Sunday, January 9, 2022

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்

 

தக்லீதின் படித்தரங்கள்

தொடர்:21


மூன்றாவது:மத்ஹபில் முஜ்தஹித் (المجتهد فى المذهب ) 

இஜ்திஹாதின் தரத்தை அடையாதவர்.ஆதாரங்களை எடுப்பதிலும்,அடிப்படை கோட்பாடுகளிலும் அவரின் இமாமான முஜ்தஹிதின் வழிமுறையில் நிலைத்திருப்பார்.ஆனாலும் அடிப்படை விதிகளுக்கு கீழ் கிளைச் சட்டங்களில் நேரடியாக     குர்ஆன்,                     சுன்னா,
ஸஹாபாக்களின் வழிமுறைகள் போன்றவைகளில் ஆராயும் ஆற்றல் பெற்றிருப்பார். இத்தகைய     அறிஞர், முஜ்தஹித்களிடத்தில் கிளைச் சட்டங்களில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் கொண்டிருப்பார்கள்.
ஆனாலும் அடிப்படை விதிகளை கவனித்து இமாமை பின்பற்றுபவர் என்பதாகதான்  அழைக்கப்படுவார்.
உதாரணமாக ஹனபி (ரஹ்) மத்ஹபில் இமாம் அபூயூசுப் (ரஹ்) அவர்கள்,இமாம் முஹம்மது (ரஹ்) அவர்கள்.ஷாபியி (ரஹ்) மத்ஹபில் இமாம் முஜ்னி (ரஹ்) அவர்கள்,இமாம் அபூஸவ்ர் (ரஹ்) அவர்கள்.மாலிக் (ரஹ்) மத்ஹபில் ஸஹுன் (ரஹ்) அவர்கள்,இப்னுல் காஸிம் (ரஹ்) அவர்கள்.அஹ்மத் (ரஹ்) மத்ஹபில் இப்ராஹீமுல் ஹரபி (ரஹ்) அவர்கள், அபூபக்கர் அல்அஸ்ரம் (ரஹ்) அவர்கள்.

அல்லாமா இப்னு ஆபிதீன் ஷாமி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
الثانية طبقة المجتهدين فى المذهب كابى يوسف و محمد و سائر اصحاب أبى حنيفة رح القادرين على استخراج الأحكام عن الأدلة المذكور على حسب القواعد التى قررها استاذهم فإنهم و أن خالفوه فى بعض احكام الفروع و لكنهم يقلدونه فى قواعد الأصول 
புகஹாக்களின் இரண்டாவது சாரார்கள்  மத்ஹபில் முஜ்தஹித்கள் (المجتهد فى المذهب)உதாரணமாக இமாம் அபூயூசுப் (ரஹ்) அவர்கள்,இமாம் முஹம்மது (ரஹ்) அவர்கள்,இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் மற்ற மாணவர்கள் மேற்கூறப்பட்ட ஆதாரங்களிலிருந்து (குர்ஆன்,சுன்னா,இஜ்மா,கியாஸ்) அவர்களின் ஆசிரியர் நிர்ணயித்த விதிகளுக்கு ஏற்ப சட்டங்களை ஆய்ந்து அறியும் ஆற்றல் பெற்றவர்கள்.இதனால் தங்களது இமாமிடத்தில் கிளைச்சட்டங்களில் அதிகமான கருத்து வேறுபாடுகொண்டு            இருப்பார்கள்.
எனினும்,அடிப்படை விதிகளில் அவர்கள் இமாமை பின்பற்றுபவர்களாக தான் கருதப்படுவார்கள்.

நான்காவது: முஜ்தஹித் முத்லக் (المجتهد المطلق) 
இது உயர்ந்த நிலையாகும்.அறிஞர் முஜ்தஹிதாக இருப்பார்.எனினும் சில சமயங்களில் தக்லீத் செய்வார்.எந்த மஸ்அலாவில் குர்ஆனில் அல்லது ஆதாரப்பூர்வமான சுன்னாவில் தெளிவில்லாத போது தனது கியாஸ் (ஒப்பீடு) மற்றும் ஆய்வின் மூலம் அமல் செய்வதற்கு பதிலாக ஸஹாபாக்கள் அல்லது தாபியீன்களின் கூற்றுகளை தேடுவார்கள்.அவைகள் கிடைக்கப்பெற்றால் அதனை தக்லீத் செய்வார்.இது குறித்து முதல் நூற்றாண்டின் சான்றுகள்.
كان ابن عباس إذا سئل عن الأمر فكان فى القرآن أخبر به و إن لم يكن فى القرآن و كان عن رسول الله صلى الله عليه وسلم أخبر به فإن لم يكن فعن أبى بكر وعمر فإن لم يكن قال فيه برأيه 
இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களிடத்தில் எதேனும் விஷயத்தை குறித்து கேட்கப்பட்டால் குர்ஆனில் இருந்தால் அதற்கு ஏற்ப பதில் தருவார்கள்.குர்ஆனில் இல்லையெனில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவிற்கு ஏற்ப பதில் தருவார்கள்.சுன்னாவில் இல்லையெனில் ஹள்ரத் அபூபக்கர் (ரளி) அவர்கள்,ஹழ்ரத் உமர் (ரளி) அவர்களின் வழிமுறைக்கு ஏற்ப பதில் தருவார்கள்.அவ்வாறு இல்லையெனில் தனது ஆய்வு,சிந்தனையின் மூலம் பதில் தருவார்கள்.(ஆதாரம்:ஸுனுத்தாரமி 1/55 தலைப்பு:باب الفتيا و ما فيه من الشدة )
ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் முஜ்தஹித்.எனினும்,தனது ஆய்வின் மூலம் பதிலளிக்காமல் ஹள்ரத் அபூபக்கர் (ரளி) அவர்கள்,ஹழ்ரத் உமர் (ரளி) அவர்களின் வழிமுறையை தக்லீத் செய்து பதில் அளித்துள்ளார்கள்.

ஸுனனுத்தாரமியில் வரும் மற்றோரு அறிவிப்பின் கருத்து:இமாம் ஷுஅபி (ரஹ்) அவர்களிடத்தில் ஒரு மனிதர் வந்து மஸ்அலா கேட்டார்.அதற்கு இமாம் அவர்கள் ஹள்ரத் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களின் கூற்றின் மூலம் பதில் தந்தார்கள்.அந்த மனிதர் உங்களின் கருத்து என்ன? என்பதாக கேட்டார்கள்......இறுதியாக கூறினார்கள்:உமக்கு முன்பாக (ஹள்ரத் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களுக்கு சமமாக) எனது கருத்தை கூறுவதை நான் விரும்பவில்லை.(ஆதாரம்:ஸுனனுத் தாரமி பக்கம்:45,பாகம்:1 தலைப்பு:باب التورع عن الجواب فيما ليس فيه كتاب و لا سنة ) 

இமாம் ஷுஅபி (ரஹ்) அவர்கள் முஜ்தஹித்.(இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் ஆசிரியர்)எனினும் தனது சிந்தனை,ஆய்வை விட ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களை தக்லீத் செய்வதை மிக விரும்பினார்கள்.

No comments:

Post a Comment