Thursday, July 22, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்/குற்றச்சாட்டுகளும் பதில்களும்/

மத்ஹபுகளின் அவசியம் தொடர்:10

ஸஹாபாக்களின் காலத்தில் தனிநபரை பின்பற்றுதல் 
(தக்லீத் ஷஹ்ஷி) பகுதி:1

பொதுவாக தக்லீத் குறித்து ஆதாரங்களை பார்த்தோம்.அவைகளில் ஸஹாபாக்களில்,தாபியீன்களில் தனிநபரை தக்லீத் செய்வது குறித்து இல்லை.மாறாக ஒரு அறிஞரிடம் மஸ்அலாவை கேட்டு அமல்செய்வது.மற்றொரு அறிஞரிடம் மஸ்அலாவை கேட்டு அமல்செய்வது.இதே போன்று தனிநபரை தக்லீத் குறித்து ஆதாரங்கள் உண்டு.

ஸஹீஹுல் புகாரியில் இக்ரிமா (ரஹ்) அவர்களின் அறிவிப்பு 

أن أَهْلَ المَدِينَةِ سَأَلُوا ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ امْرَأَةٍ طَافَتْ ثُمَّ حَاضَتْ ، قَالَ لَهُمْ : تَنْفِرُ ، قَالُوا : لاَ نَأْخُذُ بِقَوْلِكَ وَنَدَعُ قَوْلَ زَيْدٍ

இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 
மதீனாவாசிகள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'ஒரு பெண் வலம்வந்த பிறகு அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் என்ன செய்வது?' எனக் கேட்டனர். அதற்கவர்கள், 'அவள் (தவாஃபுல்வதா செய்யாமல்) போய் விட வேண்டியது தான்!' என்றார்கள். அப்போது அவர்கள், 'உம்முடைய சொல்லை எடுத்துக் கொண்டு ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களின் கூற்றைவிட்டுவிட நாங்கள் தயாரில்லை!' என்றனர். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) 'அப்படியாயின் நீங்கள் மதீனா சென்றால் அங்கு(ள்ளோரிடம்) கேட்டுப் பாருங்கள்!' என்றார். 
அவர்கள் மதீனா சென்றதும் இது பற்றிக் கேட்டார்கள். அவர்களால் கேட்கப்பட்டவர்களில் உம்மு ஸுலைம்(ரலி) அவர்களும் ஒருவராவார்கள். அவர்கள் ஸஃபிய்யா(ரலி) அவர்களின் நிகழ்ச்சியைக் கூறினார்கள்.(ஆதாரம்:ஸஹீஹ் புகாரி பாடம்:كتاب الحج, தலைப்பு:باب إذا حاضت المرأة بعد ما افاضت)

இந்த அறிவிப்பானது முஃஜம் இஸ்மாயிலில் அப்துல்வஹ்ஹாப் அஸ்ஸகஃபி வழியாக வருகிறது.அதில் மதீனாவாசிகள் கூறிய வார்த்தை 

فقالوا : لا نبالى أفتيتنا أو لم تفتنا، زيد بن ثابت يقول لا تنفر 

நீங்கள் தீர்ப்பு கொடுத்தாலும், தீர்ப்பு கொடுக்கவில்லையென்றாலும் நாங்கள் பொருட்படுத்மாட்டோம்.ஜைத்(ரளி) அவர்கள் கூறியது அந்தப்பெண் தவாபின்றி புறப்படமாட்டாள்.

(ஆதாரம்:பத்ஹுல் பாரி 3/468,உம்ததுல்காரி 4/777)


இந்நிகழ்வு முஸ்னத் அபூதாவூத் தயாலிஸியில் கதாதா (ரஹ்) அவர்களிடமிருந்து எடுத்துசொல்லப்பட்டுள்ளது.அதில் மதீனாவாசிகள் கூறிய வாரத்தை

.. لا نتابعك يا ابن عباس وأنت تخالف زيداً. فقال : سلوا صاحبتكم أم سليم

இப்னு அப்பாஸே!  நீர் ஸைத் இப்னு ஸாபித் (ரளி) அவர்களிடம் கருத்துவேறுபாடு கொண்ட மஸ்அலாவில் உம்மை பின்பற்றமாட்டோம்.அதற்கு இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறினார்கள் (மதீனா சென்று)உம்முஸுலைம் (ரளி) அவர்களிடம் கேளுங்கள்.

(ஆதாரம்:முஸ்னத் அபூதாவூத் தயாலிஸி 229)

இந்த சம்பவத்தில் மதீனாவாசிகள் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களின் உரையாடலில் இருவிஷயங்களை புரியமுடிகிறது.

ஒன்று,மதீனாவாசிகள் ஹள்ரத் ஜைது இப்னு ஸாபித் (ரளி) அவர்களை குறிப்பாக பின்பற்றி வந்துள்ளனர்.அவர்களின் சொல்லிற்கு மாற்றமாக வேறு நபரின் சொல்லை பின்பற்றவில்லை.அதுமட்டுமின்றி முஃஜம் இஸ்மாயில் அறிவிப்பில் வருகிற வாசகம் ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரளி) தனது தீர்ப்பின் ஆதாரத்தில் உம்முஸுலைம் (ரளி) மற்ற இது போன்ற ஹதீஸ்களை கூறியுள்ளார்கள்.அப்பொழுதும் ஜைத் இப்னு ஸாபித் (ரளி) அவர்களின் சொல்லின் மீது தான் நம்பிக்கை வைத்தார்கள்.ஏனெனில் தங்களின் விஷயத்தில் அவர்களின் சொல்லைதான் ஆதாரமாக கருதினார்கள்.ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களின் பத்வாவின் பேரில் அமல் செய்யாமல் இருப்பதற்கு இதனை தவிர வேறு காரணம் இருக்கமுடியாது.அது ஹள்ரத் ஜைத் இப்னு ஸாபித் (ரளி) அவர்களின் கருத்திற்கு எதிராக இருந்ததுதான்.

இரண்டாவது, ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் மதீனாவாசிகளுக்கு எதிராக தனிநபரை பின்பற்றுகிறீர்கள் என்பதாக குற்றம் சுமத்தவில்லை.பாவம்,குற்றம் என்பதாக ஏன் கூறவில்லை?மாறாக,உம்முஸுலைம் (ரளி) அவர்களிடம் உறுதிப்படுத்தி,ஜைத் இப்னு ஸாபித் (ரளி) அவர்களிடத்தில் மீண்டும் அணுகவேண்டும் என்பதை வழிகாட்டினார்கள்.எனவே மதீனாவாசிகளும் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களின் வழிகாட்டலில் பேரில் உம்மு ஸுலைம் (ரளி) அவர்களிடத்தில் அணுகி உறுதிசெய்து,மீண்டும் ஜைத் இப்னு ஸாபித் (ரளி) அவர்களிடம் சென்றனர்.இதன்முடிவில் ஜைத் இப்னு ஸாபித் (ரளி) அவர்கள் மீண்டும் ஹதீஸை ஆய்வுசெய்து தனது முந்தைய தீர்ப்பை மாற்றினார்கள்.இதனை குறித்து இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களுக்கு தெரியப்படுத்திய அறிவிப்புகள் முஸ்லிம்,நஸாயி,பைஹகி போன்ற நூல்களில் உள்ளது.

குறுக்கு கேள்வியும் நடுநிலையான பதிலும்

மதீனாவாசிகள் தக்லீத் செய்பவர்களாக இருந்தால் உம்மு ஸுலைம் (ரளி) அவர்களின் ஹதீஸை குறித்து ஏன் ஆய்வு செய்தார்கள்? 

நமது பதில்:முஜ்தஹிதை தக்லீத் செய்யும்போது ஹதீஸ்களை ஆராய்வது ஹராம் என்பதாக மத்ஹப் மறுப்பாளர்கள் தவறாக புரிந்துள்ளனர்.இவர்களின் அதிகமான குற்றச்சாட்டுகள்,ஆதாரங்கள் தவறான புரிதலின் பேரில் உள்ளது.தக்லீத் என்பது குர்ஆன்,சுன்னாவை நேரடியாக அணுகி கருத்தை புரிவதற்கு,வெளிப்படையான முரண்பாடுகளை நீக்குவதற்கு,மாற்றப்பட்டது, மாற்றக்கூடியது போன்ற விஷயங்களில் ஞானம்,தகுதி இல்லாதவர் ஏதேனும் ஆய்வாளரிடம் ஆதாரங்களை கேட்காமல் அவரின் இல்மின் மீது நம்பிக்கை வைத்து அவரின் பத்வாக்களை அமல் செய்வதாகும்.எனினும்,
முஜ்தஹிதின் தீர்ப்பின் பேரில் அமல் செய்த பிறகு குர்ஆன்,ஹதீஸின் ஞானத்தை பெறுவதற்கு முயற்சி செய்யக்கூடாது என்பது தக்லீதில் ஒரு போதும் வராது.ஆய்வின் வாசல் தக்லீதிற்கு பிறகும் திறந்துள்ளது.இதனால் தான் ஆயிரக்கணக்கான முகல்லித்கள் (இமாமை பின்பற்றுபவர்கள்) தக்லீத் செய்வதுடன் குர்ஆனின் விரிவுரைகளை,ஹதீஸ்களின் விளக்கவுரைகளை தங்களின் இல்மின் விசாலத்திற்கு ஏற்ப,அதனை அதிகரிக்க ஆய்வுத்திறனை வளர்த்துக்கொள்ள முயற்சிசெய்கிறார்கள்.இந்த ஆய்வுகளுக்கு மத்தியில் ஏதேனும் மஸ்அலாவில் தெளிவான ஹதீஸ்களுக்கு,முஜ்தஹிதின் கருத்து மாற்றமாக உள்ளது உறுதியாக தெரிகிறது.மேலும் அதற்கு எதிரான ஆதாரமும் இல்லை எனும் போது தனது இமாமை பின்பற்றுவதற்கு பதிலாக சரியான,தெளிவான ஹதீஸை அமல் செய்வார்கள்.இது குறித்து முழுமையான விளக்கம் பின்னால் இன்ஷா அல்லாஹ் வரும்.ஏதேனும் முகல்லித் (இமாமை பின்பற்றுபவர்) தனது இமாமின் ஏதேனும் சொல்லானது ஹதீஸிற்கு மாற்றமாக இருந்தால் அந்த ஹதீஸை ஆய்வுசெய்வது தக்லீதிற்கு எதிரானது இல்லை.எனவே மேற்கூறப்பட்ட ஹதீஸில் ஆய்வு செய்வது,தக்லீத் இரண்டிற்கும் ஆதாரம் உள்ளது.

எனினும்,இந்த ஹதீஸில் நாம் புரியவேண்டிய முக்கிய அம்சம் "நாங்கள் ஜைத் (ரளி) அவர்களின் சொல்லை விட்டுவிட்டு உங்களின் சொல்லை அமல் செய்யமாட்டோம்".
இது தனிநபரை பின்பற்றுவதாக இல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்?

