தக்லீதிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பதில்கள்
தொடர்:22
முன்னால் தக்லீத் குறித்த எதார்த்த நிலையை தெளிவாக விளக்கிவிட்டோம்.குர்ஆன்,சுன்னாவில் அது குறித்த ஆதாரங்களை அதனின் பலதரப்பட்ட படித்தரங்களை அதற்குரிய சட்டங்களை திறந்த மனதோடு வாசித்துப் பார்த்தால் ஏராளமான சந்தேகங்கள் நீங்கிவிடும்.எனினும்,சில குற்றச்சாட்டுகளுக்கு குறிப்பாக பதில் அளிக்கும் தேவை உள்ளது.ஏனெனில் பெரும்பாலானவர்களின் உள்ளங்களில் அதனால் தடுமாற்றங்கள் ஏற்படுகிறது.அல்லது பொதுவாக மத்ஹப் மறுப்பாளர்களால் குற்றச்சாட்டு திரும்ப திரும்ப முன்வைக்கப்படுகிறது. முதல் குற்றச்சாட்டு:குர்ஆனில் அல்லாஹ் தக்லீதை பழித்துரைத்து கூறுகிறான்وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَـتَّبِعُ مَآ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْـٴًـــا وَّلَا يَهْتَدُوْنَ2:170. மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?நமது பதில்: இதற்கு பதில் மிகத் தெளிவானது.அல்லாஹ் தக்லீதை குறித்து பழித்துரைப்பது ஈமானிய விஷயங்களுடன் சம்பந்தப்பட்டது.இந்த வசனத்தில் மார்க்கத்தின் அடிப்படையான கொள்கைகள் கூறப்பட்டுள்ளது.இணைவைப்பாளர்கள் தவ்ஹீத்,ரிஸாலத் (தூதுத்துவம்)ஆகிரத் (மறுமை) போன்ற கொள்கைகளில் சத்தியத்தை ஏற்காமல் எங்களின் மூதாதையர்களை எந்த வழியில் நடக்க கண்டோமோ,அந்த வழியில் நடக்கிறோம் என்பதாக கூறினார்கள்.அதாவது அவர்களின் தக்லீத் தீனின் அடிப்படை அம்சங்களில் உள்ளது.இதில் தக்லீத் செய்வது நம்மிடத்திலும் கூடாது.தீர்க்கமான விஷயங்களில்,இறைநம்பிக்கை அம்சங்களில் நம்மிடத்திலும் தக்லீத் செய்வதற்கு வேலை இல்லை என்பதாக தலைப்பின் ஆரம்பத்தில் தெளிவுப்படுத்தி விட்டோம்.அடுத்து,அல்லாஹ் மூதாதையர்களை தக்லீத் செய்வதை பழித்து கூறுவதற்கு இரண்டு காரணங்களை கூறுகிறான்.ஒன்று,.....وما أنزل الله அல்லாஹ் அருளியதை தெளிவாக புறக்கணித்து தங்களின் மூதாதையர்களின் செயல்களை அதற்கு எதிரில் ஆதாரமாக முன்வைக்கின்றனர்.ஆனால் நாம் அல்லாஹ் அருளியதை புறக்கணிப்பதில்லை.மாறாக,அதனின் விளக்கத்திற்காக முஜ்தஹிதின்(ஆய்வாளரின்) கூற்றுக்களை நம்பிக்கை கொள்கிறோம்.முஜ்தஹிதின் கூற்றுக்களை தனியானதொரு ஆதாரமாக ஏற்பதில்லை.அல்லாமா நுஜைம் (ரஹ்) அவர்கள் தக்லீதின் வரைவிலக்கணத்தை கூறுகிறார்கள்:التقليد العمل بقول من ليس قوله إحدى الحجج بلا حجة منهاதக்லீத் என்பது இமாமின் சொல் ஷரீஅத்தின் அடிப்படையான ஆதாரங்களில் உள்ளதல்ல.அதன் பேரில் ஆதாரத்தை கேட்காமல் அமல் செய்வதாகும்.