Saturday, December 29, 2018

குர்ஆன்,ஹதீஸ்களின் ஒளியில் ஹனஃபி தொழுகை முறை

ஹனபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன் ஹதீஸின் ஒளியில்

அல்லாஹ்வின் கிருபையால் ஹிதாயா நூலின் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்குரிய சுருக்கமான பதில்களை ஐந்து தொடர்களில் பார்த்தோம்.அதனை வாசித்த வாசகர்களுக்கு ஹிதாயா நூலின் மேன்மையும்,உயர்வும், மதிப்பும் புரிந்திருக்கும் என ஆதரவு வைக்கிறோம.இனி அடுத்து ஹனஃபி தொழுகை முறை குறித்து குர்ஆன் ஹதீஸின் ஒளியில் தொடராக பார்ப்போம்!

ஹனஃபிகள் ஷரீஅத்தின் ஆதாரங்களின் ஒளியில் மாபெரும் இறைவணக்கமான தொழுகையை நிறைவேற்றுகிறார்கள்.எனினும்,
ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறைக்கு ஆதாரம் இல்லை என்பதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.உண்மையில் ஹனஃபி மத்ஹபின் சட்டங்கள் குர்ஆன் ஹதீஸிற்கு மிக நெருக்கமானது.தொழுகையின் அனைத்து நிலைகளுக்கும் ஆதாரங்கள் உண்டு என்பதை இன்ஷா அல்லாஹ் நிரூபிப்போம்! ஆனால் இந்த ஆய்வில் ஹனஃபி மத்ஹபின் தொழுகையில் உள்ள விமர்சனத்திற்குள் செல்லப்போவதில்லை.ஹனஃபி மத்ஹபின் ஆதாரங்கள் மீதுள்ள விமர்சனத்திற்கு பதில்களை அடுத்த ஆய்வில் விரிவாக பார்ப்போம்!

ஹனபி தொழுகை முறை 

தொழுகைக்கு நிய்யத் அவசியம் 

தொழுகையில் நிய்யத் என்பது கடமையாகும்.நிய்யத்தின்றி தொழுகை நிறைவேறாது.

يَقُولُ : سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ  عَلَى الْمِنْبَرِ  يُخْبِرُ بِذَلِكَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ :  " إِنَّمَا  الأَعْمَالُ بِالنِّيَّاتِ

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்:அமல்கள் நிய்யத்தின் பேரில் அமைந்துள்ளது.(ஆதாரம்:புகாரி)

கிப்லாவை முன்னோக்குதல் 

فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ

மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும்.(அல்பகரா)

قال عبد الله صلى النبي صلى الله عليه وسلم قال إبراهيم لا أدري زاد أو نقص فلما سلم قيل له يا رسول الله أحدث في الصلاة شيء قال وما ذاك قالوا صليت كذا وكذا فثنى رجليه واستقبل القبلة

 'நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை தொழுதார்கள் - கூட்டினார்களா குறைத்தார்களா என்பது எனக்குத் தெரியாது' என இப்ராஹீம் கூறுகிறார் - தொழுகையை முடித்து ஸலாம் கூறியதும் 'இறைத்தூதர் அவர்களே! தொழுகையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா?' என்று கேட்கப்பட்டது. 'அது என்ன (அப்படியென்றால் என்ன)?' என்று நபி(ஸல்) கேட்டதும், 'நீங்கள் இப்படியல்லவா தொழுதீர்கள்' என அங்கிருந்தவர்கள் கூறினார்கள். (நீட்டியிருந்த) தங்களின் கால்களை நபி(ஸல்) மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் ஸலாம் கூறினார்கள்.(ஆதாரம்:புகாரி)

தொழுகையில் நிலை நிற்பது 

وقوموا لله قانتين

அல்லாஹ்தஆலா கூறுகிறான்:அல்லாஹ்விற்கு பணிந்தவர்களாக நில்லுங்கள்! (சூரா பகரா 238)

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : كَانَتْ بِي بَوَاسِيرُ فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الصَّلاةِ ، فَقَالَ : ( صَلِّ قَائِمًا ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا

இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். 

எனக்கு மூலம் இருந்தது. எவ்வாறு தொழுவது என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ நின்று தொழு இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு. அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு' என்று விடையளித்தார்கள்.(புகாரி,திர்மிதி,நஸயீ,இப்னு மாஜா அபூதாவூத்)

தக்பீர் தஹ்ரீமா கடமை

وَرَبَّكَ فَكَبِّرْ

மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.(அல்முத்தஸ்ஸிர்)

وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰى‌ ؕ‏ 

மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.(அல்அஃலா)

عن علي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: (مفتاح الصلاة الطهور، وتحريمها التكبير

ஹஜ்ரத் அலி ரளி அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை அறிவிக்கிறார்கள்:தொழுகையின் ஆரம்பம் தக்பீர் (ஆதாரம்:அபூதாவூத்,திர்மிதி, தாரமி)

عَائِشَةَ رضي الله عنها قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتَفْتِحُ الصَّلاةَ بِالتَّكْبِيرِ

(நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறித் தொழுகையைத் துவக்குவார்கள்;(ஆதாரம்:முஸ்லிம்)

سمعت أبا حميد الساعدي يقول كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة استقبل القبلة ورفع يديه وقال الله أكبر

ஹஜ்ரத் அபூஹுமைத் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்கு நிற்கும் போது கிப்லாவை முன்னோக்குவார்கள்.அவரது இருகைகளை உயர்த்தி அல்லாஹு அக்பர் கூறுவார்கள்.(இப்னுமாஜா,ஆஸாருஸ்ஸுனன்)

தக்பீரின் போது ஆண்கள் காதுவரை கைகளை உயர்த்துதல்

عَنْ  مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ  ، " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، كَانَ إِذَا  كَبَّرَ ، رَفَعَ يَدَيْهِ ، حَتَّى يُحَاذِيَ بِهِمَا أُذُنَيْهِ

மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில் ஆரம்பத்) தக்பீர் சொல்லும்போதும், ருகூஉ செய்யும்போதும் தம்மிரு கைகளையும் தம் காதுகளுக்கு நேராக உயர்த்துவார்கள்.(ஆதாரம்:முஸ்லிம்)

தக்பீரின் போது பெண்கள் மார்பு வரை கையை உயர்த்துதல்



وعن وائل بن حجر قال : قال لي رسول الله - صلى الله عليه وسلم - : " يا وائل بن حجر إذا صليت فاجعل يديك حذاء أذنيك ، والمرأة تجعل يديها حذاء ثدييها " .

ஹள்ரத் வாயிள் இப்னு ஹுஜ்ர் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு கூறினார்கள் 'நீர் தொழுகும் போது உமது கைகளை காதுக்கு நேராக உயர்த்தி கொள்' பெண் அவளது கைகளை மார்பிற்கு நேராக ஆக்கி கொள்ளட்டும் (கன்ஜுல் உம்மால்)

ஹஜ்ரத் உம்முதர்தா (ரளி) ஹஜ்ரத் அதா (ரஹ்) ஹஜ்ரத் ஹம்மாத் (ரஹ்) போன்றவர்களிடமிருந்து இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது.பெண் அவளது கைகளை நெஞ்சுவரை உயர்த்திக் கொள்வாள் (ஆதாரம்:முஸன்னஃப் இப்னு அபீஷைபா) 

நிலை நிற்கும் போது வலது கையை இடது கையின் மீது வைத்தல் 

عن وائلِ بنِ حُجرٍ: ((أنَّه رأى النبيَّ صلَّى اللهُ عليه وسلَّم رفَعَ يَدَيه حين دخَلَ في الصَّلاةِ كبَّرَ- وصَفَّ همَّامٌ حِيالَ أذُنَيه- ثم التحَفَ بِثَوبِه، ثم وضعَ يَدَه اليُمنى على اليُسرى

வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பித்தபோது தம்மிரு கைகளையும் உயர்த்தித் தக்பீர் கூறியதை நான் பார்த்தேன்.

-இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம் (ரஹ்) அவர்கள் இரு காதுகளுக்கு நேராக என்று விவரித்தார்கள்.-

பின்னர் தமது ஆடையால் (இரு கைகளையும்) மூடி இடக் கையின் மீது வலக் கையை வைத்தார்கள்.(ஆதாரம்:முஸ்லிம்)

عن وائل بن حجر رضي الله عنه قال: رأيت النبي ﷺ إذا كان قائما في الصلاة يضع يده اليمنى على كفه اليسرى

ஹஜ்ரத் வாயில் இப்னு ஹுஜ்ர் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் தொழுகையில் நிற்கும் போது வலது கையை இடதுகையின் மீது வைத்து பிடித்துக்கொள்வார்கள் இதனை நான் பார்த்தேன்.