இரண்டாவது ஆதாரம்:

ஹுஸைல் இப்னு ஷுரஹ்பீல்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 
அபூ மூஸா(ரலி) அவர்களிடம், (இறந்த ஒருவருக்கு) மகள், மகனுடைய மகள், சகோதரி ஆகியோர் (இருந்தால், அவர்களுக்குக் கிடைக்கும் சொத்துரிமை) குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள் 'மகளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதியும் சகோதரிக்கு (மீதி)ப் பாதியும் கிடையாது)' என்று கூறிவிட்டு, '(வேண்டுமானால்,) இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்று (கேட்டுப்) பாருங்கள். அன்னாரும் என் (கருத்தி)னையே பிரதிபலிப்பார்கள்' என்றார்கள். எனவே, இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் (சென்று) அபூ மூஸா(ரலி) அவர்களின் கூற்றைத் தெரிவித்து (இது குறித்து விளக்கம்) கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'இவ்வாறு (மகனின் மகளுக்கு சொத்தில் பங்கு இல்லை என்று) நானும் சொன்னால் நிச்சயம் நான் வழிதவறியவனாம்விடுவேன்; நான் நேர்வழியடைந்தவர்களில் ஒருவனாக இருக்கமாட்டேன். இந்த விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பையே நானும் அளிக்கிறேன்: மகளுக்குப் பாதியும் மகனின் மகளுக்கு ஆறில் ஒரு பாகமும் வழங்கப்படவேண்டும். அப்போதுதான் மூன்றில் இரண்டு பாகங்கள் நிறைவாகும். எஞ்சியிருப்பது சகோதரிக்கு உரியதாகும்' என்றார்கள். பின்னர் அபூ மூஸா(ரலி) அவர்களிடம் சென்று இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தோம். 

فقال لا تسألوني ما دام هذا الحبر فيكم

அப்போது, 'இந்தப் பேரறிஞர் (இப்னு மஸ்வூத்(ரலி) உங்களிடையே இருக்கும் வரை என்னிடம் (விளக்கம்) கேட்காதீர்கள்' என்று (புகழ்ந்து) சொன்னார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹ் புகாரி பாடம்:كتاب الفرائض தலைப்பு:  باب ميراث ابنته ابن مع  ابنته 2/997)

முஸ்னத் அஹ்மதி போன்ற நூல்களில் வரும் அறிவிப்பு 

قال أبو موسى لا تسألوني عن شيء ما دام هذا الحبر بين أظهركم. 

இந்த (இப்னு மஸ்ஊத் (ரளி)) தேர்ச்சி பெற்ற அறிஞர் உங்களுக்கு மத்தியில் இருக்கும் வரை என்னிடத்தில் மஸ்அலா கேட்காதீர்.
(ஆதாரம்:முஸ்னத் அஹ்மத்,1/464,أحاديث عبد الله بن مسعود)

கவனித்து பாருங்கள்! 

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் உயிரோடு வாழும் வரை அனைத்து மஸாயில்களிலும் அவர்களிடத்திலே கேளுங்கள் என்பதாக அபூமூஸா அஷ்அரி (ரளி) அவர்கள் தக்லீத் ஷஹ்ஷியை  (தனிநபரை பின்பற்றுவதை) வலியுறுத்தியதை புரிந்து கொள்ள முடிகிறது.

குறுக்கு கேள்வியும் நியாயமான பதிலும் 

ஹள்ரத் அபூமூஸா (ரளி) அவர்கள் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் இருக்கும்போது தன்னை தக்லீத் செய்வதைதான் தடுத்துள்ளார்கள்.எனினும்,
அவர்கள் மற்ற ஸஹாபாக்களிடத்தில் செல்வதை எவ்வாறு தடுத்திருக்க முடியும்? இதனை ஒருபோது இதன்மூலம் புரியமுடியாது.

நமது நியாயமான பதில்:

 அனைத்து நிகழ்வுகளும் கூபாவில் நடந்துள்ளது.அங்கு ஹள்ரத் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள்  மிகப்பெரிய அறிஞராக இருந்தார்கள்.ஹள்ரத் உஸ்மான் (ரளி) கிலாபத்தில் நடந்துள்ளது.அப்போது அலி (ரளி) அவர்களும் அங்கு வரவில்லை.அப்போது ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களை விட பெரிய அறிஞர் ஒருவரும் இல்லை.இதன்காரணமாக அபூமூஸா (ரளி) அவர்களின் வழிகாட்டுதல் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் வாழும் வரை அவர்களிடம் மட்டும் மஸாயில்களை கேளுங்கள்.அவர்களை விட்டுவிட்டு என்னிடத்தில் மற்றவரிடத்தில் செல்லாதீர் என்பதன் மூலம் தனிநபரை பின்பற்றுவதை தான் விளக்குகிறது.

முஃஜமுத்தப்ரானியில் வரும் 
அறிவிப்பு:
  பால்குடி மஸ்அலாவில் அபூமூஸா (ரளி) அவர்களை அணுகிய போதும் அதைதான் கூறினார்கள் 

فقال : لا تسألوني عن شيء ما أقام هذا بين أظهرنا من أصحاب رسول الله صلى الله عليه وسلم 

நமக்கு மத்தியில் இவர் (இப்னு மஸ்ஊத் ரளி) அவர்கள் இருக்கும்வரை எந்தவிஷயத்திலும் என்னிடத்தில் கேட்காதீர்.
எனவே அபூமூஸா(ரளி) அவர்கள் கூறியது தனிநபர் பின்பற்றுவதற்கு தெளிவான ஆதாரமாக உள்ளது.

(ஆதாரம்:மஜ்மஉஜ்ஜவாயித்,4/262,பாடம்:باب الرضاع)

Wednesday, July 21, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்/குற்றச்சாட்டுகளும் பதில்களும்/

மத்ஹபுகளின் அவசியம் தொடர்:9

ஸஹாபாக்களின் காலமும் தக்லீத்

ஸஹாபாக்களின் காலத்தில் தக்லீத் என்ற பெயரில் ஏராளமான அமல்கள் நடந்துள்ளது.ஸஹாபாக்களில் பலர் இல்மை பெறுவதில் அதிகமான நேரத்தை செலவழிக்கவில்லை.ஏதேனும் மஸ்அலாவில் தனது ஆய்வின் பேரில் முடிவு எடுத்து அமல் செய்யவில்லை.மற்ற ஆய்வு செய்யும் ஸஹாபாக்களிடத்தில் கேட்டு அமல் செய்தார்கள்.ஸஹாபாக்களில் தனிநபர்களை பின்பற்றுதல்,பொதுவான (முத்லக்)   தக்லீத் இரண்டு நிலைகளும் இருந்துள்ளதற்கு ஹதீஸ் நூல்களில் ஆதாரம் உள்ளது.குறிப்பாக பொதுவான தக்லீதின் ஆதாரங்கள் ஏராளமாக,தாரளமாக உள்ளது.அனைத்தையும் ஒன்று திரட்டினால் நூல் அளவிற்கு உருவாகிவிடும்.எனவே சுருக்கமான சில ஆதாரங்களை மட்டும் பார்ப்போம்.
ஆதாரம்:1
عن ابن عباس قال : خطب عمر بن الخطاب الناس بالجابية وقال : يا أيها الناس ، من أراد أن يسأل عن القرآن فليأت أبي بن كعب ، ومن أراد أن يسأل عن الفرائض فليأت زيد بن ثابت ، ومن أراد أن يسأل عن الفقه فليأت معاذ بن جبل ، ومن أراد أن يسأل عن المال فليأتني ; فإن الله جعلني له واليا وقاسما

ஹள்ரத் இப்னு அப்பாஸ் ரளி அவர்கள் கூறுகிறார்கள்:உமர் (ரளி) அவர்கள் ஜாபியா எனும் இடத்தில் உரை நிகழ்த்தினார்கள்.மக்களே!
குர்ஆன் குறித்து எதையேனும் கேட்க விரும்பினால்,உபை இப்னு கஃப் ரளி அவர்களை அணுகட்டும்.வாரிசு சட்டங்கள் குறித்து எதையேனும் கேட்க விரும்பினால்,ஜைத் இப்னு ஸாபித்தை (ரளி) அணுகட்டும்.பிக்ஹ் மார்க்க சட்டத்தை குறித்து கேட்க விரும்பினால்,முஆத் இப்னு ஜபல் (ரளி) அவர்களை அணுகட்டும்.செல்வத்தை குறித்து கேட்க விரும்பினால்,என்னை அணுகட்டும்.அல்லாஹ் என்னை அதற்கு பொறுப்பாளராக,பங்கிடுபவராக ஆக்கியுள்ளான். (ஆதாரம்:மஜ்மஉஜ்ஜவாயித் 1/135 தலைப்பு:أخذ كل علم من أهله )

இந்த உரையில் ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள் மக்களுக்கு உரையாற்றிய பொதுவான வழிகாட்டுதல் தப்ஸீர்,வாரிசுரிமை சட்டம்,பிக்ஹ் சட்டங்கள் போன்றவைகளில் தனிச்சிறப்பு பெற்று திகழும் உலமாக்களை அணுகி தெரிந்து கொள்ளவேண்டும்.அனைவரும் ஆதாரங்களை ஆராய்வது இயலாத காரியம்.ஒன்று, ஓரளவிற்கு மார்க்க ஞானம் பெற்றவரும் ஆய்வுத்திறன் உள்ளவர்களை அணுகி ஆதாரங்களை கற்றுக் கொள்வார்கள்.மற்றொன்று, மார்க்க ஞானம் இல்லாதவர் ஆய்வாளர்களின் சொல்லின் பேரில் நம்பிக்கை கொண்டு அமல் செய்வார்கள்.இதற்கான முன்னுதாரணத்தை பார்ப்போம்.

ஆதாரம்:2
ابن عمر أنه سئل عن الرجل يكون له الدين على الرجل إلى أجل، فيضع عنه صاحب الحق ويعجله الآخر، فكره ذلك ونهى عنه 

ஹள்ரத் ஸாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவர் இன்னொருவருக்கு குறிப்பிட்ட தவணையின் பேரில் கடனை திருப்பி செலுத்துவது கடமையாகும்.கடன் கொடுத்தவர் அதில் குறைத்து,கடன் வாங்கியவருக்கு விரைவாக செலுத்துவதையும் நிபந்தனையிடுவது குறித்து அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) அவர்களிடத்தில் கேட்கப்பட்டது.அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) அவர்கள் இதனை விரும்பவில்லை.அதனை தடுக்கவும் செய்தார்கள்.(ஆதாரம்:முஅத்தா இமாம் மாலிக் பக்கம்:279,ما جاء فى الربا فى الدين)

விளக்கம்:அப்துல்லாஹ் 1000 ரூபாய் ஜைதிடம் குறிப்பிட்ட தவணையில் செலுத்துவதாக வாங்கினார்.அப்போது ஜைத் கூறினார் 1000 ரூபாய்க்கு பகரமாக உடனடியாக இருநூறு ரூபாய் கொடுத்துவிடு என்கிற நிபந்தனை வைப்பது கூடாது.ஏனெனில் 1000 ரூபாய் தவணையின் பேரில் கடன் கொடுத்துவிட்டு உடனடியாக 200 ரூபாய் வாங்குவதில் 800 ரூபாய் வட்டி என்பதான தோற்றம் ஏற்படுகிறது.


உமர் (ரளி) அவர்களிடத்தில்  மஸ்அலா கேட்கப்பட்டுள்ளது.இதில்
தெளிவான ஹதீஸ் இல்லை.இதனால் ஹள்ரத் இப்னு உமர் (ரளி) அவர்கள் தனது ஆய்வை முன்வைத்து பதில் அளித்துள்ளார்கள்.இங்கு கேள்வி கேட்பவரும் ஆதாரத்தை கேட்கவில்லை.இப்னு உமர் (ரளி) அவர்களும் ஆதாரத்தை கூறவில்லை.இதற்கு பெயர்தான் தக்லீத் என்று சொல்லப்படும்.