(ஆதாரம்:தய்ஸீருத்தஹ்ரீர் 4/246,شرح المنار لابن نجيم 2/37)இரண்டாவது, மூதாதையர்கள் அறியாதவர்களாக,நேர்வழியான பாதையில் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.ஆனால்,நான்கு இமாம்களும் நேர்வழியில் அறிவில் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை மத்ஹப் மறுப்பாளர்களும் ஏற்கிறார்கள்.எனவே நமது தக்லீதை காபிர்களின் தக்லீதுடன் பொருத்துவது மிகப்பெரும் அநீதியாகும்.இரண்டாவது குற்றச்சாட்டு:اِتَّخَذُوْۤا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ وَالْمَسِيْحَ ابْنَ مَرْيَمَ ۚ وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَـعْبُدُوْۤا اِلٰهًا وَّاحِدًا ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ سُبْحٰنَهٗ عَمَّا يُشْرِكُوْنَஅவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.(9:31)நமது பதில்: முஜ்தஹிதீன்கள் ஆய்வாளர்கள் ஷரீஅத்தை உருவாக்கியவர்கள் இல்லை.மாறாக,ஷரீஅத்தின் சட்டங்களை விளக்கி கூறுபவர்கள் என்பதாகத்தான் நாம் நம்புகிறோம்.அதுமட்டுமின்றி
அவர்களின் விளக்கங்களை நம்பிக்கை வைத்து குர்ஆன்,சுன்னாவை தான் பின்பற்றுகிறோம்.குர்ஆன்,சுன்னாவை விட இமாம்களுக்கு முன்னுரிமை தருகிறோம் என்பதாக அபாண்டத்தை, பழியை சுமத்துகின்றனர். 1)மார்க்கத்தின் அடிப்படை அம்சங்களில் தக்லீத் இல்லை.2)ஷரீஅத்தின் சட்டங்களில் பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருப்பதில் தக்லீத் இல்லை.3)குர்ஆன்,சுன்னாவில் உள்ள ஆதாரங்கள் மற்றும் அர்த்தங்கள் தீர்க்கமான, தெள்ளத் தெளிவாக இருந்து அதற்கு எதிரான ஆதாரமும் இல்லாத போது அதில் நாம் கருத்துவேறுபாடு கொள்வதில்லை.உதாரணமாகوَالْمُطَلَّقٰتُ يَتَرَ بَّصْنَ بِاَنْفُسِهِنَّ ثَلٰثَةَ قُرُوْٓءٍ தலாக் கூறப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் காலம் (குர்உ) பொறுத்திருக்க வேண்டும்.(2:228)மற்றோரு வசனம்:
لِّـلَّذِيْنَ يُؤْلُوْنَ مِنْ نِّسَآٮِٕهِمْ تَرَبُّصُ اَرْبَعَةِ اَشْهُرٍۚ فَاِنْ فَآءُوْ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌதங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது; எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.(2:226)இவ்விரு வசனங்களையும் பார்த்தால் முதல் வசனத்தில் மாதவிடாய் காலம் (குர்உ) என்றும்,மற்றோரு வசனத்தில் நான்கு மாதங்கள் என்றும் வந்துள்ளன.இவ்விரண்டு வசனங்களிலும் முறையே 'மூன்று' 'நான்கு' என்று வந்துள்ள சொற்களில் இரு கருத்துகளுக்கு இடமில்லை. அவை ஒரே கருத்தைக் கொடுக்கக்கூடிய திட்டவட்டமான இரண்டு சொற்களேயாகும்.