عن قبيصة بن هلب عن أبيه قال كان النبي صلى الله عليه وسلم يؤمنا فيأخذ شماله بيمينه

ஹஜ்ரத் ஹுல்ப் ரளி அறிவிக்கிறார்கள்   நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் வலது கையைக் கொண்டு இடது கையை பிடித்தவாறு எங்களுக்கு இமாமத் செய்தார்கள் (ஆதாரம்:திர்மிதி,இப்னு மாஜா) 

سهل بن سعد قال: كان الناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة قال أبو حازم لا أعلمه إلا ينمي ذلك إلى النبي الله ﷺ قال إسماعيل ينمي ذلك ولم يقل ينمي

ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார்கள்:


தொழும்போது ஒருவர் தம் வலக் கையை இடது குடங்கை மீது வைக்க வேண்டுமெனக் கட்டளையிடப் பட்டிருந்தார்கள். 

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ ஹாஸிம் 'இவ்வாறு ஏவியது நபி(ஸல்) அவர்கள் என்று கருதுகிறேன்' என்றார்.(ஆதாரம்:புகாரி) 

( ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى وَالرُّسْغِ وَالسَّاعِدِ )

ஹஜ்ரத் வாயில் இப்னு ஹுஜ்ர் ரளி அவர்கள் கூறுகிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது வலதுகையை இடதுகை,மணிக்கட்டு, முன்னைங்கையின் மீது வைத்தார்கள் இதனை நான் பார்த்தேன்.(ஆதாரம்:அபூதாவூத்,நஸாயீ,முஸ்னத் அஹ்மத்)

       இன்ஷா அல்லாஹ் தொடரும்

Monday, December 24, 2018

ஹனபி பிக்ஹ் ஹிதாயா நூலும் நமது பதிலும் 5


ஹனஃபி பிக்ஹ் ஹிதாயா நூலும் நமது பதில்களும் தொடர் 5

 ஹிதாயா நூலில் உள்ள புரிதல்கள்

ஹிதாயா ஆசிரியர் எழுதியுள்ள ஹதீஸ்களில் பெரும்பாலும் அதனின் கருத்தை எழுதுவது இதற்கு ' ரிவாயத் பில் மஅனா' என்று சொல்லப்படும்.இது தவறொன்றும் இல்லை.மார்க்க அறிஞர்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். ஹதீஸ்கலை நூல்களில் இது குறித்து விரிவான விளக்கங்கள் உண்டு.


(1) அன்னார் ஹதீஸ் நூல்களை முன்னால் வைத்து எழுதவில்லை.இதனால் முழு ஹதீஸை எழுதவில்லை.தேவையான ஹதீஸின் பகுதியை மட்டும் எழுதியிருப்பார்கள்.

(2)அன்னார் பயன்படுத்திய வாக்கியமானது இரு ஹதீஸ்களில் இணைந்திருக்கும்.

(3)அன்னார் ஹதீஸ்களுக்கு முன்னால் قوله عليه السلام இது ஹதீஸில் ஒரு பகுதியை மட்டும் குறிக்கும்.

(4)அன்னார் ஹதீஸ் என்பதாக கூறியிருப்பார்.எனினும்,ஆய்வு செய்து பார்க்கும் பொழுது,ஸஹாபி மற்றும் தாபியின் சொல்லாக உள்ளது.ஹதீஸ் இல்லையென்றாலும் ஸஹாபியின் தாபியின் கூற்றுகளும் ஆதாரம்தான்.முற்றிலும் அடிப்படையே இல்லை என கூறமுடியாது.

(5)ஹதீஸில் இல்லாத வார்த்தையை எழுதியிருப்பார்.எனினும்,அதற்கு நிகரான பொருத்தமான வேறு வார்த்தையை எழுதியிருப்பார்.இதனையும் அடிப்படையே இல்லை என கூறமுடியாது.
(6)அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் என கூறியிருப்பார்.ஆனால் தேடிப் பார்த்தால் வேறு ஸஹாபியின் சொல்லாக இருக்கிறது.எனவே இதனையும் அடிப்படையே இல்லை என கூறமுடியாது.


இரண்டாவது குற்றச்சாட்டும் பதிலும்

(2)ஹிதாயா நூலில் ஆபாசமான சட்டங்கள் 
இந்த குற்றச்சாட்டும் ஹனஃபி மத்ஹபின் மீதுள்ள குரோதமும் விரோதமும் ஹதீஸின் ஞானம் குறித்த அறியாமை தான் காரணமாகும்.ஹதீஸ் நூல்களில் கடமையான குளிப்பு,தூய்மை, மாதவிடாய்,பிரசவத்தீட்டு  குறித்த சட்டங்கள் உண்டு.எனவே 
இனிமேல் பிக்ஹ் குறித்து மட்டும் விமர்சிக்காமல் ஹதீஸ் குறித்தும் விமர்சிக்க வேண்டியதுதானே?

மூன்றாவது குற்றச்சாட்டும் பதிலும்

(3)ஹிதாயாவில் கற்பனையான சட்டங்கள் 
  இந்த குற்றச்சாட்டும் உண்மையை மறுப்பதற்கு நிகராகும்.ஏனெனில் புகஹாக்கள் (மார்க்க விற்பன்னர்கள்) மார்க்க சட்டங்களை ஆய்ந்து,ஆய்வு செய்து கூறியுள்ளனர்.இன்று அது போன்ற நவீன பிரச்சனைகளுக்குரிய தீர்வு தேவைப்படுகிறது.

பிக்ஹ்  சட்டம் :கிளியானது ஸஜ்தா வசனத்தை ஓதுகிறது.அதனை கேட்பவர் மீது ஸஜ்தா செய்வது கடமையில்லை.இன்று தொலைக்காட்சியில்  ஸஜ்தா வசனத்தை செவியுற்றால் என்ன 
சட்டம் என்பதற்குரிய தீர்வு எளிதாக கிடைத்துவிடுகிறது.

மற்றொரு பிக்ஹ் சட்டம்: 
இரண்டு பேர் வியாபார ஒப்பந்தம் செய்கிறார்கள்.அவ்விருவருக்கும் மத்தியில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தாலும் அந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும்.இன்று வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் உள்ள பொருளை வாங்கிவிடலாம் என்ற 
ஆன்லைன் வர்த்தகத்திற்கு தீர்வு கிடைத்துவிடுகிறது.


நான்காவது குற்றச்சாட்டும் பதிலும்

(4)ஹிதாயாவில் குர்ஆன்,ஹதீஸிற்கு மாற்றமான சட்டங்கள் 
   இது பொய்யான வாதமாகும்.இதனை குறித்து தனியானதொரு தலைப்பில் விளக்குவோம்.


ஐந்தாவது குற்றச்சாட்டும்  பதிலும்

(5)ஹிதாயா நூலில் அறிவிப்பாளர் தொடர் இல்லை 
இது குறித்து அறிய நமது தளத்தின் பின்வரும் லிங்கை பார்வையிடவும்.
https://difaeaslaf.blogspot.com/2018/12/blog-post_9.html?m=1


ஆறாவது குற்றச்சாட்டும் பதிலும்

(6)ஹனஃபி உலமாக்கள் ஹிதாயா ஆசிரியர் மீது குற்றம்சுமத்தியுள்ளனர்

ஹனஃபி உலமாக்கள் அன்னார் தவறுகளுக்கு அப்பாற்ப்பட்டவர் இல்லை என்பதை தான் கூறியுள்ளார்கள்.எனினும்,மத்ஹப் மறுப்பாளர்கள் போன்று பொய்யர் என்பதாக இழிவுப்படுத்தும் விதமாக விமர்சிக்கவில்லை.இழிவுப்படுத்துதல் வேறாகும். விமர்சனம்  வேறாகும்.நமது அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.ஆனால் அவர்களோ இழிவுப்படுத்தியுள்ளனர்.


மத்ஹப் மறுப்பாளர்களிடத்தில் நாம் தொடுக்கும் வினாக்கள்


(1) ஹிதாயா ஆசிரியர் மனிதர் எனும் அடிப்படையில் தவறுகள் நிகழ்ந்துள்ளதை பொய் என்பதாக சித்தரிக்கலாமா? முழு நூலையும் நிராகரிப்பது நியாயமா?