ஆதாரம்:3
عبد الرحمن ، قال: سألت محمد بن سيرين عن دخول الحمام، فقال : كان عمر بن الخطاب رضى الله عنه يكرهه 

அப்துர்ரஹ்மான் அவர்கள் கூறுகிறார்கள் நான் முஹம்மத் இப்னு ஸீரின் ரஹ் அவர்களிடத்தில் குளியலறைக்கு (குளிப்பதற்கு) செல்வது கூடுமா? ஹள்ரத் உமர் ரளி அவர்கள் அதனை வெறுத்தார்கள்.(ஆதாரம்:அல்மதாலிபுல் ஆலியா லில் ஹாபிள் இப்னு ஹஜர் 1/51,ஹதீஸ் எண்:187)

விளக்கம்:குளியலறை என்பது அறியாமைக்காலத்தில் மிகப்பெரியதாக இருந்தது.அதிகமான மக்கள் ஒன்றாக நிர்வாணமாக குளிப்பார்கள்.இதில் ஆண்கள் கைலி அணிந்து குளிப்பதை வலியுத்தினார்கள்.பொதுவாக பெண்கள் அதில் குளிப்பதை தடுத்தார்கள்.

இங்கு ஹள்ரத் முஹம்மத் இப்னு ஸீரின் சிறந்த தாபியி அவர்கள், உமர் (ரளி) அதனை வெறுத்தார்கள் என்பதை மட்டும் கூறுவது போதுமானது எனக் கருதினார்கள்.இதற்கு ஆதாரத்தை கூறவில்லை.எனினும், இது குறித்து உமர் (ரளி) அவர்களே நபியிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ் உண்டு.

ஆதாரம்:4
عن سليمان بن يسار أن أبا أيوب الأنصاري خرج حاجا حتى إذا كان بالبادية من طريق مكة أضل رواحله، ثم إنه قدم على عمر بن الخطاب يوم النحر فذكر ذلك له فقال له عمر: إصنع كما يصنع المعتمر ثم قد حللت، فإذا أدركت الحج قابلا فاحجج وأهد ما استيسر من الهدى

ஹள்ரத் ஸுலைமான் இப்னு யஸார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:ஹள்ரத் அபூஅய்யூப் அன்சாரி (ரளி) அவர்கள் ஹஜ்ஜை நாடி புறப்பட்டார்கள்.மக்காவின் வழியில் நாஜியா இடத்தை அடைந்த சமயம் அவர்களின் வாகனம் தொலைந்துவிட்டது.அன்னார் துல்ஹஜ் பத்தாம் நாள் தான் (ஹஜ் முடிந்துவிட்டது) உமர் (ரளி) அவர்களிடத்தில் வந்தடைந்தார்கள்.அவரிடத்தில் நடந்ததைக் கூறினார்கள்.ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள் உம்ராவின் அமலை நிறைவேற்றுங்கள்.பிறகு ஹலால் ஆகுங்கள்.ஹஜ்ஜின் காலம் வரும்போது மீண்டும் ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள்.
சக்தியிருந்தால் ஹதியை (பலிப்பிராணி) அறுத்துப் பலியிடுங்கள்.
(ஆதாரம்:முஅத்தா இமாம் மாலிக் பக்கம்:149,هدى من فاته الحج)

இங்கும் ஹள்ரத் அபூஅய்யூப் அன்சாரி (ரளி) அவர்கள் ஆதாரத்தை கேட்கவில்லை.மாறாக,உமர் (ரளி) அவர்களின் இல்ம்,ஆய்வின் மீது நம்பிக்கை கொண்டு அமல் செய்தார்.இதற்கு தக்லீத் என சொல்லப்படும்.

ஆதாரம்:5
 عن مصعب بن سعد قال: كان أبي إذا صلى في المسجد تجوز وأتم الركوع والسجود،وإذا صلى في البيت أطال الركوع والسجود والصلاة قلت: يا أبتاه إذا صليت في المسجد جوزت وإذا صليت في البيت أطلت؟ قال: يا بني إنا أئمة يقتدى بنا.

ஹள்ரத் முஸ்அப் இப்னு ஸஃத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எனது தந்தை (ஸஃது இப்னு அபிவக்காஸ்) மஸ்ஜிதில் தொழும் போது ருகூஃ,ஸுஜுத்,தொழுகையை 
பூர்த்தியாக நிறைவேற்றுவார்கள்.எனினும், சுருக்கமாக நிறைவேற்றுவார்கள்.வீட்டில் தொழும் போது ருகூஃ,சுஜுத், தொழுகையை நீட்டி நிறைவேற்றுவார்கள்.நான் கேட்டேன் தந்தையே! மஸ்ஜிதில் தொழுதால் சுருக்கமாகவும்,வீட்டில் தொழுதால் நீட்டி தொழுகிறீர்களே?ஹள்ரத் ஸஃத் (ரளி) அவர்கள் கூறினார்கள்; மகனே!
நாம் இமாம்.மக்கள் நம்மை பின்பற்றுகிறார்கள்.(நாம் நீட்டி தொழுவதை மக்கள் பார்த்தால் அதனை அவசியம் என்பதாக விளங்கிகொண்டு பேண ஆரம்பிப்பார்கள்.) (ஆதாரம்:மஜ்மஉஜ்ஜவாயித் லில் ஹைஸமி 1/182,தலைப்பு:باب الاقتداء بالسلف )

பொது மக்கள் ஸஹாபாக்கள் கூறுவதை மட்டும் தக்லீத் செய்யவில்லை.மாறாக பெரிய ஸஹாபாக்களின் அமலை மட்டும் பார்த்து தக்லீத் செய்தார்கள் எனும்போது,ஆதாரங்களை ஆய்வு செய்யும் கேள்வியே எழாது.இதனால் தான் பெரிய ஸஹாபாக்கள் தங்களது அமலில் நுணுக்கமாக பேணிக்கையை கடைப்பிடித்தார்கள்.

ஆதாரம்:6
 أن عمر بن الخطاب رأى على طلحة بن عبيد الله ثوبا مصبوغا وهو محرم . فقال عمر : ما هذا الثوب المصبوغ يا طلحة ؟ فقال طلحة : يا أمير المؤمنين . إنما هو مدر . فقال عمر : إنكم أيها الرهط أئمة [ ص: 37 ] يقتدي بكم الناس . فلو أن رجلا جاهلا رأى هذا الثوب ، لقال : إن طلحة بن عبيد الله كان يلبس الثياب المصبغة في الإحرام . فلا تلبسوا أيها الرهط شيئا من هذه الثياب المصبغة

ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் அவர்கள் இஹ்ராமில் நிறமுள்ள ஆடையை அணிந்துள்ளதை பார்த்தார்கள்.தல்ஹா! நிறம் உள்ள ஆடையாக உள்ளதே? என உமர் (ரளி) கேட்டார்கள்.ஹள்ரத் தல்ஹா அவர்கள், அமீருல் முஃமினீன்! மங்கலான நிறம் உள்ளதை தான் அணிந்துள்ளேன் (வாசனை நீங்கிய ஆடையை அணியலாம்) என பதில் அளித்தார்கள்.ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள் கூறினார்கள்; நீங்கள் இமாம்.மக்கள் உங்களை பின்பற்றுகிறார்கள்.அறியாத மனிதர் இந்த ஆடையை பார்த்து, தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் அவர்கள் இஹ்ராமில் நிறம் உள்ள ஆடையை அணிந்துள்ளார் என கூறுவார்.எனவே இது போன்ற நிறம் உள்ள ஆடைகளை அணியாதீர்கள்.
(ஆதாரம்:அல்இஸ்தீஆப் லி இப்னு அப்துல்பர் 2/315, அல்இஸாபா லில் ஹாபிள் இப்னு ஹஜர் 2/361)

மேற்கூறப்பட்ட நிகழ்வில் நமக்கு தெளிவாக  புரிகிறது.
ஸஹாபாக்களில் மார்க்க ஞானம்,பிக்ஹில் தனித்துவம் பெற்று விளங்குபவர்களின் தீர்ப்புக்கள், ஆய்வுகள் மட்டுமின்றி செயல்களும் பின்பற்றப்பட்டது.இவைகளில் ஆதாரங்களை அறிய வேண்டிய கேள்வியே பிறக்காது.இதனால் தான் பெரும் ஸஹாபாக்கள் தங்களது அமல்களில் மிகவும் பேணுதலாக இருந்தார்கள்.தங்களை போன்றவர்களையும் பேணுதலை கடைப்பிடிக்க வலியுறுத்தினார்கள்.


ஆதாரம்:7
إني قد بعثت عمار بن ياسر أميراً، وعبد الله بن مسعود معلماً ووزيراً، وهما من النجباء من أصحاب رسول الله من أهل بدر، فاقتدوا بهما وأطيعوا واسمعوا قولهما

ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள்,ஹள்ரத் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களை கூபாவிற்கு அனுப்பினார்கள்.மேலும் கூபாவாசிகளுக்கு கடிதம் எழுதினார்கள்.நான் உங்களிடத்தில் அம்மார் இப்னு யாஸிர் (ரளி) அவர்களை அமீராக,(தலைவராக) அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களை ஆசிரியராக, மந்திரியாக அனுப்பியுள்ளேன்.இருவரும் பெருமானாரின் உயர்வுமிக்க தோழர்களாக திகழ்பவர்கள்.பத்ருப்போரில் கலந்துக்கொண்டவர்கள்.
இருவரின் சொல்லையும் பின்பற்றுங்கள்.இருவரின் பேச்சையும் கேளுங்கள்.(ஆதாரம்:

ஆதாரம்:8
فمن عرض له منكم قضاء بعد اليوم فليقض بما في كتاب الله فإن جاء أمر ليس في كتاب الله فليقض بما قضى به نبيه صلى الله عليه وسلم فإن جاء أمر ليس في كتاب الله ولا قضى به نبيه صلى الله عليه وسلم فليقض بما قضى به الصالحون فإن جاء أمر ليس في كتاب الله ولا قضى به نبيه صلى الله عليه وسلم ولا قضى به الصالحون فليجتهد رأيه

ஹள்ரத் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் மார்க்க தீர்ப்பின் உசூல்களை கூறியவாறு சொன்னார்கள் உங்களில் ஒருவருக்கு தீர்ப்பளிக்கும் (தேவை) ஏற்பட்டால் அல்லாஹ்வின் வேதத்தின்படி தீர்ப்பளிக்கட்டும்.. அதுகுறித்து குர்ஆனில் இல்லையைனில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லை வைத்து தீர்ப்பளிக்கட்டும்.அது குறித்து குர்ஆன்,நபியின் வழிமுறையில் இல்லையெனில் நல்லோர்களின் தீர்வுகளுக்கு ஏற்ப தீர்ப்பளிக்கட்டும்.அல்லாஹ்வின் வேதம்,நபியின் வழிமுறை,நல்லோர்களின் தீர்வுகள் அது குறித்து இல்லையெனில் தனது ஆய்வை முன்வைத்து ஆராயட்டும்.(ஆதாரம்:ஸுனன் நஸாயி 2/305,பாடம்:ادب الاقضية الحكم باتفاق أهل العلم )