ஆனால், முதலாவது வசனத்தில் உள்ள 'குர்உ' என்ற சொல்லையும் இரண்டாவது வசனத்திலுள்ள 'அஷ்ஹுர்' (மாதங்கள்) என்ற சொல்லையும் ஆராய்ந்தால் குர்உ என்ற சொல் பல கருத்துகளைக் கொடுக்கக் கூடியதாகவும் அஷ்ஹுர் என்ற சொல் மாதங்கள் என்ற ஒரே கருத்தையே கொடுப்பதையும் நாம் புரியலாம்.இங்கு இமாம்களுக்கு மத்தியில் மூன்று,நான்கு,மாதங்கள் போன்ற வார்த்தையில் கருத்து வேறுபாடு ஏற்படவில்லை.ஏனெனில் இந்த வார்த்தைகளில் பல அர்த்தங்களுக்கு இடமில்லை.ஆனால் குர்உ எனும் வார்த்தைக்கு மாதவிடாய்,மாதவிடாயிலிருந்து தூய்மையாகுதல் எனும் இரண்டு விதமான அர்த்தம் உண்டு.இதனால் இமாம்களுக்கு மத்தியில் இயல்பாக கருத்துவேறுபாடு ஏற்படுகிறது.4)தக்லீத் என்பது குர்ஆன்,சுன்னாவில் பலதரப்பட்ட கருத்துக்களுக்கு வாய்ப்புள்ள போது ஒரு பொருளை குறிப்பாக்குவதற்காக தனது சிந்தனையை பயன்படுத்தாமல் ஆய்வாளரின் புரிதலை ஏற்பதாகும்.5)முஜ்தஹித்களை (ஆய்வாளர்களை)தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதாக நம்பிக்கை கொள்ளவில்லை.அதுமட்டுமின்றி அவர்களிடத்திலும் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை உறுதியாக நம்புகிறோம்.6)ஒரு متبحر عالم (ஆழ்ந்த அறிவாற்றல் உள்ள அறிஞர்)அவருக்கு முஜ்தஹிதின் (ஆய்வாளரின்) ஏதேனும் கூற்று ஸஹீஹான, தெளிவான ஹதீஸிற்கு மாற்றமாக இருந்து அதற்கு எதிராக முரண்பாடும் இல்லையெனில் அவர் முஜ்தஹிதின் கூற்றை விட்டு விட்டு ஹதீஸின் பேரில் அமல் செய்வது அவசியமாகும்.ஆக நம்மிடத்தில் தக்லீத் செய்வதில் இத்தனை அம்சங்கள் இருந்தும் வழிகேடு எனவும், இமாம்களை அல்லாஹ்விற்கு நிகராக்கிவிட்டார்கள் எனவும் வாதிட்டால் முழு உலகில் வழிகேட்டை,இணைவைப்பை விட்டும் ஒருவரும் தப்பிக்க முடியாது.மத்ஹப் மறுப்பாளர்கள் கூட நடைமுறையில் தக்லீத் செய்துதான் வருகின்றனர்.அவர்கள் ஒவ்வொருவரும் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் போது முஜ்தஹித்களாக (ஆய்வாளர்களால்) பிறக்கவில்லை.மேலும் ஒவ்வொருவரும் அறிஞராகவும் இல்லை.அறிஞராக இருந்தாலும் அனைத்து மஸ்அலாவிலும், சந்தர்ப்பங்களிலும் குர்ஆன்,சுன்னாவை முழுமையாக அணுகுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.அறிஞர்களாக இல்லாதவர் அவர்களின் உலமாக்களிடத்தில் கேட்டு தக்லீத் செய்கிறார்கள்.இந்த நோக்கத்திற்காக மத்ஹப் மறுப்பாளர்களின் அறிஞர்கள் தங்களது ஆய்வுகளை,தீர்ப்புகளை நூல் வடிவில் வெளியிட்டுள்ளனர்.தீர்ப்புகளில் ஆதாரங்கள் இருந்தாலும், சாமானியன் அவர்கள் கூறிய ஆதாரம் சரியானதா? இல்லையா? என்பதை எப்படி புரிவான்? எனவே மத்ஹப் மறுப்பாளர்களும் அவர்களின் அறிஞர்களின் புரிதலை நம்பிக்கை கொண்டு செயல்படுகின்றனர்.இதற்கு பெயர்தான் தக்லீத்.