(2) இதே போன்று குற்றம் சுமத்தினால் அனைத்து ஹதீஸ் நூல்களையும் நிராகரிக்கவேண்டும் தயாரா? புகாரி,முஸ்லிம் நூல்கள் கூட தப்பிக்க முடியாது.

(3)முஸன்னஃப் இப்னு அபிஷைஃபா,முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக்,முஸ்தத்ரக் ஹாகிம்,தப்ரானி கபீர்,தப்ரானி அவ்ஸத்,தப்ரானி ஸஙீர்,முஸ்னத் அஹ்மத்,மஜ்மஉஜ்ஜவாயித்,
கன்ஜுல் உம்மால் போன்ற நூல்களில் பலகீனமான ஹதீஸ்கள் பொய்யான ஹதீஸ்கள் உள்ளதா இல்லையா? ஹனஃபி பிக்ஹ் நூல்களில் மட்டும் விரோதமும் குரோதமும் ஏன்?


(4)இமாம் புகாரி (ரஹ்) அவர்களை குறித்து ஹதீஸ்கலையில் 'முஃமீன்களின் தலைவர் ' என போற்றப்பட்டுள்ளது.எனினும், இமாம் இப்னு அபூஹாதம் ராஜி அவர்கள் 'பயானு ஹத் முஹம்மத் இப்னு இஸ்மாயில் புகாரி ஃபி தாரிகிஹி' என்ற நூலில் புகாரி (ரஹ்) அவர்களின் வரலாற்று நூலில் உள்ள தவறுகளை பட்டியலிட்டுள்ளார்.இந்நூலில் இப்னு அபூஹாதம் ராஜி அவர்கள் அபூஜுர்ஆ ராஜி,அபூஹாதம் ராஜி இருவரின் அனைத்து விமர்சனங்களையும் ஒன்று சேர்த்துள்ளார்.இதனால் நிறை குறை எடைபோடும் துறையில் (ஜர்ஹு தஃதீல்) புகாரி (ரஹ்) அவர்களின் அனைத்து தகவல்களையும் பொய் என கூறி தூக்கி எறியத்தாயாரா?

(5)இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் எந்த அறிவிப்பாளர் வரிசையும் இல்லாமல் ஹதீஸ்களை கூறுவார்.இதற்கு 'முஅல்லக்' என்று சொல்லப்படும்.ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் 'பஹ்ஹுல் பாரியில்' முஅல்லக் அனைத்தையும் தேடி எழுதிவிட்டார்களா? இதனால் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் நபியின் மீது இட்டுகட்டியுள்ளார் என கூற தயாரா?

(6)இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் திர்மிதி நூலில் தலைப்பின் கீழ் ஹதீஸ்கள்,ஸஹாபாக்களின் வழிமுறைகள் குறித்து அறிவிப்பாளர் தொடரின்றி கூறியுள்ளார்.அனைத்தையும் அறிவிப்பாளர் தொடருடன் உங்களால் ஒன்று சேர்க்கமுடியுமா? இல்லையெனில் மாநபியின் மீது பொய்யுரைத்த திர்மிதி நூல் ஆசிரியர் என்ற தலைப்பில் மறுப்பளிக்க தயாரா?

(7)பெரும் ஹதீஸ்கலை வல்லுநர்கள் ஹிதாயா நூலில் உள்ள ஹதீஸ்களை பல்வேறு அறிவிப்பாளர்களின் தொடருடன் 1000 ஹதீஸ்களை ஒன்றுதிரட்டிட்யுள்ளனர்.மத்ஹப் மறுப்பாளர்களுக்கு தெரியவில்லையா? கண்கள் குருடாகி விட்டதா?

முக்கிய அறிவிப்பு:ஹிதாயா நூலின் மீது எழுந்த அடிப்படையான வாதத்திற்கு தொடராக மறுப்பளித்தோம்.
    அடுத்து ஹனஃபி தொழுகை முறை குறித்து ஆதாரங்களுடன் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் பார்ப்போம்! ஹிதாயா நூல் மற்ற பிக்ஹ் நூல்களில் உள்ள குற்றச்சாட்டுகளுக்குரிய பதில்களை தொடராக இன்ஷா அல்லாஹ் பிறகு பார்ப்போம்!




Thursday, December 20, 2018

ஹனபி பிக்ஹ் ஹிதாயா நூலும் நமது பதிலும் 4


ஹிதாயா நூல் குறித்து சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளும் பதில்களும் தொடர் 4

ஹிதாயா ஆசிரியருக்கும்
மனிதர் எனும் அடிப்படையில்  தவறுகள்,கவனக்குறைவு நிகழ்ந்துள்ளது.தவறுகளுக்கும், தடுமாற்றங்களுக்கும் அப்பாற்ப்பட்டவர் உலகில் யாரும் இருக்க முடியாது.மிகப்பெரும் இமாம்கள், ஹதீஸ்கலை வல்லுநர்கள்,கல்வியின் கடல்,சிகரம்,நினைவாற்றலில் உச்சம் என்று போற்றப்பட்ட அறிஞர்களுக்கும் கூட தவறுகள் தடுமாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. ஆனால் மத்ஹப் மறுப்பாளர்கள்,ஹிதாயா ஆசிரியர் பொய்யாக புனைந்ததாக, இட்டுகட்டியதாக சித்தகரிக்கின்றனர்.வரம்பு மீறி விமர்சிக்கின்றனர்.

குர்ஆன்,ஹதீஸில் விளையாடியவர்கள்,ஹதீஸை புரட்டியவர்கள் வளைத்தவர்கள்
போலி தவ்ஹாதிகள்.இவர்களுக்கு ஹிதாயா நூலை விமர்சிக்க அருகதை உள்ளதா? தகுதி உள்ளதா?

ஹனஃபி மத்ஹபின் சில  சட்டங்களுக்கு பலகீனமான ஹதீஸ்களை ஹிதாயா ஆசிரியர் கொண்டு வந்துள்ளார்.எனினும், இதனால் ஹனஃபி மத்ஹபின் சட்டங்கள்  தவறாகி விடாது.ஏனெனில் அந்த சட்டங்களுக்கு பலமான ஆதாரங்களும் உண்டு.(இதனை குறித்து பிறகு இன்ஷா அல்லாஹ் விளக்குவோம்!)

ஹிதாயா நூல் ஆசிரியரின் நிர்பந்தத்தை புரிந்து கொண்டால் மார்க்க சட்டங்களில் அன்னார் செய்த சேவைகளும் சாதனைகளும் நமக்கு புரிந்துவிடும்.

ஹிதாயா ஆசிரியரின் நிர்பந்தம்


ஹிதாயா ஆசிரியர் பதிவு செய்துள்ள ஹதீஸ்கள் அதிகமாக ஸுனன் பைஹகி,முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக், முஸன்னஃப் இப்னு அபிஷைஃபா, தப்ரானி கபீர் போன்ற நூல்களில் உள்ளது.இதில் ஹதீஸ் கிரந்தங்கள்
12 பாகங்கள் கொண்டதும் உள்ளது.
24 பாகங்கள் கொண்டதும் உள்ளது.அந்நூல்களில் ஒன்று,
அர்தன் நாட்டில் இருக்கும்.
மற்றொன்று,மிஸ்ர் நாட்டில் இருக்கும்.மற்றொன்று,சவூதி அரேபியாவில் இருக்கும்.
மற்றொன்று,ஈராகில் இருக்கும்.அதுமட்டுமின்றி அனைத்தும் கையெழுத்துப் பிரதிகளாகும்.அதனை வாசிப்பது கூட கடினமான கலையாகும்.அந்த சமயத்தில் அச்சகங்களும் இல்லை.அறிஞர்கள் ஹதீஸ்களை கையால் எழுதி வைத்திருப்பார்கள்.  அதுமட்டுமின்றி, பெரும் நூல்களை கையால் எழுதுவது சாதாரணமான ஒன்றல்ல.கடும் சவாலான பணியாகும்.அத்துடன் அனைத்து ஹதீஸ் நூல்களும் ஒரே ஆசிரியரிடத்தில் ஒன்று சேர்ந்திருப்பது நடக்க இயலாத ஒன்றாகும்.அதனை தேடுவதும் கடினமானது.இதனால் தான் ஹிதாயா ஆசிரியரால் ஆதாரங்களை குறிப்பிடமுடியவில்லை. பின்ணனியை ஆராயாமல் ஹிதாயா ஆசிரியர் மீது களங்கம் கற்பிக்கின்றனர்.ஆனால் நம் காலத்தில் இணையம் வளர்ச்சியடைந்துவிட்டது.
பைரோத்தில் அச்சிடப்பட்டு அனைத்து நூல்களும் நமக்கு முன்னால் உள்ளது.ஒவ்வொரு ஹதீஸிலும் இலக்கம் உள்ளது.கணினியில் இலக்கத்தை தேடினால் எளிதாக கிடைத்துவிடும்.ஹதீஸின் முதல் பகுதியை எழுதி தேடினால் முழு ஹதீஸும் கிடைத்துவிடும்.இதனையும் தாண்டி தவறுகள் ஏற்பட்டுவிடும் போது ஹிதாயா ஆசிரியருக்கு தவறுகள் ஏற்படுவது இயல்புதானே இதனை பொய்யாக விமர்சிப்பது ஏற்புடையதா? அறிவுடமையா?