இந்த அறிவிப்பில் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் நான்கு நிலைகளை விளக்குகிறார்கள்.
முதலாவது, அல்லாஹ்வின் வேதம் 
இரண்டாவது,சுன்னத்
மூன்றாவது,நல்லோர்களின் தீர்வுகள்
நான்காவது, ஆய்வு செய்வது முதலில் அல்லாஹ்வின் வேதம் பிறகு சுன்னத் என்பது அல்லாஹ்வின் வேதத்தை அணுகி சுன்னத்தை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதாக சுய அறிவுடையவர் எவரும் கூறமாட்டார்.ஏனெனில் அல்லாஹ்வின் வேதத்திற்கு தனது அறிவால் விளக்கம் கூறி அதற்கு எதிராக சுன்னத் உள்ளது என வாதிடுவது முறையில்லை.மாறாக அல்லாஹ்வின் வேதத்தின் விளக்கத்தை சுன்னத்தின் ஒளியில் புரியவேண்டும்.விபச்சாரத்தின் தண்டனை குர்ஆனில் 100 கசையடி என்பதாக உள்ளது.இதனால் சுன்னத்தின் பக்கம் செல்ல தேவையில்லை என்பதாக கூறி கல்லெறிதல் குர்ஆனுக்கு எதிராக இருப்பதால் ஆதாரமற்றது என்பதாக வாதிடுவது ஒன்றுப்பட்ட உம்மத்திற்கு மாற்றமானது என்பது வெளிப்படுகிறது.இதே போன்றுதான் ஆய்வாளர்களான நல்லோர்களின் தீர்வுகள் மூன்றாவது அந்தஸ்தில் இருப்பது குர்ஆன்,சுன்னாவை விளக்கியவாறு அவர்களின் தீர்ப்புகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்பதாக புரிந்து கொள்ளக்கூடாது.மாறாக குர்ஆன்,சுன்னாவின் விளக்கமானது நல்லோர்களின் தீர்ப்புகளுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம்.தக்லீத் என்பதும் இவ்வாறுதான் அமைந்துள்ளது.அதாவது குர்ஆன்,சுன்னாவில் உறுதிமிக்க,தீர்க்கமான ஆதாரங்கள் தெளிவாக இல்லாத போதும்,மாறுப்பட்ட கருத்துக்களுக்கு வாய்ப்பு இருக்கும் போதும் குறிப்பான அர்த்தத்தை அறிவதற்கு முஜ்தஹிதின் ஆய்வாளர் சொல்லை ஏற்கவேண்டும்.
  
மேலும் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களின் கட்டளையானது ஆய்வாளக்குரியது.
அதுமட்டுமில்லாமல் தக்லீத் அறியாதவர் மட்டுமின்றி உலமாக்கள் தனது ஆய்வு கருத்தின் மீது நம்பிக்கை கொள்ளாமல் தன்னை விட சிறந்த முன்னோர்களின் பக்கம் திரும்பவேண்டும்.
(உலமாக்களின் தக்லீத்,
அறியாதவர்களின் தக்லீத் இரண்டிற்கும் மத்தியில் வித்தியாசம் உண்டு.இன்ஷா அல்லாஹ் பிறகு பார்ப்போம்.)

ஆதாரம்:9
كان ابن عمر لا يقرأ خلف الإمام ، قال : فسألت القاسم بن محمد عن ذلك ، فقال : إن تركت فقد تركه ناس يُقتدى بهم ، وإن قرأت فقد قرأناس يُقتدى بهم و كان القاسم ممن لا يقرء 

ஹள்ரத் ஸாலிம் இப்னு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு உமர் (ரளி) அவர்கள் இமாமிற்கு பின்னால் கிராஅத் ஓதமாட்டார்கள்.எனவே அதனை குறித்து காஸிம் இப்னு முஹம்மத் அவர்களிடத்தில் கேட்டேன்.காஸிம் அவர்கள் கூறினார்கள்; நீர் (இமாமின்  பின்னால் கிராஅத் ஓதுவதை ) விட்டுவிட்டாலும் அனுமதி உண்டு.ஏனெனில் பின்பற்றப்படுபவர்களும் கிராஅத் ஓதுவதை விட்டு இருக்கிறார்கள்.நீர் (இமாமின்  பின்னால் கிராஅத்) ஓதினாலும் அனுமதி உண்டு.ஏனெனில் பின்பற்றப்படுபவர்களும் கிராஅத் ஓதியுள்ளார்கள்.மேலும் காஸிம் அவர்களே இமாமிற்கு பின்னால் கிராஅத் ஓதமாட்டார்கள்.(ஆதாரம்:முஅத்தா இமாம் முஹம்மத் பக்கம்:96, தலைப்பு:باب القراءة خلف الإمام )

ஹள்ரத் காஸிம் இப்னு முஹம்மத் மூத்த தாபியீன்களிலும், மதீனாவின் பிரபல்யமான புகஹாக்களில் ஏழு நபர்களில் உள்ளவர்.ஆதாரங்கள் முரணாக இருக்கும் போது ஏதேனும் ஒரு இமாமை (நல்லெண்ணத்தில்) பின்பற்றுவது அனுமதியுள்ளது என்பதை அன்னாரின் சொல் தெளிவாக விளக்குகிறது.

ஆதாரம்:10
وقد سئل الحسن مرّة: «أنشرب من ماء هذه الساقية فى المسجد؟ فإنها صدقة؟ فقال الحسن: قد شرب أبو بكر وعمر رضي الله عنهما من سقاية أم سعد ، فمه ؟

கன்ஜுல் உம்மாலில் தபகாது இப்னு ஸஃத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பானது வந்துள்ளது 

ஹள்ரத் ஹஸன் (ரஹ்) அவர்களிடத்தில் ஒருவர் கேட்டார்.நீங்கள் மஸ்ஜிதிலிருந்து தண்ணீர் குடிக்கிறீர்களே? ஏனெனில் அது தர்மமாக இருக்கிறது.ஹஸன் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்;ஹள்ரத் அபூபக்கர் (ரளி), ஹழ்ரத் உமர் (ரளி) உம்முஸஃதில் (மஸ்ஜிதில்) தண்ணீர் அருந்தியுள்ளார்கள். எனவே (நான் குடித்தால்) என்ன ஆகும்? (ஆதாரம்:கன்ஜுல் உம்மால் 3/318,பாடம்:الزكوة )

ஹள்ரத் ஹஸன் (ரஹ்) அவர்கள், ஹள்ரத் அபூபக்கர் (ரளி),ஹள்ரத்‌ உமர் (ரளி) அவர்களின் செயலை தவிர வேறு ஆதாரத்தை கூறவில்லை.இரு பெரியோர்களையும் தக்லீத் செய்வதை போன்றாகும்.
ஆதாரம்:11
والذين حفظت عنهم الفتوى من أصحاب رسول الله صلى الله عليه وسلم مائة ونيف وثلاثون نفسا ، ما بين رجل وامرأة

அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; 
130 மேற்பட்ட ஸஹாபாக்களின்
பத்வாக்கள் (தீர்ப்புகள்) பாதுகாக்கப்பட்டுள்ளன.
அவர்களில் ஆண்களும்,பெண்களும் உள்ளனர்.
(ஆதாரம்:இஃலாமுல் முவக்கியீன் லி இப்னுல் கைய்யிம் 1/9)

ஸஹாபாக்களின் பத்வாக்களில் இருவிதமான நடைமுறைகளும் இருந்தன.சில சமயம் அவர்களின் தீர்ப்புகளுடன்  குர்ஆன்,
சுன்னாவிலிருந்து ஆதாரம் இருக்கும்.சில சமயம் ஆதாரத்தை கூறாமல் தீர்ப்புகள் மட்டும் இருக்கும்.இது குறித்து உதாரணங்களை முன்னால் கூறிவிட்டோம்.முஅத்தா இமாம் மாலிக்,கிதாபுல் ஆஸார் லில் இமாம் அபூ ஹனீபா,முஸன்னப் அப்துர்ரஜ்ஜாக்,முஸன்னப் இப்னு அபீஷைபா,ஷர்ஹு மஆனில் ஆஸார் லித்தஹாவி,அல்மதாலிபுல் ஆலியா லில் ஹாபிள் இப்னு ஹஜர் போன்றவர்களின் நூல்களில் அதிகப்படியான ஆதாரங்கள் உண்டு.








Sunday, July 18, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்/குற்றச்சாட்டுகளும் பதில்களும்/தக்லீத்

மத்ஹபுகளின் அவசியம் 
தொடர்: 8


ஹதீஸின் ஒளியில் தக்லீத் 

குறுக்கு கேள்வியும் நமது பதிலும் 
ஸஹாபாக்களை பின்பற்றுவதன் அர்த்தமானது பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நிரூபணமான விஷயத்தில்தான்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நிரூபணமாகாத காரியங்களை  ஸஹாபாக்கள் நடைமுறைப்படுத்தியிருந்தாலும் மார்க்கமாகாது.பின்பற்றுதல் என்பது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து வந்தது மட்டும்தான்.அண்ணலாரின் சுன்னத்திற்கு தோதுவாக,பொருத்தமாக இருப்பதுதான்.எனவே ஸஹாபாக்கள் மார்க்க ஆதாரமில்லை.எனவே நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களில் (اقتداء) பின்பற்றுதல் என்பது தக்லீதை  குறிக்காது.

நமது பதில்:
 ஸஹாபாக்கள் மார்க்க ஆதாரம் என்பதற்கும் தக்லீத் செய்வதற்கும் வலுவான ஆதாரம் 

عن العرباض بن سارية رضي الله عنه، قال: وعظنا رسول الله صلى الله عليه وسلم موعظة وجلت منها القلوب، وذرفت منها العيون، فقلنا يا رسول الله؛ كأنها موعظة مودع، فأوصِنا، قال: «أوصيكم بتقوى الله والسمع والطاعة، وإن تأمر عليكم عبد، وإنه من يعش منكم فسيرى اختلافاً كثيراً؛ فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، عضوا عليها بالنواجذ، وإياكم ومحدثات الأمور، فإن كل بدعة ضلالة

நபி (ஸல்) கூறினார்கள்:

நிச்சயமாக எனக்குப் பின்னால் வாழ்பவர்கள் ஏராளமான கருத்து வேறுபாடுகளைக் காண்பர். அப்போது உங்கள் மீது கடமையானது எனது சுன்னத்தையும் நேர்வழி நின்ற கலீஃபாக்களின் சுன்னத்தையும் பற்றிப் பிடிப்பதாகும். அவற்றைக் கடைவாய்ப் பற்களால் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் (மார்க்கத்தில்) நூதன காரியங்களை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள். நிச்சயமாக (மார்க்கத்தில்) புதியவை அனைத்தும் பித்அத்துக்களாகும் பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் ஆகும்.
[ஹதீஸின் ஒரு பகுதி]
(ஆதாரம்:அஹ்மத், அபூதாவூது, திர்மிதீ, இப்னு மாஜா)

இந்த ஹதீஸ் பல்வேறு அறிவிப்பாளர்கள் தொடருடன் ஆதாரப்பூர்வமாக வந்துள்ளது.அதில் ஒரு அறிவிப்பாளர் தொடரை மட்டும் ஆய்வு செய்வோம்.

