதால் குழப்பங்கள்,கெடுதிகள் உருவாகிவிடும்.
இது குறித்து முன்னால் சென்று விட்டது.

இந்த நிபந்தனைகளுடன் ஆழ்ந்த அறிவாற்றல் உள்ள அறிஞருக்கு (عالم متبحر) தனது இமாமின் சொல்லை விடுவது சரியானது.இது சம்பந்தமாக அறிஞர்களின் தெளிவான வழிகாட்டுதல்கள் உண்டு. ஷைகுல் இஸ்லாம் அல்லாமா நவவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் 
قال الشيخ ابو عمر و فيمن وجد من الشافعية حديثا يخالف مذهبه نظر أن كملت الات الاجتهاد فيه مطلقا أو فى ذلك الباب أو المسئلة كان له الاستقلال بالعمل به و أن لم يكمل و شق عليه مخالفة الحديث بعد أن بحث فلم يجد لمخالفته عنه جوابا شافيا فله العمل به إن كان عمل به أمام مستقل غير الشافعي و يكون هذا عذر له فى ترك مذهب أمامه هنا و هذا الذي قاله حسن متعين 
ஷைகு அபூஅம்ர் (ரஹ்) (இப்னுஸ்ஸலாஹ்) கூறுகிறார்கள்:ஷாபியி மத்ஹபை சார்ந்த அறிஞருக்கு அவரின் மத்ஹபிற்கு மாற்றமாக ஹதீஸ் கிடைத்தால் அவர் இஜ்திஹாதின் (ஆய்வின்) நிபந்தனைகள் பெற்றவரா அல்லது குறிப்பாக அந்த தலைப்பில் அல்லது குறிப்பாக அந்த மஸ்அலாவில் இஜ்திஹாதின் தகுதி அடைந்தவரா என பார்க்கப்படும்.அவ்வாறு இருந்தால் அவர் ஹதீஸின்படி அமல் செய்யமுடியும்.ஆனால்,அதில் இஜ்திஹாதின் நிபந்தனைகள் முழுமைபெறவில்லை....... ஆனால் முழுமையாக ஆராய்ந்த பிறகும் ஹதீஸிற்கு திருப்தியான பதில் கிடைக்கவில்லை.அந்த ஹதீஸிற்கு மாற்றமாக இருப்பது தெரிந்தால் அவர் ஹதீஸின் பேரில் அமல்செய்யமுடியும்.எனினும்,இமாம் ஷாபியி அல்லாமல் வேறு தனித்த இமாம் அதனை அமல் செய்திருக்க வேண்டும்.ஏனெனில் அவர் தனது இமாமின் மத்ஹபை (அந்த மஸ்அலாவில்) விடுவதற்கு தகுந்த காரணமாகிவிடும்.(அல்லாமா நவவி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்) ஷைகு அபூஅம்ர் (இப்னுஸ்ஸலாஹ்) அவர்கள் கூறியது நல்ல விஷயமாகும்.அதன் பேரில் அமல் செய்யலாம். (ஆதாரம்:அல்மஜ்மூஉ ஷரஹுல் முஹத்தப் 1/105) ஹழ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களும் இதனை தேர்ந்தெடுத்துள்ளார்கள். 
 المختار ههنا قول ثالث هو ما اختاره ابن الصلاح و تبعه النووى و صححه 
இந்த மஸ்அலாவில் பொருத்தமானது மூன்றாவது சொல் அதனை இப்னுஸ் ஸலாஹ் (ரஹ்) அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.அல்லாமா நவவி (ரஹ்) அவர்களும் அதனையே பின்பற்றினார்கள்.அதனையே சரியானது என்பதாக கூறினார்கள்.(ஆதாரம்:இக்துல் ஜீத் பக்கம்:57)