மத்ஹப் மறுப்பாளர்களின் நிலை

நோன்பு திறக்கும் போது 'அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து' என்ற துஆ பலகீனமானது என்பதாக கூறி 'தஹபள்ளமவு' என்ற துஆ ஓத வேண்டும் என்று கூறினார்.இதனை நடைமுறைப்படுத்தினர்.
பல ஆண்டுகள் கழிந்த பிறகு இதனையும் பலகீனம் என்பதாக கூறி நிலைப்பாட்டை மாற்றிவிட்டனர்.அதற்கு கூறும் காரணத்தைப் பாருங்கள்!


//தஹபள்ளமவு… என்று ஆரம்பிக்கும் துஆ

இந்த நிலையில் நோன்பு துறக்கும்போது, தஹபள்ளமவு.. என்று தொடங்கும் துஆவைஓதுவது நபிமொழி என்றுநாம் கூறினோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அபூதாவூத், ஹாகிம்,பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று நாம்கூறினோம். நமது உரைகளிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் இதைத் தெரிவித்தோம்.

எதன் அடிப்படையில் இதை நாம் ஆதாரமாக ஏற்றோம் என்பதை முதலில்கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

இந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள்பதிவு செய்து விட்டுப் பின்வருமாறுகூறுகின்றார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரானமர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்துஅறிவிக்கும் ஹுஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி,முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்றுகுறிப்பிடுகின்றார்.

ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், மர்வான்பின் ஸாலிம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள்.

மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியில் இடம் பெற்றுள்ளார் என்றுஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் நாமும் இதைவழிமொழிந்தோம்.

இமாம் புகாரி ஒருவரை ஆதாரமாகக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான்ஏற்பார். பலவீனமானவர்களையோ, யாரென்றுஅறியாதவர்களையோ அவர்கள் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலானஅறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர்விமர்சனம் செய்திருந்தாலும் அதில்பெரும்பாலானவற்றுக்குப் பதிலும்அளிக்கப்பட்டுள்ளது.

ஹாகிம், தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம்பெற்றவர் என்று கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று கூறினோம்.

மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில்அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள்.

ஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறுஆய்வில் தெரிய வந்துள்ளது. மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும்எந்த ஹதீஸும் புகாரியிலும் முஸ்லிமிலும் இல்லை.

ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி, முஸ்லிம்நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம் பெற்றுள்ளது.மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லை. மர்வான்அல்அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர்தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள்கூறுவது மறு ஆய்வின்போது நமக்குத் தெரிய வருகின்றது.//

உண்மையில் ஆய்வு செய்பவராக இருந்திருந்தால், புகாரி முஸ்லிம் அறிவிப்பாளரா? என்று தேடிப் பார்த்திருக்க வேண்டும்! தக்லீத் என்பது கண்மூடித்தனமாக பின்பற்றுவது என்பதாக விமர்சிக்கும் தகுதி இவர்களுக்கு உள்ளதா? என்பதை சிந்தித்துப் பார்க்கட்டும்!

நெஞ்சில் கைகளை கட்டுவதற்கு 'முஅம்மல் இப்னு இஸ்மாயில்' அறிவிப்பாளர் வரும் செய்தியை ஆதாரம் பிடித்தனர்.பிறகு அதனை பலகீனம் என்று கூறினார்.

பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வது கூடாது என்று வாதிட்டனர்.பிறகு அதனை பலகீனம் என்பதாக நிலைப்பாட்டை மாற்றினர்.இவ்வாறு நிலைப்பாட்டை மாற்றும் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

இதற்கு அவர்களின் சமாளிப்பு

(1) மனிதர் அடிப்படையில் தவறுகள் நிகழ்ந்துள்ளது.

(2)அக்காலகட்டத்தில் ஆய்வு செய்வதற்குரிய நூல்கள் கிடைக்கவில்லை.இரண்டும் பொய்யான சமாளிப்புகள்.
(இன்ஷா அல்லாஹ் பிறகு விளக்குவோம்!)

ஹிதாயா ஆசிரியர் அவர்களுக்கும் மனிதர் எனும் அடிப்படையில்
தவறுகள் நிகழாதா?

அறிவியல் முன்னேறிய காலத்தில் இத்துணை தவறுகள் நிகழும்
பொழுது ஹிதாயா ஆசிரியரின் நிர்பந்த நிலையை எண்ணிப் பாருங்கள்! அதனை பொய் என்பதாக சித்தரிக்கும் அருகதை சிறிதும் கூட யாருக்கும் இல்லை.

'மாநபியின் மீது பொய்யுரைக்கும் மத்ஹபுகள்' என்ற தலைப்பில் ஏகத்துவ இதழின் கட்டுரையை குறித்து நமது  அனுமானம் "ஹனஃபி,ஷாஃபி உலமாக்கள் எழுதிய நூல்களிலிருந்து தான் எடுத்தெழுதியிருப்பார்கள்."
சுயமாக ஆய்வு செய்ததை போன்று படம் காட்டியுள்ளனர்.

ஹனஃபி,ஷாஃபி மத்ஹபுகளை சேர்ந்த அறிஞர்கள்,ஹிதாயா ஆசிரியர் பதிவு செய்துள்ள ஹதீஸ்களை ஒன்று திரட்டியுள்ளனர்.ஆராய்ச்சிக்கு பிறகும் கிடைக்காத ஹதீஸ்களை அடையாளம் காட்டியுள்ளனர்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

Monday, December 17, 2018

ஹனபி பிக்ஹ் ஹிதாயா நூலும் நமது பதிலும் 3


ஹிதாயா நூல் குறித்து சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளும் பதில்களும் தொடர் 3

முதல் குற்றச்சாட்டின் இரண்டாவது பகுதி ஹிதாயா நூலில் பொய்யான ஹதீஸ்களும் பலகீனமான ஹதீஸ்களும் உண்டு.மற்ற பிக்ஹ் நூல்களிலும் உண்டு.

இதற்கு  இருவிதமாக பதில் அளிக்கிறோம்.

முதல் பகுதியில் ஹிதாயா நூல் அதனின் ஆசிரியர் குறித்து அறிமுகம் இதன் மூலம் சரியான தெளிவு கிடைத்துவிடும்.அந்நூலின் மேன்மையும் சிறப்பும் புரிந்துவிடும்.

இரண்டாவது பகுதியில் மத்ஹப் மறுப்பாளர்கள் வாயடைக்கும் பதில், தக்க பதிலடி,இரட்டை நிலைப்பாட்டை தோலுரிப்போம்.

ஹிதாயா நூல்,ஆசிரியர்  குறித்து சிறு அறிமுகம்:

ஹிதாயா நூலின் தனிச்சிறப்பு


பிக்ஹ் ஹனஃபியில் ஹிதாயா நூலானது மிகவும் பிரபல்யமானது, நம்பகமானது.இரத்தின சுருக்கமான நூல்.இரத்தின சுருக்கம்,அதிக மார்க்க சட்டங்கள்,அழகிய கோர்வை,தனித்து விளங்கும் போங்கின் காரணமாக தனிச்சிறப்பு பெற்று விளங்குவது அதனின் குறிப்பான அம்சமாக திகழ்கிறது.இதனால்தான் நூற்றாண்டுகளாக இந்தியாவின் மதரஸாக்களில் அலங்காரமாக திகழ்கிறது.அதுமட்டுமின்றி மத்ஹப் மறுப்பாளர்களின் பாடத்திட்டத்திலும் இந்நூல் இடம்பிடித்துள்ளது வியப்பில் ஆழ்த்துகிறது.