அறிவிப்பாளர் தொடர்
1)அபுல் அப்பாஸ் முஹம்மத் இப்னு யஃகூப் 
(தத்கிரதுல் ஹுப்பாள் 73/3)

அல்லாமா தஹபி (ரஹ்) அவர்கள் பலமானவர் என்பதாக கூறுகிறார்கள்.
2)அப்பாஸ் இப்னு முஹம்மத் தவ்ரி 

ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) பலமானவர்,ஹாபிள் என்பதாக கூறுகிறார்கள்.(தக்ரீப் 191)

3)அபூஆஸிம் ளஹ்ஹாக் இப்னு முஹ்லத்
ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள் பலமானவர்,வலுவானவர் என்பதாக நற்சான்று தந்துள்ளார்.(தக்ரீப் 179)

4)ஸவ்ர் இப்னு யஜீத் 

இப்னு ஸஃத்,அஹ்மத் இப்னு ஸாலிஹ்,யஹ்யா இப்னு ஸயீத், ஈஸா இப்னு யூனுஸ்,வலீத் இப்னு முஸ்லிம், இப்னு மயீன்,முஹம்மத் இப்னு அஃவ்ப், நஸாயி, அபூஹாதிம், இப்னு அதி, இப்னு ஹிப்பான், இஜ்லி,ஸாஜி போன்ற அறிஞர்கள் பலமானவர் என்பதாக நற்சான்று அளித்துள்ளனர்.(தஹ்தீபுத்தஹ்தீப் 1/172)

5)ஹாலித் இப்னு ஸஃத்

இஜ்லி,யஃகூப் இப்னு ஷைஃபா, முஹம்மத் இப்னு ஸஃத்,இப்னு கராஷ், நஸாயி,இப்னுஹிப்பான் போன்ற அறிஞர்கள் பலமானவர் என்பதாக சான்று அளித்துள்ளனர்.
(தஹ்தீப் 3/119)

6) அப்துர்ரஹ்மான் இப்னு அம்ர் ஸலமி

 ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் மக்பூல் ஏற்கத்தக்கவர் என்பதாக கூறியுள்ளார்கள்.(தக்ரீப் 234)

7)ஹழ்ரத் இர்பாள் இப்னு ஸாரியா ஸஹாபி 
(தஜ்ரீது அஸ்மாவுஸ்ஸஹாபா லித்தஹபி 1/407)

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எனது வழிமுறையையும்,எனது குலபாயே ராஷிதீன்களின் வழிமுறையையும் பின்பற்றுங்கள் என்பதாக கூறிய வாசகத்தை ஊன்றி கவனித்தால் எதார்த்தம் எளிதாக புரியும்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத் மட்டும் மார்க்க ஆதாரமாக இருந்தால் குலபாயே ராஷிதீன்களின் சுன்னத் என்பதை தனித்து ஏன் கூறவேண்டும்?

மது அருந்தியவனுக்கு தண்டனை குறித்து ஹள்ரத் அலி (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்: 
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நாற்பது கசையடி கொடுத்தார்கள்.ஹள்ரத் அபூபக்கர் ரளி அவர்கள்  நாற்பது கசையடி கொடுத்தார்கள்.ஹள்ரத் உமர் ரளி அவர்கள் எண்பது கசையடி கொடுத்தார்கள்.(இதில்) ஒவ்வொன்றும் சுன்னத்து தான்.(ஆதாரம் முஸ்லிம் 2/72)

இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்.ஹள்ரத் உமர் (ரளி) அவர்களின் அமலானது வெளிப்படையில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைக்கு எதிரானது.எனினும்,அலி (ரளி) அவர்கள் அதனை சுன்னத் என்பதாக கூறுகிறார்கள்.எனவே கலீபாக்களின் சுன்னத்தும் ஆதாரம் என்பதும், நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நிரூபணமாகாத காரியத்தில் அவர்களை பின்பற்றலாம் என்பதை புரிய முடிகிறது.

இரண்டாவது ஆதாரம்:


எனது உம்மத்தினர் 73 பிரிவினராகப் பிரிவார்கள். அவர்களில் ஒரு கூட்டத்தினரைத் தவிர ஏனைய அனைவரும் நரகம் செல்வர் என்று கூறினார்கள்: அப்போது அல்லாஹ்வின் தூதரே அவர்கள் (அந்த ஒரு கூட்டம்) யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் நானும் எனது ஸஹாபாக்களும் இருக்கின்ற இந்த கொள்கையைப் பின்பற்றி நடப்பவர்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரழி)
( நூல்:திர்மிதீ)

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையை மட்டும் கூறலாம் ஸஹாபாக்களின் வழிமுறையை தனித்து கூறப்பட்டுள்ளது.
ஸஹாபாக்களையும் பின்பற்றவேண்டும்.அவர்களின் வழிமுறையும் மார்க்க ஆதாரமாக உள்ளது என்பதையும் புரியமுடிகிறது.

சந்தேகமும் நிவர்த்தியும் 

இந்த ஹதீஸின் மற்றொரு அறிவிப்பாளர் தொடரில் "நபியவர்கள்,இன்றைய தினம் நானும் எனது ஸஹாபாக்களும் இருக்கின்ற இந்த கொள்கையைப் பின்பற்றி நடப்பவர்கள் என்று பதிலளித்தார்கள்.

  எனவே ஸஹாபாக்களை பின்பற்றுவதன் அர்த்தமானது பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நிரூபணமான விஷயத்தில்தான்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நிரூபணமாகாத காரியங்களை  ஸஹாபாக்கள் நடைமுறைப்படுத்தியிருந்தாலும் மார்க்கமாகாது என்பதை புரிய முடிகிறதே? 

இன்றைய தினம் எனும் வாசகம் உள்ள அறிவிப்பாளர் தொடர் ஆதாரப்பூர்வமானதா? 
என்பதை ஆய்வு செய்துதான்  கூறமுடியும்.எனினும்,ஒரு வாதத்திற்கு ஆதாரப்பூர்வமாக இருந்தாலும் அவர்களுக்கும் முழுமையான ஆதாரமாகாது.ஏனெனில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஓர் அமலில் தெளிவான ஆதாரமில்லை.எனினும்,
ஸஹாபாக்கள் அதனை அமல்செய்துள்ளனர். நாமும் அமல் செய்யலாம் என்பதை தான் இந்த ஹதீஸும் பேசுகிறது.எனவே இதன்பேரில் அமல் செய்ய மத்ஹப் மறுப்பாளர்கள் தயாரா? இந்த ஹதீஸும் அவர்களுக்கு எதிரான ஆதாரமாக உள்ளது.

இதனை எளிதாக புரிந்து கொள்ள ஓர் ஆதாரம்: (இணையத்தில் இருந்து எடுத்த தகவல்)

//ஒரு வருடம் பூர்த்தியாகாதவரை ஜகாத் இல்லை!

அபுதாவூத், பைஹகீ 4\95, 4\137 ஆகிய நாட்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. “ஒரு வருடம் முழுமையடையும் வரை ஜகாத் இல்லை” என்ற ஹதீஸை விமர்சித்து,

ஏகத்துவம் கூறுகிறது:

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் நம்பகமானவர்கள் இடம் பெறுவதால் இது ஆதாரப்பூர்வமானது என நாஸிருத்தீன் அல்பானி கூறுகின்றனர். இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்பதைக் கவனித்த அல்பானீ இதிலுள்ள மற்றொரு குறைபாட்டைக் கவனிக்கத் தவறி விட்டார்.

எனவே இதுபற்றி விரிவாக நாம் விளக்கியாக வேண்டும். இதன் அறிவிப்பாளர் தொடர் பின்வருமாறு அமைந்துள்ளது.

1. அலீ

2. ஹாரிஸ் அல் அஃவர் – ஆஸிம் பின் ளமுரா

3. அபூ இஸ்ஹாக்

4. ஸுஹைர்

5. அப்துல்லாஹ் பின் முஹம்மது

(திரும்பவும் எழுதியுள்ளனர்) அதாவது அப்துல்லாஹ் பின் முஹம்மது என்பவர் தனக்கு ஸுஹைர் கூறியதாகத் தெரிவிக்கிறார். ஸுஹைர் என்பவர் தனக்கு அபூ இஸ்ஹாக் கூறியதாகக் குறிப்பிடுகிறார். அபூ இஸ்ஹாக் என்பவர் தனக்கு ஆஸிம், ஹாரிஸ், ஆகிய இருவர் கூறியதாகக் கூறுகிறார். ஆஸிம், ஹாரிஸ் ஆகிய இருவரும் தமக்கு அலீ(ரழி) கூறியதாக குறிப்பிடுகிறார்கள்.

இந்தத் தொடரில் அலீ(ரழி) அவர்களிடம் கேட்ட இருவரில் ஹாரிஸ் என்பவர் பெரும் பொய்யர் என்றாலும் அவர்களிடம் செவியுற்ற மற்றொரு அறிவிப்பாளர் ஆஸிம் பின் ளமுரா என்பவர் ஏற்கத் தக்கவராவார். எனவே இந்த அடிப்படையில் இரு சரியான அறிவிப்பாளர் தொடரைக் கொண்டதாக அமைந்து விடுகின்றது. எனவே இது சரியான அறிவிப்புத்தான் என்று அல்பானி கூறுகிறார்.

ஆனாலும் அலீ(ரழி) அவர்கள் தமது சொந்தக் கூற்றாக இதைக் கூறினார்களா? அல்லது நபி(ஸல்) அவர்கள் கூற்றைத் தெரிவிக்கிறார்களா? இது பற்றி மேற்கண்ட ஹதீஸில் திட்டமாகக் கூறப்படவில்லை.

அலீ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் கூற்றை எடுத்துக் கூறுவதாகத்தான் நினைக்கிறேன். என்று ஸுஹைர் என்பவர் யூகத்தின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது . நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றால் அதை அலீ(ரழி) அவர்கள் தெளிவாகக் கூறி இருக்க வேண்டும். ஆனால் ஸுஹைர் என்பவர் யூகமாகக் கூறுவதால் இது நபிமொழியாக ஆகாது.

எனவே இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்றாலும் இக்கூற்று அலீ(ரழி) அவர்களின் சொந்தக்கூற்றே ஆகும். எனவே இதையும் ஆதாரமாகக் கொண்டு எந்த முடிவும் எடுக்க முடியாது.

ஏகத்துவம், செப்டம்பர் 2005, பக். 39,40//

 ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு வருடந்தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது ஒரு வாதத்திற்கு அலி (ரளி) அவர்களின் கூற்று என வைத்துக்கொள்வோம்.அதே சமயத்தில் ஜகாத் கொடுக்க தேவையில்லை என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லை.மேலும் அலி (ரளி) அவர்களின் கருத்திற்கு எதிரான ஆதாரமும் இல்லை.பீஜேவின் வாதம் ஜகாத் கொடுக்க தேவையில்லை.இப்பொழுது அலி (ரளி) அவர்களின் சொல்லை எடுப்பதா? அல்லது பீஜேவின் சொல்லை எடுப்பதா? எது அறிவார்ந்த செயல்? நிச்சயமாக அலி (ரளி) அவர்களின் சொல்லை எடுத்து அமல் செய்வதுதான் பொருத்தமானது என்பதை உண்மையான முஃமீன் மறுக்கமுடியாது.

Thursday, July 15, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்/குற்றச்சாட்டுகளும் பதில்களும்/தக்லீத்


மத்ஹபுகளின் அவசியம்  தொடர்:7


ஹதீஸின் ஒளியில் தக்லீத் 

மூன்றாவது ஆதாரம்:

அபூஹுரைரா (ரளி) அவர்கள் கூறினார்கள்:
من أفتى بغير علم كان اثمه على من افتاه 

மார்க்க ஞானமின்றி தீர்ப்பளிக்கிறாரோ அதனின் பாவமானது  தீர்ப்பளிப்பரின் மீதுதான் உண்டாகும்.(ஆதாரம்: அபூதாவூத்)

இந்த ஹதீஸ் தக்லீத் உண்டு என்பதற்கு மிகப்பெரும் ஆதாரமாகும்.ஏனெனில் மார்க்கத்தில் தக்லீத் அனுமதி இல்லையெனில்,தீர்ப்பின் பேரில் ஆய்வின்றி அமல் செய்வது கூடாது எனில் அனைத்து பாவங்களும் தீர்ப்பளிப்பவரின் மீது ஏன் ஏற்படுகிறது? மார்க்க சட்டம் கேட்பவரின் மீதும் ஏன் குற்றம் உண்டாகவில்லை? தீர்ப்பின் உண்மை நிலையை ஆய்வு செய்யாமல் பின்பற்றியதால் சட்டத்தை கேட்டவரின் மீதும் குற்றம் ஏற்படவேண்டுமல்லவா? எனவே மார்க்க ஞானம் இல்லாதவர் 
ஆய்வு செய்வது கடமையில்லை என்பதும், அறிஞர் ஞானமின்றி தீர்ப்பளித்தால் அவர் மீதுதான் குற்றம் உண்டாகும் என்பதை ஹதீஸிலிருந்து புரியமுடிகிறது.

நான்காவது ஆதாரம்:

عَنْ  إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْعُذْرِيِّ  ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :  يَحْمِلُ هَذَا الْعِلْمَ مِنْ كُلِّ خَلَفٍ عُدُولُهُ يَنْفُونَ عَنْهُ تَحْرِيفَ الْغَالِينَ وَانْتِحَالَ الْمُبْطِلِينَ وَتَأْوِيلَ الْجَاهِلِينَ

ஹள்ரத் இப்ராஹிம் இப்னு அப்துர் ரஹ்மான் உத்ரி (ரளி) அறிவிக்கிறார்கள்:
பின்னால் வரும் நம்பிக்கையானவர்கள் (அறிஞர்கள்) இல்மை சுமப்பவர்கள் மார்க்கத்தில் வரம்புமீறுபவர்களின் தஹ்ரீபை,(திருக்குர்ஆனின் கருத்துக்கு மாற்றமான வேறு அர்த்தம் செய்வது) அசத்தியவாதிகளின் பொய்யான வாதத்தை, அறியாதவர்களின் வலிந்துறையை (மாற்றுவிளக்கங்களை) அகற்றுவார்கள்.
(ஆதாரம் பைஹகி பில் மத்கல்)

இந்த ஹதீஸில் அறியாதவர்களின் மாற்று விளக்கங்களை பழித்து கூறப்பட்டுள்ளது.அதற்கு மறுப்பளிப்பது மார்க்க அறிஞர்களின் கடமையாகும்.எனவே குர்ஆன்,சுன்னாவில் பூரணமான ஞானமும்,ஆழ்ந்த புலமையும் இல்லாதவர் தனது அறிவின் மீது நம்பிக்கை வைத்து மாற்று விளக்கம் தராமல் அறிஞர்களை அணுகவேண்டும்.இதற்கு பெயர்தான் தக்லீத் என்று சொல்லப்படும்.

இங்கு மிகவும் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் குர்ஆன்,சுன்னாவிற்கு மாற்று விளக்கம் பாமரன் அளிக்கமாட்டான்.மாறாக ஓரளவிற்கு ஞானம் பெற்றவர்தான் அளிப்பார்.இவரை தான் ஹதீஸில் அறியாதவர் என கூறப்பட்டுள்ளது.இவரின் மாற்று விளக்கத்தை தான் பழித்து கூறப்பட்டுள்ளது.ஆக, குர்ஆன் சுன்னாவின் சட்டங்களை மஸாயில்களை ஆராய்ந்து அறிவதற்கு அரபி மொழி ஞானம் போன்றவைகளில் ஓரளவிற்கு இருப்பது போதுமாகாது.மாறாக, முழுமையான ஆய்வுத்திறன் இருப்பது அவசியமாகும்.

முக்கிய குறிப்பு: (முஜ்தஹித்) ஆய்வாளர் யார்? என்ற தலைப்பில் இன்ஷா அல்லாஹ் பிறகு பார்ப்போம்.

ஐந்தாவது ஆதாரம்:5

ஸஹீஹுல் புகாரியில் அறிவிப்பாளர் தொடர் முஅல்லக் (ஒரு நூலாசிரியர் முழு அறிவிப்பாளர் தொடரையோ, அல்லது சிலரையோ விட்டு விட்டு நபிகள் நாயகம் அவர்களின் சொல் அல்லது செயல் தொடர்புடைய அறிவிக்கும் செய்திகளுக்கு முஅல்லக் எனப்படும்.)

முஸ்லிமில் முழுமையான அறிவிப்பாளர் தொடருடன் வந்துள்ள ஹதீஸ்:

அபூஸயீத் குத்ரி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஸஹாபாக்களில் சிலர் ஜமாஅத் தொழுகைக்கு தாமதமாக வர ஆரம்பித்தார்கள்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,விரைவாக வருவதையும்,முன் ஸப்புகளில் தொழுவதையும் அவர்களுக்கு வலியுறுத்தினார்கள்‌. மேலும் கூறினார்கள்;

ايتموا بي و لياتم بكم من بعدكم 

நீங்கள் என்னை (தொழுகையில்) என்னைப் பின்பற்றுங்கள்.உங்களுக்கு பின்னால் வருபவர்கள் உங்களை பின்பற்றவேண்டும்.(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி,1/99, தலைப்பு:باب الرجل ياتم بالامام و ياتم الناس بالماموم )

இதற்கு இரண்டுவிதமான அர்த்தங்கள் உண்டு.
 ஒன்று முன் ஸப்புகளில் உள்ளவர்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றட்டும்.பிந்திய ஸப்புகளில் உள்ளவர்கள் உங்களை பின்பற்றட்டும்.இரண்டாது ஸஹாபாக்கள் விரைவாக (தொழுகைக்கு)வந்து நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகை முறையை நன்றாக கவனிக்கவேண்டும்.ஏனெனில் பின்னால் வரும் சந்ததியினர் ஸஹாபாக்களை தக்லீத் செய்யவேண்டும் என்பதற்காகும்.

ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸின் விரிவுரையில் எழுதியுள்ளார்:

قيل : معناه تعلموا منى أحكام الشريعة وليتعلم منكم التابعون بعدك وكذلك أتباعهم إلى انقراض الدنيا

சில அறிஞர்கள் ஹதீஸிற்கு தரும் விளக்கம் என்னிடத்திலிருந்து ஷரீஅத்தின் சட்டங்களை நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்.
உங்களிடமிருந்து தாபியீன்கள் கற்றுக்கொள்ளட்டும்.இவ்வாறே (தாபியீன்களுக்கு) பின்னால் வருபவர்கள் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளட்டும்.இவ்வாறே பின்பற்றுதல் உலகமுடிவு நாள்வரை இருக்கும்.(ஆதாரம்:பத்ஹுல்பாரி,2/171)

முஸ்னத் அஹ்மதில் ஹள்ரத் ஸஹ்ல் இப்னு முஆத் (ரளி) அவர்களின் தந்தையிடமிருந்து வரும் அறிவிப்பு 

: أن امرأة أتته فقالت: يا رسول الله، انطلق زوجي غازياً، وكنت أقتدي بصلاته إذا صلى ، وبفعله كله ، فأخيزني بعمل يبلغني عمله حتى يرجع ...

ஒரு பெண்மணி நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்திற்கு வந்தாள்.
யா ரசூலுல்லாஹ்! எனது கணவர் ஜிஹாதிற்கு சென்றுள்ளார்.தொழும்போதும்,
அனைத்து காரியங்களிலும் அவரைதான் 
பின்தொடர்வேன்.அவரின் அமலின் (ஜிஹாத்) அந்தஸ்தை அடையும் ஓர் அமலை கற்றுத் தாருங்கள் எனக்கேட்டார்.
(ஆதாரம்:முஸ்னத் அஹ்மத் 3/439)

அந்தப் பெண்மணி தெளிவாக பெருமானாரிடம் கூறியது கணவரை தொழுகையில் மட்டுமின்றி அனைத்து காரியங்களிலும் பின்பற்றுகிறேன்.இதனை பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டிக்கவில்லை.இதற்கு பெயர்தான் தக்லீத் என்று சொல்லப்படும்.


Wednesday, July 14, 2021

மத்ஹபுகளின் அவசியம்-குர்ஆன்,சுன்னா ஒளியில்


மத்ஹபுகளின் அவசியம் தொடர்:6


ஹதீஸின் ஒளியில் தக்லீதின் ஆதாரங்கள் 

தக்லீத் குறித்து குர்ஆனில் உள்ளதைப் போன்று ஹதீஸ்களிலும் ஏராளமான ஆதாரங்கள் உண்டு.அவற்றில் சிலவற்றை இனி பார்ப்போம்!

முதல் ஆதாரம்:

1) عن حذيفة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 
اني لا ادري ما بقي فيكم فاقتدوا للذين من بعدي

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக
ஹள்ரத் ஹுதைஃபா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 
நான் உங்களுக்கு மத்தியில் எவ்வளவு காலம் இருப்பேன் என்பது எனக்கு தெரியவில்லை? எனக்கு பிறகு அபூபக்கர் (ரளி) உமர் (ரளி) இருவரை பின்பற்றுங்கள்.
(ஆதாரம்:திர்மிதி,இப்னு மாஜா,அஹ்மத்) 

இந்த ஹதீஸில் நாம் புரியவேண்டிய முக்கியமான விஷயமானது (اقتداء) பின்பற்றுதல் என்பது நிர்வாக காரியங்களுக்குரியது இல்லை.மாறாக தீனுடைய காரியங்களில் ஒருவரை பின்பற்றுவதாகும்.

அரபிமொழியின் பிரபல்யமான அறிஞர் இப்னு மன்ளூர் அவர்கள் எழுதியுள்ளார்கள்:القدوة و القدوة ما تسنت به ஒருவர் மற்றொருவரின் வழிமுறையை பின்பற்றுவதற்கு சொல்லப்படும்.قدوة: الاسوة இதற்கு முன்மாதிரி என்ற பொருளும் உண்டு.

குர்ஆனிலும் இந்த வார்த்தை தீனுடைய காரியங்களில் நல்லோர்களை பின்பற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

6:90 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ هَدَى اللّٰهُ‌ فَبِهُدٰٮهُمُ اقْتَدِهْ ‌ؕ قُلْ لَّاۤ اَسْـٴَــلُكُمْ عَلَيْهِ اَجْرًا‌ ؕ اِنْ هُوَ اِلَّا ذِكْرٰى لِلْعٰلَمِيْنَ
6:90. இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான்; ஆதலால், இவர்களுடைய நேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக; “இதற்காக நாம் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை; இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை” என்று கூறுவீராக.