ஹிதாயா நூல் அசலில் 'பிதாயதுல் முப்ததியின்' (بداية المبتدي) விளக்கவுரை, விரிவுரை நூலாகும்.ஹிதாயா ஆசிரியர் முதலில் 'பிதாயதுல் முப்ததி' என்ற பெயரில் தொகுத்தார்.பிறகு அதனின் விளக்கவுரையாக 'கிபாயதுல் முன்தஹா' (كفاية المنتهي) என்ற பெயரில் 80 பாகங்களில் எழுதினார்.விரிவுரை நீண்டுவிட்டது.எனவே அதனை சுருக்கி எழுதுவதில் கவனம் செலுத்தினார்.அதற்கு ஹிதாயா பெயர் சூட்டினார்.இது நான்கு பாகங்கள் கொண்டது.முதல் இரு  பாகங்கள் 'அவ்வலைன்' (اولين) என்றும்,அடுத்த  இரு பாகங்கள் ஆகிரைன் (آخرین ) என்றும் சொல்லப்படும்.

ஹிதாயா நூலின் உள்ளடக்கம்

ஹிதாயா நூலில் ஆசிரியர்,
அசல் எனும் மூலத்தை 'குதூரி' (مختصر القدوري)  நூலில் இருந்து எடுத்தெழுதியுள்ளார். அதிகமான பக்கங்களில் அதனை முன்வைத்து விளக்கங்கள் கொடுத்துள்ளார்.தலைப்புகளுக்கு மத்தியில் 'ஜாமிஉஸ்ஸஙீரி' (الجامع الصغير) லிருந்து மூலத்தை (கருப்பொருள்) உருவாக்கியுள்ளார்.சில பக்கங்களில்  இமாம் முஹம்மது (ரஹ்) அவர்களின் 'கிதாபுல் அசல்' லிருந்து (மப்ஸுத் என்று சொல்லப்படும்) வாசகங்களை எடுத்தெழுதியுள்ளார்.ஆக, ஹிதாயா நூலில்  மூன்று நூல்கள் ஒன்றிணைந்துள்ளது.

ஹிதாயா நூலின் ஹதீஸ்கள் குறித்து 'தக்ரீஜ்' (வேறு ஹதீஸ் நூலில் உள்ள தரவு)

(1) அல்கிஃபாயா ஃபி மஃரிபதி அஹாதீஸுல் ஹிதாயா

(2) நஸபுர் ராயா ஃபி தஹ்ரீஜி அஹாதீஸில் ஹிதாயா

(3) அல்இனாயா லி மஃரிபதி அஹாதீஸில் ஹிதாயா

(4) அத்திராயா ஃபி முன்தஹபி அஹாதீஸில் ஹிதாயா

(5) முன்யதுல் அல்மயி

ஹிதாயா ஹதீஸ் குறித்து அறிஞர்களின் சந்தேகத்திற்கு தெளிவும், மத்ஹப் மறுப்பாளர்களின் அபாண்டத்திற்கு பதிலும்:

ஹிதாயா ஆசிரியர் மார்க்க சட்டங்களுக்கு ஆதாரங்களை ஹதீஸ்களிலிருந்தும், 'ஆஸார்' எனும் நபித்தோழர்கள் தாபியீன்களின் வழிமுறைகளிலிருந்தும் ஆதாரம் எடுத்துள்ளார்.மத்ஹப் மறுப்பாளர்கள் அதனை பலகீனமானது பொய்யானது என அபாண்டத்தை அள்ளிவீசுகின்றனர்.அல்லாமா ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் நூலான 'அத்திராயா ஃபி முன்தஹபி அஹாதீஸில் ஹிதாயா' வில் ஹிதாயாவின் அதிகமான அறிவிப்புகள்
குறித்து (لم اجد)  நான் பெற்றுக்கொள்ளவில்லை.(لا ادری) நான் அறியவில்லை என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.மேலும் இமாம் ஜயீலயி (ரஹ்) ஹனபி அவர்கள் 'நஸபுர் ராயா ஃபி தஹ்ரீஜி அஹாதீஸில் ஹிதாயா' இந்த ஹதீஸ் மிகவும் அரிதானது (هذا غريب جدا) என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் அதிகமாக வாசிக்கும் திறன் படைத்தவர்,விசாலமான ஆய்வாளர் அவருக்கு கிடைக்கவில்லையெனும் போது பொய்யாக தான் இருக்க முடியும்? என்று கூறி சாமானியர்களின் உள்ளத்தில் பிக்ஹின் மீதும், புகஹாக்கள்
(மார்க்க விற்பன்னர்கள்) மீதும் கெட்ட எண்ணத்தை விதைக்கின்றனர்.பிக்ஹ் மறுப்பவர்களின் இந்த குற்றச்சாட்டானது பிக்ஹின் மீதுள்ள விரோதமும் நல்லோர்களான முன்னோர்களின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியாகும்.ஹிதாயா ஆசிரியர் சிறந்த மார்க்க விற்பன்னர் மட்டுமல்ல.மாறாக, பெரும் ஹதீஸ்கலை வல்லுநர்.தனது நூலில் கூறிய ஹதீஸ்கள் அனைத்தும் முற்கால அறிஞர்களின் நூல்களிலிருந்து எடுத்தெழுதியது தான்.

ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள்,இமாம் ஜயீலயி ஹனஃபி  போன்றவர்களுக்கு ஹதீஸ் கிடைக்கவில்லை என்பதால் ஹதீஸானது பொய்யாக ஆகிவிடாது.இதற்கு மூன்று உதாரணங்களை மட்டும் கூறுகிறோம்.இதன் மூலம் ஹிதாயா ஆசிரியர் மீது எழும் சந்தேகம் தீர்ந்துவிடும்.

முதல் உதாரணம்

ஹிதாயா ஆசிரியர் (ரஹ்) அவர்கள் விரலால் மிஸ்வாக் செய்வது குறித்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செயலாக கூறியுள்ளார்.அல்லாமா ஜயீலயி ஹனஃபி ரஹ் அவர்களின் கண்ணோட்டமானது இந்த ஹதீஸானது மிக அரிதானது.

இதற்கு அல்லாமா அய்னி (ரஹ்) அவர்கள் 'பினாயா' வில் கூறியுள்ளார்கள்:அன்னார் ஸுனன் அஹ்மத் நூலை ஆழமாக பார்க்கவில்லை.ஏனெனில் இந்த ஹதீஸை  அலி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (உளுச்செய்யும் போது) அவரது  விரல்களில் சிலதை அவரது வாயில் (பல் துலக்க) நுழைத்தார்கள்.


இரண்டாவது உதாரணம்


தலைக்கு மஸஹ் செய்வது சம்பந்தமாக அனஸ் (ரளி) அவர்களின் ஹதீஸ் குறித்து அல்லாமா ஜயீலயி (ரஹ்) ஹனபி கூறுகிறார்கள்:இந்த ஹதீஸ் மிக அரிதானது ஆனால் இமாம் இப்னு ஹுமாம் (ரஹ்) அவர்கள் 'பத்ஹுல் கதீரில்' எழுதியுள்ளார்கள்:

முஃஜம் அவ்ஸத் (ஹதீஸ்) நூலில் முஸ்னத் இப்ராஹீம் பஙவியின் தொடரில் ஹதீஸானது நிச்சயமாக இருக்கிறது.

மூன்றாவது உதாரணம்

மத்ஹப் மறுப்பாளர்கள் ஏகத்துவ மாத இதழில் (டிசம்பர்-2016) மாநபியின் மீது பொய்யுரைக்கும் மத்ஹபுகள் என்ற தலைப்பில் எழுதியிருப்பதை பாருங்கள்!



//ஹிதாயா நூலாசிரியருக்கு நிதானம் என்பது கொஞ்சங் கூட இல்லை. பொய்யான செய்திகளை நபியின் பெயரில் சொல்வது மட்டுமின்றி  இருக்கும் ஹதீஸ்களைக் கூட ஒழுங்காகக் கவனிக்காமல் முன் பின் மாற்றி, இல்லாதததை ஹதீஸில் செறுகி சொல்லிவிடும் இவரது தொடர் வழக்கத்திலிருந்து இந்தப் புரிதல் வாசகர்களுக்குக் கிடைத்திருக்கலாம்.



இதோ மேற்கண்ட புரிதலை உறுதிப்படுத்தும் மற்றொரு செய்தியை பாருங்கள்.



விந்து அசுத்தமானது; ஈரமாக இருந்தால் அதைக் கழுவ வேண்டும்; காய்ந்து விட்டால் அதைச் சுரண்டி விட்டாலே போதுமானது என்று சட்டம் சொல்லி விட்டு வழக்கம் போல் ஆதாரம் காட்டும் இடத்தில் கோட்டை விட்டு விடுகிறார்.