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மரண நோயில் இருந்த போது 

2) يقتدي ابوبكر بصلوة رسول الله و الناس مقتدون بصلوة ابى بكر 

அபூபக்கர் (ரளி) அவர்கள் அண்ணலாரின் தொழுகையை பின்பற்றினார்.மக்கள் அபூபக்கர் (ரளி) அவர்களின் தொழுகையை பின்பற்றினார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/99,தலைப்பு:باب الرجل تاتم بالامام)

முஸ்னத் அஹ்மதில் ஹள்ரத் அபூவாயில் (ரஹ்) அவர்களின் வாயிலாக வரும் செய்தி 

3) جلست إلى شيبة بن عثمان فقال جلس عمر بن الخطاب رضي الله عنه فى مجلسك هذا  فقال لقد هممت أن لا أدع فيها صفراء ولا بيضاء إلا قسمته قلت إن صاحبيك لم يفعلا قال هما المرءان يقتدي بهما

நான் ஷைபா இப்னு உஸ்மான் (ரளி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன்.அவர்கள் கூறினார்கள்;நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த இடத்தில் உமர் (ரளி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.மேலும் 
உமர் (ரளி) கூறினார்கள்;கஃபாவின் (திரையில் உள்ள ) தங்கம்,வெள்ளியை மக்கள் அனைவருக்கும் பங்கிட எண்ணுகிறேன்.அதற்கு ஷைஃபா (ரளி) அவர்கள் கூறினார்கள்; இவ்வாறு செய்ய தங்களுக்கு உரிமையில்லை.ஏனெனில்  முந்திசென்ற உங்களது  
தோழர்கள் (நபி ஸல் அவர்கள், அபூபக்கர் (ரளி) இவ்வாறு செய்யவில்லை அதற்கு உமர் (ரளி) அவர்கள் கூறினார்கள்; உண்மையில் இருவரும் அவ்வாறு இருந்தனர்.அவர்கள் இருவரை பின்பற்றப்படவேண்டும்.

4) முஸ்னத் அஹ்மதில் அனஸ் (ரளி) அவர்களின் வாயிலாக வரும் ஹதீஸ் 

   "இப்போது உங்களிடம் சுவனவாசியொருவர் வருவார்"  என
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு சபையில் கூறினார்கள்.அதன் பிறகு
அன்சாரி ஸஹாபி வந்தார்.இரண்டாவது மூன்றாவது நாளும் இவ்வாறே நடந்தது.இதன்பேரில் ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரளி) அவர்கள் அன்சாரி ஸஹாபியின் வீட்டிற்கு சென்றார்கள்.இரவில் (தகுந்த தங்கடத்தை கூறி) தங்குவதற்கு அனுமதி கேட்டார்.ஏனெனில் அன்சாரி ஸஹாபியின் அதிகமான வணக்கத்தை அறியவேண்டும்.
ஸஹாபியும் அனுமதி வழங்கினார்.எனினும் அவர் இரவில் தூங்கும்போது சில திக்ருகளை ஓதிவிட்டு பஜ்ர் வரை உறங்கினார்.அதனை சாதரணமாக கருதி ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளி அவர்கள் அன்சாரி ஸஹாபியிடத்தில் காரணத்தை அறிய கேட்டார்கள் فأردت أن اوى اليك لانظر ما عملك فاقتدى به فلم اراك تعمل كثير عمل 

நான் உம்மடத்தில் வந்து தங்கியிருந்து உமது குறிப்பான அமலைக் கொண்டு உம்மைப் பின்பற்ற வேண்டுமென்று நினைத்தேன்.நீர் அதிகமான அமல்கள் செய்ய நான் பார்க்கவில்லை.(ஹதீஸின் சுருக்கமான கருத்து)

அனைத்து ஹதீஸ்களிலும் اقتداء (பின்பற்றுதல்) என்பது தீனுடைய காரியங்களில் ஒருவரை பின்பற்றுவது,பின்தொடர்வதற்கு வந்துள்ளது.இதற்கு பெயர்தான் தக்லீத் என்பதாகும்.

இரண்டாவது ஆதாரம்:

ஸஹீஹுல் புகாரி,முஸ்லிமில் உள்ள ஹதீஸ் 

عن عبدالله بن عمرو بن العاص - رضي الله عنهما - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: ((إن الله لا يقبض العلم انتزاعًا ينتزعه من العباد، ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يُبْقِ عالمًا اتَّخذ الناس رؤوسًا جهالاً، فسُئِلوا فأفتوا بغير علم؛ فضلوا وأضلوا))

'நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.

இந்த ஹதீஸின் மூலம் மார்க்கத்தில் தீர்ப்பளிப்பது மார்க்க அறிஞர்களின் பணி என்பதை புரியமுடிகிறது.பொதுமக்கள் மார்க்க சட்டங்களை அவர்களிடத்தில் கேட்டு அதன்படி அமல் செய்வது இதற்கு பெயர்தான் தக்லீத் என்பதாகும்.

கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மார்க்க அறிஞர்கள் இல்லாத 
காலத்தையும்,கல்வி ஞானம் இல்லாதவர்கள் தீர்ப்பளிப்பார்கள் என்பதையும் முன்னறிவிப்பு செய்தார்கள்.இங்கு ஒரு கேள்வி எழுகிறது.அக்காலத்தில் மார்க்க சட்டங்களை அமல் செய்வதற்குரிய வழிமுறை என்ன? முன்சென்ற உலமாக்களை தக்லீத் செய்யவேண்டும்.ஏனெனில் குர்ஆன் சுன்னாவிலிருந்து சட்டங்களை ஆராய்ந்து கூறுபவர் இல்லையெனில் முன்சென்று அறிஞர்களின் நூல்கள்,மாற்று வழிகளின் மூலம் அவர்களை பின்பற்ற வேண்டும்.


Monday, July 12, 2021

மத்ஹபுகளின் அவசியம்-குர்ஆன்,சுன்னாவின் ஒளியில்


மத்ஹபுகளின் அவசியம் தொடர்:5

குர்ஆனின் ஒளியில் தக்லீத் 

மூன்றாவது ஆதாரம்:

9:122 وَمَا كَانَ الْمُؤْمِنُوْنَ لِيَنْفِرُوْا كَآفَّةً‌ ؕ فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَآٮِٕفَةٌ لِّيَـتَفَقَّهُوْا فِى الدِّيْنِ وَ لِيُنْذِرُوْا قَوْمَهُمْ اِذَا رَجَعُوْۤا اِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُوْنَ

9:122. முஃமின்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்று கொள்வதற்காகவும், (வெளியேறி சென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள்.

  இந்த வசனத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமயத்தில் ஜிஹாத் போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது.மாறாக ஒரு ஜமாஅத் இரவு பகல் மார்க்கத்தை அறிவதற்காக தங்களை அர்ப்பணித்து விடவேண்டும்.ஏனெனில் மார்க்கத்தை கற்காதவர்களுக்கு ஷரீஅத்தின் சட்டங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும்.அந்த ஜமாஅத்தினர் கூறியதை பொதுமக்கள் அமல்செய்யவேண்டும்.இதே போன்று அல்லாஹ்விற்கு மாறுசெய்வதிலிருந்து பாதுகாப்பாக இருக்கவேண்டும்.இதற்கு பெயர்தான் தக்லீத்.

 இமாம் அபூபக்ர் ஜஸ்ஸாஸ் (ரஹ்) அவர்கள் இந்த வசனத்தை விளக்கியவாறு கூறுகிறார்கள்:

فاوجب الحذر بانذارهم و الزم المنذرين قبول قولهم 

    அல்லாஹுதஆலா பொதுமக்களுக்கு கடமையாக்கியுள்ளான்.
உலமாக்கள் அவர்களுக்கு 
(ஷரீஅத் சட்டங்களை கூறி) அறிவுறுத்தட்டும்.அவர்கள் அல்லாஹ்விற்கு மாறுசெய்வதிலிருந்து தவிர்த்துக் கொள்ளட்டும்.(ஆதாரம் அஹ்காமுல் குர்ஆன்,262/2)

நான்காவது ஆதாரம்:

16:43 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِىْۤ اِلَيْهِمْ‌ فَسْــٴَــلُوْۤا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَۙ‏
16:43. (நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) “நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக).

இந்த வசனத்தில் அடிப்படை கற்றுத் தரப்படுகிறது.எந்த மக்கள் மார்க்க அறிவில்,கலைகளில் போதுமான ஞானம் இல்லையெனில் அதில் திறமை பெற்றவர்களிடம் கேட்டு அமல் செய்யவேண்டும்.

அல்லாமா ஆலூஸி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
و استدل بها أيضا على وجوب المراجعة للعلماء فيما لا يعلم فى الاكليل الجلال .............. السيوطى انه استدل بها على جواز تقليد العام فى الفروع 

எதனை குறித்து போதுமான மார்க்க ஞானம் இல்லையோ அதில் உலமாக்களை அணுகவேண்டும் என்பதானது இந்த வசனத்திலிருந்து ஆதாரம் எடுக்கப்படுகிறது.ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரஹ் அவர்கள் எழுதியுள்ளார்: பொதுமக்கள் கிளைச்சட்டங்களில் தக்லீத் செய்வது அனுமதியாகும்.(ஆதாரம்:ரூஹுல் மஆனி 14/148)

சந்தேகமும் நிவர்த்தியும் 

 இந்த வசனமானது குறிப்பான சம்பவத்தின் பின்னணி கொண்டது.இணைவைப்பாளர்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் தூதுவத்தை மறுத்தவாறு கூறினார்கள்; "நம்மிடத்தில் வானவரை தூதராக ஏன் அனுப்பவில்லை?" என்பதாக கேட்டார்கள்.இதற்கு பதிலாக தான் வசனம் அருளப்பட்டது.
அஹ்லுத்திக்ர் என்பது சில முபஸ்ஸிரீன்கள் வேதக்காரர்கள் என்பதாக கூறுகிறார்கள்.சிலரிடத்தில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் முஸ்லிமானவர்கள்.சிலரிடத்தில் அஹ்லுல் குர்ஆன் (முஸ்லிம்கள்) என்பது கருத்தாகும்.எனவே வசனத்தின் முன்பின் கவனிக்கும்போது தக்லீத் என்பதை புரிய முடியவில்லை.

பதில்:இந்த வசனத்தின் கருத்தை சிறிது சிந்தித்தாலே தக்லீத் உண்டு என்பதை அறியமுடியும்.வசனத்தில் "அறிந்தவர் அறியாதவரிடத்தில் கேட்கவேண்டும்"  என்பது அடிப்படையான விதி கூறப்படுகிறது.இதற்கு பெயர்தான்
தக்லீத் என்று கூறப்படும்.

விரிவுரை,பிக்ஹ் இன் விதியானது வசனங்களின் சட்டங்கள்,மஸாயில்களிலிருந்து வசனம் இறங்கிய பிண்ணனியில் குறிப்பான நிலைகளுக்குரியது என கருதாமல் பொதுவானது என்பதாக புரியவேண்டும் என்பதை குறித்து முன்னால் விரிவாக,தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான விளக்கம்:ஜமாலி ஹள்ரத் அவர்கள், விவாதத்தில் பீஜே அவர்களிடம் இமாம்களை தக்லீத் செய்வதற்கு இந்த வசனத்தை ஆதாரமாக எடுத்துவைக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி பீஜேவின் மறுப்பிற்கும் பதில் கொடுக்கிறார்கள்.எனினும்,பீஜே இறுதிவரை அதற்கு மறுப்பு கொடுக்கவில்லை.இதற்கான சுட்டியை பார்க்கவும்


மேலும் மார்க்கத்தை விளங்க இமாம்களின் உதவி தேவையா? என்ற விவாதத்தின் மூன்றாம் பாகத்தின் ஆரம்ப நிமிடங்களில் 


பீஜே வைக்கும் வாதம்:
குர்ஆனை பெருமானார் தான் விளக்கவேண்டும்.வேறுயாரும் விளக்கமுடியாது.