لِقَوْلِهِ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ لِعَائِشَةَ { فَاغْسِلِيهِ إنْ كَانَ رَطْبًا وَافْرُكِيهِ إنْ كَانَ يَابِسًا }



நபிகள் நாயகம் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அது ஈரமாக இருந்தால் கழுவி விடு, காய்ந்து விட்டால் அதை சுரண்டி எடுத்து விடு என்று கூறியுள்ளார்கள்.



ஹிதாயா, பாகம் 1, பக்கம் 35



நபிகளார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் இவ்வாறு சொன்னதாக இட்டுக்கட்டப்பட்ட செய்தி கூட இல்லை. இவர்களின் வகையறாக்கள் இட்டுக் கட்டியிருந்தாலே தவிர//

ஹனஃபி ஷாபியி அறிஞர்கள் ஹிதாயா ஹதீஸ் குறித்து கிடைக்கவில்லை என்று தான் சொல்கிறார்கள்.ஆனால் மத்ஹப் மறுப்பாளர்கள்,பொய்யானது என்பதாக அபாண்டமாக சித்தரிக்கிறார்கள். பழியை அள்ளிவீசுகின்றனர்.(தக்க பதிலடியை இன்ஷா அல்லாஹ் பிறகு பார்ப்போம்!)

உண்மையில் இந்த ஹதீஸானது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லாக வார்த்தை மாற்றத்துடன் ஆயிஷா (ரளி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

'முன்யதுல் அல்மயி' என்ற நூலில் 20 ஆம் பக்கத்தில் ஆயிஷா (ரளி) வாயிலாக அறிவிப்பாளர் தொடருடன் வந்துள்ளது.روي ابن الجارود ثنا محمد ابن اسحاق و احمد بن يوسف قالا ثناابوحذيفة ثنا شقيق عن منصور عن ابراهيم عن همام بن الحارث قال كان ضيف عند عاءشة فاجنب فجعل يغسل ما اصابه فقالت عاءشة رضي الله عنها كان رسول الله يامرنا بحته

ஆயிஷா (ரளி) அவரிடத்தில் விருந்தினர் தங்கியிருந்தார்.
அவருக்கு  குளிப்பு கடமையானது.அவர் மீது இருந்த அசுத்தத்தை கழுவ ஆரம்பித்தார்.அதற்கு ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு (அசுத்தத்தை) சுரண்டும்படி ஏவினார்கள்.

ஆக,வார்த்தை மாற்றங்களுடன்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லாக அறிவிப்பாளர்களின் தொடருடன்  வந்துள்ளது.பொய்யாக திரித்து கூறவில்லை.

பொய்யாக கூறுவது மத்ஹப் மறுப்பாளர்களா? ஹிதாயா ஆசிரியரா? நிச்சயம் மத்ஹப் மறுப்பாளர்கள்தான்.



ஏகத்துவ மாத இதழில் ஹிதாயா ஆசிரியரின் மீது அபாண்ட பழிசுமத்தியதற்கு மன்னிப்பு கேட்க தயாரா? 



(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Friday, December 14, 2018

ஹனபி பிக்ஹ் ஹிதாயா நூலும் நமது பதில்களும் (2)


ஹிதாயா நூல் குறித்து சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளும் பதில்களும் தொடர் 2


முஜ்தஹிதீன்களின் காலத்திற்கு பிறகு உள்ளவர்கள் குறித்து நமது நிலைப்பாடு:

ஸஹாபாக்கள்,
தாபியீன்கள்,தப்உ தாபியீன்கள்,முஜ்தஹிதீன்களான இமாம்கள் அவர்களுக்கு பிறகு கியாமத் வரை உள்ளவர்கள். முஹத்திஸாக (ஹதீஸ்கலை வல்லுநர்) முபஸ்ஸிராக (திருக்குர்ஆன் விரிவுரையாளர்) புகஹாக்களாக (மார்க்க விற்பன்னர்) வரலாற்று ஆய்வாளராக,ஹனஃபி,ஷாபியி மார்க்க அறிஞராக இருந்தாலும் சரி,அனைவரும் பாவத்திற்கு அப்பாற்ப்பட்டவர்கள் இல்லை.அவர்களிடம் தவறுகள் நிகழும்.தவறுகள் நிகழ்ந்துள்ளது.அவர்களின் மீது அடிப்படை கோட்பாடுகளின் பேரில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.அவர்களின் கருத்து ஏற்கப்படலாம்.
மறுக்கப்படலாம்.

அவர்களின் நூல்களில் அனைத்து தரங்களில் மார்க்க சட்டங்கள் உண்டு.


நம்மிடத்தில் அதனின் தரங்கள் 

(1)குர்ஆன் ஹதீஸில் இருப்பதை எடுத்து அவர்களின் நூல்களில் எழுதியிருந்தால் அதனை ஏற்பது கடமை.ஏனெனில் அவர்கள் அதனை எடுத்து மட்டும்தான் 
சொல்கிறார்கள்.அவர்களின் சுயகருத்தில்லை.

(2)அறிஞரின் தீர்ப்பானது வெளிப்படையில் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக இருந்தால் அதனை நாம் இணைக்க முயற்சி செய்வோம்.முரண்டுபாட்டை நீக்கமுடியவில்லையெனில் அதனை விட்டுவிடுவோம்.குர்ஆன் சுன்னத்தின் பேரில் அமல் செய்வோம்.அவரை காபிர் என தீர்ப்பளிக்கமாட்டோம்.
இழிவுப்படுத்த மாட்டோம்.மார்க்க அறிஞருக்கு செலுத்த வேண்டிய கடமையை பேணுவோம்.

(3)குர்ஆன்,ஹதீஸ்,இஜ்மா,
கியாஸின் மூலம் நிரூபணமாகாத விஷயங்கள் அவர்களின் நூல்களில் உள்ளது.எனினும் அவைகளுக்கு எதிராக இல்லை.அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் அடிப்படைகளுக்கும் எதிராகவும் இல்லையெனில் அதனை அமல் செய்யவும் உரிமை உண்டு.மறுக்கவும் உரிமை உண்டு.ஆனாலும் நாம் அதனை ஏற்போம்.

(4)அறிஞரின் கருத்தில் முரண்பாடோ அல்லது ஆட்சேபணையோ இருந்தால் அவரின் இறுதியான சொல்தான் பார்க்கப்படும்.அதனை அறியமுடியவில்லையெனில் விடப்படும்.

(5)மார்க்க அறிஞர் அவரது கருத்தை  ஓர் இடத்தில் சுருக்கமாக கூறியுள்ளார்.வேறு இடத்தில் விரிவாக கூறியுள்ளார் எனில் விரிவாக கூறியதுதான் கவனிக்கப்படும்.

(6)அறிஞர் அவரது கைப்பட எழுதியது மற்றும் மல்பூஜாத் எனும் உபதேசங்கள் இவைகளுக்கு மத்தியில் முரண்பாடு தோன்றினால் கைப்பட எழுதியதுதான் ஏற்கப்படும்.

(7)அறிஞரின் தீர்ப்புகளில் முரண்பாடு ஏற்பட்டால் அவரின் மத்ஹபின் கருத்திற்கும்,அவரின் இறுதி சொல்லுக்கும் ஏற்ப இருப்பவை அமல் செய்யப்படும்.அவரின் மற்ற தீர்ப்புகள் ஷாத் (அரிதானது) என்பதாக கருத்து கொள்ளப்படும்.

(8)சூபியாக்கள் எனும் ஞானிகளின்  கருத்துக்கள் மார்க்கத்தில் ஆதாரமில்லை.புகஹாக்கள் எனும் மார்க்க விற்பன்னர்கள் குர்ஆன் சுன்னத்திற்கு தந்துள்ள விளக்கத்திற்கு மாற்றமாக இருந்தால் ஏற்கப்படாது.சூபியாக்களின் கருத்துக்கள் குர்ஆன் சுன்னத்திற்கு ஏற்ப இருந்தால் மட்டும்தான் அமல்செய்யப்படும்.

(9)மஸ்லக் எனும் வழித்துறை சேர்ந்த அறிஞர் தனது ஆய்விற்கு ஏற்ப கருத்தை எழுதியுள்ளார் தீர்ப்பளித்துள்ளார்.அதே வழித்துறை சேர்ந்த மற்றொரு அறிஞர் தனது ஆய்விற்கு ஏற்ப மற்றொரு கருத்தை கூறிகிறார். தீர்ப்பு கொடுத்துள்ளார்.
இப்பொழுது இருவரின் கருத்தில், மத்ஹபின் தீர்ப்புக்குரிய சொல், அமலில் உள்ள சொல்லின் பேரில் முடிவுசெய்யப்படும்.மற்றொரு கருத்தானது தவறானது,அரிதானது,
மாற்றப்பட்டது என்று கூறப்படும்.

(10)நம்மிடத்தில் திருக்குர்ஆன் விரிவுரையானது விரிவுரையின் அடிப்படை கோட்பாடுகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.ஹதீஸின் இல்மானது ஹதீஸின் அடிப்படை கோட்பாடுகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.பிக்ஹின் இல்மானது பிக்ஹின் அடிப்படை கோட்பாடுகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.ஹனஃபி பிக்ஹின் இல்மானது ஹனஃபி அடிப்படை கோட்பாடுகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.மற்ற மத்ஹபுகளின் அடிப்படை கோட்பாடுகளை ஹனஃபி மத்ஹபிற்கு பொருத்தி பார்க்க கூடாது.

ஆக,இந்த பத்து அம்சங்களை முன்வைத்து நாம் செயல்பட்டால் நமக்கு மத்தியில் உள்ள அனைத்து கருத்து மோதல்களும் முடிந்துவிடும்.கருத்து வேறுபாடுகள் அல்ல.ஏனெனில் கருத்து வேறுபாடுகள் கியாமத் வரை இருக்கும்.அதுதான் உம்மத்திற்கு அருளுமாகும்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Tuesday, December 11, 2018

ஹனபி பிக்ஹ் ஹிதாயா நூலும் நமது பதில்களும்


பிக்ஹ் நூல்களில் தனிச்சிறப்பு  பெற்று விளங்கும் நூல் மதரஸா பாடத்திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கும் நூல் ஹிதாயா 

ஹிதாயா நூல் குறித்து சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளும் பதில்களும் தொடர் (1)

(1)ஹிதாயாவில் பொய்யான ஹதீஸ்களும் பலகீனமான ஹதீஸ்களும் உண்டு.இதே போன்று மற்ற பிக்ஹ் நூல்களிலும் உண்டு.


(2)ஹிதாயாவில் கற்பனை சட்டங்கள் இருக்கிறது.

(3)குர்ஆன்,ஹதீஸிற்கு மாற்றமான சட்டங்களும் உண்டு.

(4)ஹிதாயாவில் அறிவிப்பாளர் தொடர்கள் இல்லை.

(5)ஹனஃபி உலமாக்கள் கூட அந்நூலின் ஆசிரியர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

முதல் குற்றச்சாட்டும் பதில்களும் 

நமது பதிலை இரண்டு பகுதியாக அளிக்கிறோம்.

முதல் பகுதி:முக்கியமான அடிப்படைகளை எடுத்து கூறுகிறோம்.அதன் மூலம் அனைத்து குற்றச்சாட்டுகளும் நீங்கி தெளிவு பிறந்துவிடும்.


இரண்டாவது பகுதி:குறிப்பாக ஹிதாயாவில் உள்ள ஹதீஸ்களின் சட்டங்கள் குறித்து ஆராய்வோம்.


அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் அடிப்படையான ஆதாரங்களின் (குர்ஆன் ஹதீஸ் இஜ்மா கியாஸ்) ஒளியில் 

நபிமார்கள் குறித்து நமது கொள்கை:

நமது கொள்கை நிலைப்பாடு முழு மனிதகுலத்தில் நபிமார்கள் மட்டும் பாவங்களுக்கு அப்பாற்ப்பட்டவர்கள்.
பரிசுத்தமானவர்கள்.நபிமார்களை தவிர உலகில் ஒருவரும் பாவத்திற்கு அப்பாற்ப்பட்டவர்கள் இல்லை.


ஸஹாபாக்கள் குறித்து நமது கண்ணோட்டம்:

  அனைத்து ஸஹாபாக்களும் சுவனவாசிகள்.சத்தியத்தின் அளவுகோல்.அவர்களை விமர்சிப்பதற்கு அனுமதியில்லை ஹராமாகும்.நாம் ஸஹாபியின் மீது வீசும் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ளமாட்டோம்.
ஸஹாபாக்கள் வரலாற்றின் சான்று என்பது  மட்டும் இல்லை.மாறாக குர்ஆனிய சான்று பெற்றவர்கள்.சஹாபாக்களை விமர்சிப்பவர்கள் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமா அத்தை விட்டு வெளியேறியவர்கள் என்பதாக நாம் கருதுகிறோம். சஹாபாக்களை தக்பீர் செய்பவர்களை காபிர் என்பதாக கருதுகிறோம்.எனினும்,
சஹாபாக்கள் நபிமார்களை போன்று பாவத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.

 நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் குடும்பத்தார் குறித்து நமது கொள்கை: 

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தாரை, சஹாபாக்களை சரிசமமாக நேசிக்கிறோம். இருசாராரின்  மீது விரோதம் கொள்வதை வழிகேடு என்பதாக கருதுகிறோம்.

 தாபிஈன்கள் தபஉத் தாபிஈன்கள் குறித்து நமது கண்ணோட்டம்: 

 பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, தாபியீன்கள்,தபஉத்தாபியீன்கள் இருவர்களின் காலம் பொற்காலம் என்பதாக கருதுகிறோம். எனவே அவர்கள் சிறந்த காலத்தை பெற்றவர்கள்.எனினும்,அவர்களும் பாவங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதாக நாம் நம்பவில்லை. அவர்கள் மீது கூறும் விமர்சனத்தை பொறுத்துக் கொள்வோம்.எனினும்,அவர்கள் மீது அவதூறு சுமத்துவதை, அபாண்டத்தை அள்ளி வீசுவதை, இழிவுபடுத்துவதை பொறுத்துக்கொள்ள மாட்டோம். 

 அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் அடிப்படை கோட்பாடுகள்,மூல விதிகள்,நிறை குறை எடை போடும் துறை (ஜர்ஹு வ தஃதீல்) போன்றவைகளுக்கு ஏற்ப அவர்களின் மீதுள்ள விமர்சனத்தை பொறுத்துக் கொள்வோம். 

முஜ்தஹிதீன்களான (ஆய்வாளர்கள்) இமாம்கள் குறித்து நமது கண்ணோட்டம்: 

நான்கு இமாம்கள் இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி 
அலைஹி,இமாம் மாலிகி ரஹ்மதுல்லாஹி அலைஹி,
இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி,இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி,
  நாம் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் ஹனஃபி வழித் துறையைச் சேர்ந்தவர்கள்.
 இமாம்களை, அல்லாஹ் ரசூலாக கருதவில்லை.அவர்களின் கலிமாவை படிப்பதில்லை.அவர்களை பாவத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதாக கருதவில்லை. அவர்களிடமிருந்து தவறு ஏற்பட முடியும். ஒன்று,தவறு ஏற்பட சாத்தியம் உள்ளது.மற்றொன்று,
தவறு வெளிப்படுவது.தவறு நிகழ வாய்ப்புள்ளது என்பதால் தவறு நிகழ வேண்டும் என்பதும் அவசியம் இல்லை.அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு செய்த சேவைகள் ஏராளம்.அனைவரும் அல்லாஹ்வின் நேசர்கள்.முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் உம்மத்திற்கு செய்த உபகாரங்கள் தாராளம். உம்மத்தின் பெரும் மார்க்க அறிஞர்கள் அவர்களை முஜ்தஹிதீன்கள் எனும்  ஆய்வாளர்களாக ஏற்றுள்ளனர். ஆய்வுக்குரிய சட்டங்களில் அவர்களின் ஆய்வுகளை  அமல் செய்வதற்கு பெயர் தான் தக்லீத் என்று சொல்லப்படும்.மத்ஹப் மறுப்பாளர்கள் விமர்சிப்பதை போன்று 
குருட்டுத்தனமான நம்பிக்கைக்கு பெயர் அல்ல.
     (இன்ஷா அல்லாஹ் தொடரும்) 

Sunday, December 9, 2018

இமாம்களுக்கும் மத்ஹபுகளுக்கும் தொடர்பு உண்டு/அறியாமை வாதத்திற்கு அழகிய பதில்

மத்ஹப் மறுப்பாளர்களின் அறியாமை வாதமும் நமது அழகிய பதிலும்

மத்ஹப் மறுப்பாளர்களால் இமாம்களை தக்லீத் செய்பவர்கள் மீது
திரும்ப திரும்ப சுமத்தப்படும் அவதூறு மத்ஹபுகளுக்கும் இமாம்களுக்கும் தொடர்பில்லை.இதற்கு பதில் அளிப்பதற்கு முன்பாக முதலில் குற்றச்சாட்டை பார்த்துவிடுவோம்.

குற்றச்சாட்டு: ஹனபி மத்ஹபின் முக்கிய பிக்ஹு நூல்களாக இன்று மக்களிடையே உலவி வரும் நூல்களையும், அவை தொகுக்கப்பட்ட காலங்களையும் கீழ்காணும் அட்டவணையிலிருந்து பார்த்து இது இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களால் கூறப்பட்டிருக்க முடியுமா? என்பதை வாசகர்களும், தங்களை ஹனபிகள் எனக்கூறிக் கொள்வோரும் கவனிக்க வேண்டுகிறோம்.



இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் காலம் = ஹிஜ்ரி 80 முதல் 180 வரை

ஹனபி மத்ஹபின் பிரபல்யமான பிக்ஹு நூல்களாக இன்று நடைமுறையிலுள்ளவைகளும் அவை தொகுக்கப்பட்ட காலமும்.
  நூல்கள் ஹிஜ்ரிநூற்றாண்டு இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மரணத்திற்கு சுமார்
  1.குத்ரி 5ம் நூற்றாண்டு 300 வருடங்களுக்குப் பின்
  2.ஹிதாயா 6ம் நூற்றாண்டு 400 வருடங்களுக்குப் பின்
  3.காஜிகான் 6ம் நூற்றாண்டு 400 வருடங்களுக்குப் பின்
  4.கன்னியா 7ம் நூற்றாண்டு 500 வருடங்களுக்குப் பின்
  5.தஹாவி 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  6.ஷரஹ் விகாயா 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  7.நிகாயா 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  8.கன்ஜ் 8ம் நூற்றாண்டு

நமது தக்க மறுப்பு:இமாம்களின் காலமும் மத்ஹபு கிரந்தங்களின் காலமும் மாறுப்பட்டுள்ளது.இமாம்களின் காலத்திற்கு முன்னூறு நானூறு ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டுள்ளது.எனவே மத்ஹபுகளுக்கும் இமாம்களுக்கும் சம்பந்தமில்லை இதுதான் மத்ஹப் மறுப்பாளர்கள் சுமத்தும் வாதம்.

இதே போன்றுதான் குர்ஆனை மறுப்பவர்களும் வேதமானது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எழுதவில்லை.உஸ்மான் (ரளி) அவர்கள்தான் ஒன்று சேர்த்தார்கள் என்று கூறி குர்ஆனை மறுக்கிறார்கள்.

ஹதீஸ் மறுப்பாளர்களும் ஹதீஸ்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது இல்லை.இமாம் புகாரி (ரஹ்) அவர்களின் மரணம் 256 இவர் மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்தவர்.பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தை அடையவில்லை.இதனால் புகாரியில் உள்ள ஹதீஸ்கள் நபியின் சொல்லாக இருக்கமுடியாது.அதில் அறிவிப்பாளர் தொடர்கள் உண்டு என்றால் அதனை முஹத்திஸீன்கள் (ஹதீஸ்கலை வல்லுநர்கள்) சுயமாக உருவாக்கியுள்ளனர் என்று கூறி ஹதீஸ்களை மறுக்கிறார்கள்.

இதே போன்று தான் மத்ஹப் மறுப்பாளர்களும் ஹிதாயா நூல் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் காலத்திற்கு 400 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.இந்த குற்றச்சாட்டு அனைத்தும் ஏமாற்றுதலும் மோசடியாகும்.

பீஜே குர்ஆனுக்கு மொழிப்பெயர்ப்பு எழுதியுள்ளார்.இறுதியில் விளக்கங்களும் எழுதியுள்ளார்.இப்பொழுது  குர்ஆனும் அதனின் விளக்கங்களும் 14ஆம் நுற்றாண்டில் எழுதப்பட்டது என்று ஒருவர் வாதிட்டால் ஏற்புடையதா? நியாயமாக இருக்கமுடியுமா?

குர்ஆன் வசனமானது நபி ஸல்லல்லாஹு அவர்களின் காலத்தில் இறங்கியது.அதனின் விளக்கவுரை ஆய்வுகள் 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.இதுதான் சரியான பதிலாகும்.

இதே போன்று தான் ஹிதாயா விளக்கவுரை நூலாகும்.இதில் உள்ள மார்க்க சட்டங்கள் இமாம் முஹம்மது (ரஹ்) அவர்களின் நூல்களில் உள்ளது.மார்க்க சட்டங்களுக்குரிய ஆதாரங்கள் அறிவுப்பூர்வமான வாதங்கள் ஹிதாயா ஆசிரியருக்குரியது.இமாம் முஹம்மத் (ரஹ்) அவர்கள், அபூஹனீபா (ரஹ்) அவர்களை பார்த்துள்ளார்களா? இல்லையா? நிச்சயமாக பார்த்துள்ளார்கள்.இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களிடமிருந்து செவியுற்றதை நூலாக எழுதியுள்ளார்கள்.
ஜாமிஃகபீர் என்பது நூலின்  பெயராகும்.காஜி இமாம் அபூயூசுப் (ரஹ்) அவர்களிடமிருந்து இமாம் முஹம்மத் (ரஹ்) அவர்கள் செவியுற்றதை நூலாக எழுதியுள்ளார்கள்.ஜாமிஃ ஸஙீர் என்பது நூலின் பெயராகும்.இதனை தவிர மப்ஸுத்,அஜ்ஜியாதாத்,ஸியருல் கபீர் ஸியருஸ் ஸஙீர் என்ற நூல்கள் உண்டு.

மத்ஹப் மறுப்பாளர்கள் இமாம்களுக்கும் மத்ஹபிற்கும் தொடர்பு இல்லை என்று சுமத்தும் அவதூறு பட்டியலில் இமாம் முஹம்மத் ரஹ் அவர்களின் நூல்களை ஏன் மறைத்தார்கள்? இது மோசடியில்லையா? ஏமாற்றுவதில்லையா?


இமாம் முஹம்மத் ரஹ் அவர்களின் நூல்களின் பட்டியலை வெளியிட்டால் சத்தியம் வெளிப்பட்டுவிடும். அசத்தியம் அழிந்துவிடும்.

வாயடைக்கும் பதில்:இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் பிறப்பு 773-இறப்பு 852 அன்னார் அவர்கள் அஸ்மாவுர் ரிஜால் என்ற  (அறிவிப்பாளர்களை ஆய்ந்தறியும்) நூலில் முதல் மூன்று நூற்றாண்டுகள் வாழ்ந்த அறிவிப்பாளர்கள் குறித்து பதிவு செய்துள்ளார்கள்.ஆனால் அவர்கள் அந்த நூற்றாண்டில் பிறக்கவுமில்லை.வாழவுமில்லை.
இமாம்களுக்கும் மத்ஹபுகளுக்கும் சம்பந்தமில்லை எனில் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களுக்கும் அஸ்மாவுர் ரிஜாலுக்கும் சம்பந்தமில்லையா? மத்ஹப் மறுப்பாளர்கள் அனைவரும் ஒன்றுப்பட்டு ஹதீஸ்களை தரம்பிரிப்பதில் அன்னாரின் நூல்களை தான் தூக்கிபிடிக்கிறார்கள்.

ஆக,கவர்ச்சியான வாதங்களை நம்பி ஏமாந்துவிடவேண்டாம்! உண்மையில் இமாம்களுக்கும் மத்ஹபுகளுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான் சத்தியமாகும்.


https://drive.google.com/file/d/0B4yO-PzFlQ3TM3NkVWN3V1F5bnM/view

Saturday, December 8, 2018

மார்க்கத்தை சரியாக புரிந்து செயல்பட

இன்ஷா அல்லாஹ் நமது தளத்தில் புதிய முயற்சியாக மார்க்கத்தை சரியான முறையில் புரிந்து கொள்வதற்கு குர்ஆன்,ஹதீஸ்,ஸஹாபாக்கள்,
இமாம்கள் அவசியம் என்று சத்தியத்தை நிறுவப்படும்.அத்துடன் நமது முன்னோர்களின் நூல்களில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் அவதூறுகளுக்கும் தெளிவாக நாகரிகமாக பதில் அளிக்கப்படும்.அஹ்லுஸ்ஸுன்னத்வல்ஜமாஅத்தின் கொள்கையை நடுநிலை தவறாமல் மக்களின் முன்னால் எடுத்து சொல்லப்படும்.நாம் சுயமாக ஆய்வு செய்து கூறவில்லை.அதற்குரிய தகுதியும் இல்லை.மாறாக முன்னோர்களின் நூல்களிலிருந்து சத்தியத்தை எடுத்துரைப்போம்.