நமது வாதம்:பீஜே அவர்கள் குர்ஆனுக்கு தமிழ் மொழிபெயர்ப்பு எழுதியுள்ளார்.அதுமட்டுமின்றி நிறைய வசனங்களுக்கு விளக்கமும் எழுதியுள்ளார்.எப்படி புரியவேண்டும் என்பதையும் விளக்கியுள்ளார்.குர்ஆனை பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தான் விளக்கவேண்டும்.வேறு யாரும் விளக்கமுடியாது என்று கூறிவிட்டு விளக்கவுரை ஏன் எழுதவேண்டும்? பீஜே தன்னையே நபியாக எண்ணிக்கொண்டாரா? ஒவ்வொருவரும் ஆய்வு செய்து விளங்கிக்கொள்ள வேண்டியதுதானே? 
  எனவே அறியாதவர்கள் அறிந்தவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்பதன் மூலம் தக்லீத் என்பது தான் வலுப்பெறுகிறது.

Thursday, July 8, 2021

மத்ஹபுகளின் அவசியம்-குர்ஆன்,சுன்னா ஒளியில்


மத்ஹபுகளின் அவசியம் தொடர்:4

முதல் நிலைதக்லீத் செய்வதற்கு குறிப்பான முஜ்தஹித் 
(ஆய்வாளர்) இல்லை.மாறாக,ஒரு மஸ்அலாவில்  ஒரு மார்க்க அறிஞரின் வழிமுறையை தேர்ந்தெடுப்பது, மற்றொரு மஸ்அலாவில் வேறு அறிஞரின் வழிமுறையை ஏற்பது இதற்கு تقليد مطلق (தக்லீதே முத்லக்/பொதுவான தக்லீத்) அல்லது تقليد عام (தக்லீதே ஆம்) என்று சொல்லப்படும்.

மற்றொரு நிலை:குறிப்பான ஒரு முஜ்தஹிதான இமாமின் வழிமுறையை அனைத்து மஸ்அலாவிலும் ஏற்று நடப்பது இதற்கு (தக்லீதே ஷஹ்ஸி) தனிநபரை பின்பற்றுவது என சொல்லப்படும்.

குர்ஆனின் ஒளியில் தக்லீதின் ஆதாரம்

முதல் ஆதாரம்:

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ‌ۚ

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்;

உலுல் அம்ர் என்பதன் விளக்கத்தில் இருவிதமான கருத்துக்கள் உள்ளன.

முதல் கருத்து:சில அறிஞர்களிடத்தில் இஸ்லாமிய ஆட்சியாளர் 

இரண்டாவது கருத்து:ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரளி),ஹள்ரத் அப்துல்லாஹ் (ரளி), ஹள்ரத் முஜாஹித் (ரஹ்), ஹள்ரத் அதா இப்னு ரபாஹ் (ரஹ்), அதா இப்னு ஸாயிப் (ரஹ்), ஹஸனுல் பஸரி (ரஹ்), அபுல் ஆலியா (ரஹ்) போன்ற ஏராளமான விரிவுரையாளர்களிடமிருந்து உலுல் அம்ர் என்பது புகஹாக்கள் எனும் மார்க்க அறிஞர்கள் என  எடுத்து சொல்லப்படுகிறது.

இமாம் ராஜி (ரஹ்) அவர்கள் 
உலுல் அம்ர் என்பது புகஹாக்கள் (மார்க்க விற்பன்னர்கள்) என்பதற்கு 
பல்வேறுபட்ட காரணங்களின் மூலம் முன்னுரிமை கொடுக்கிறார்கள்.
(தப்ஸீர் கபீர் 3/334)

இமாம் அபூபக்கர் ஜஸ்ஸாஸ் 
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:இரண்டு விதமான கருத்துக்களிலும் எந்த ஒரு முரண்பாடும் இல்லை.மாறாக உலுல் அம்ரில் இரண்டு அர்த்தமும் உள்ளடங்கும்.அரசியலமைப்பு சட்டங்களில் அதிகாரிகளுக்கு கட்டுப்படுவது.ஷரீஅத்தின் சட்டங்களில் மார்க்க அறிஞர்களுக்கு கட்டுப்படுவது.

(அஹ்காமுல் குர்ஆன் லிஜஸ்ஸாஸ் 2/256 தலைப்பு:உலுல் அம்ருக்கு கட்டுப்படுத்து)

அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படுவதன் முடிவும் உலமாக்களுக்கு கட்டுப்படுவதுதான்.ஏனெனில் ஆட்சியாளர்களும் ஷரீஅத்தின் சட்டங்களில் உலமாக்களுக்கு கட்டுப்பட்டவர்கள்தான்.

(இஃலாமுல் முவக்கியீன் லி இப்னுல் கைய்யிம் 1/7)

ஆக, அல்லாஹ் ரசூலுக்கு கட்டுப்படுங்கள்.மேலும் அல்லாஹ் ரசூலின் சொல்லிற்கு விரிவுரையாளர்களாக உள்ள உலமாக்கள், அறிஞர்களுக்கு கட்டுப்படுங்கள் என்பதை முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வலியுறுத்தியுள்ளான் என்பதை புரிய முடிகிறது.இதற்கு தான் தக்லீத் என்பதாக சொல்லப்படும்.

இதனின் தொடர்ச்சியாக வரும் வசனம் 

فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ‌
உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும்,(அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள்

மேற்கூறிய வசனத்திற்கு விரிவரையாக வந்துள்ள வசனத்தின் (فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ) வாசகத்தின் விளக்கம்

இமாம் அபூபக்கர் ஜஸ்ஸாஸ் 
(ரஹ்) அவர்கள் உலுல் அம்ர் என்பது புகஹாக்கள் என்பதை வலியுறுத்தியவாறு பின்வருமாறு கூறுகிறார்கள்; 
قوله تعالى ذلك فإن تنازعتم فى شئ  فردوه إلى الله و رسول يدل على أن أولى الأمر هم الفقهاء لأنه أمر سائر الناس بطاعتهم ثم قال فإن تنازعتم الخ فأمر اولى الامر برد المتنازع فيه إلى كتاب الله و سنة نبيه صلى الله عليه وسلم إذا كانت العامة ومن ليس من أهل العلم ليست هذه منزلتهم لانهم لا يعرفون كيفية الرد إلى كتاب الله والسنة ووجوه دلائلهما على أحكام الحوادث فثبت أنه خطاب للعلماء 

உலுல் அம்ருக்கு கட்டுப்படுங்கள் என்பதாக கூறியவுடன் அல்லாஹ் கூறுவது உங்களுக்கு ஏதேனும் சட்டங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அல்லாஹ் ரசூலின் பக்கம் திரும்புங்கள் என்பதுதான்.
உலுல் அம்ர் என்பது புகஹாக்கள் என்பதற்கு மிகப்பெரிய ஆதாரம் அல்லாஹ் மக்களை அவர்களுக்கு கட்டுப்படும்படி வலியுறுத்திய பிறகு فإن تنازعتم என்பதாக கூறி மக்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்படும் விஷயத்தில் அல்லாஹ் ரசூலின் பக்கம் திரும்பவேண்டும்.இது புகஹாக்களுக்குரிய கட்டளையாகும்.ஏனெனில் பொதுமக்களுக்கு இதனை குறித்து போதுமான மார்க்க அறிவு இல்லை.குர்ஆன் சுன்னாவின் பக்கம் திரும்பும் வழிமுறை என்ன? என்ற ஞானம் இல்லை.நவீன பிரச்சனைகளுக்குரிய தீர்வுகளின் ஆதாரங்களை ஆராய்ந்து பார்க்கும் ஆற்றல் அறிவு இல்லை.எனவே அல்லாஹ் புகஹாக்களுக்கு தான் கட்டளையிடுகிறான் என்பது நிரூபணமாகிறது.
(சுருக்கமான கருத்து) 
(அஹ்காமுல் குர்ஆன் 2/257)

ஆய்வுத்திறன் இல்லாதவர்கள் கருத்து வேறுபாடுள்ள சட்டங்களில் நேரடியாக குர்ஆன்,ஹதீஸை அணுகி முடிவு எடுக்கவேண்டும் என்பது பொருத்தமில்லை.எனவே முதல் வசனம் முகல்லித்
(இமாமை பின்பற்றுபவர்) தக்லீத் செய்யவேண்டும் என்பதையும் இரண்டாவது வசனம் முஜ்தஹித்கள் ஆய்வு செய்யவேண்டும் என்பதையும் பேசுகிறது.

முக்கிய குறிப்பு:ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களின் விளக்கமானது முஆவியா இப்னு ஸாலிஹ்,அலி இப்னு அபூதல்ஹா அவர்களின் வழியாக வந்துள்ளது இதனை இப்னு ஜரீர் அவர்கள் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.இது வலுவான ரிவாயத் என்பதாக இமாம் ஸுயூத்தி அவர்களின் இத்கான் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது ஆதாரம்:

4:83 وَاِذَا جَآءَهُمْ اَمْرٌ مِّنَ الْاَمْنِ اَوِ الْخَـوْفِ اَذَاعُوْا بِهٖ‌ ۚ وَلَوْ رَدُّوْهُ اِلَى الرَّسُوْلِ وَاِلٰٓى اُولِى الْاَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِيْنَ يَسْتَنْۢبِطُوْنَهٗ مِنْهُمْ‌ؕ 

4:83. மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்; அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஆராய்ந்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள்

வசனத்தின் பின்னணி

 மதீனா தய்யிபாவில் நயவஞ்சகர்கள் போர் குறித்து வதந்திகளை பரப்பினார்கள்.முஸ்லிம்களில் சிலர் வதந்திகளை உண்மை என்பதாக எண்ணி பரப்பினர்.இதனால் அங்கு பாதுகாப்பின்மையும் அச்சநிலையும் உருவானது.அப்போது இந்த வசனம் அருளப்பட்டது.போர் அச்சநிலை சூழல் குறித்து செய்தி வந்தால் உலுல் அம்ரிடம் கொண்டு செல்லவேண்டும்.இது குறித்து ஞானம் உள்ளவர்கள் ஆராய்ந்து எதார்த்தத்தை கூறுவார்கள்.அதற்கு ஏற்ப செயல்புரிய வேண்டும்.

இந்த வசனம் குறிப்பான விஷயத்தில் இறங்கியது.எனினும் விரிவுரை,பிக்ஹ் இன் விதியானது வசனங்களின் சட்டங்கள்,மஸாயில்களிலிருந்து வசனம் இறங்கிய பிண்ணனியில் குறிப்பான நிலைகளுக்குரியது என கருதாமல் பொதுவானது என்பதாக புரியவேண்டும்.ஆய்வுத்திறன் ஆய்வுக்கண்ணோட்டம் இல்லாதவர்கள் ஆய்வுத்திறன் உள்ளவர்களை அணுகவேண்டும்.இதற்கு பெயர்தான் தக்லீத் (இமாமை பின்பற்றுதல்) என்பதாகும்.

குறுக்கு வாதமும் நமது நடுநிலையான பதிலும் 

முன்பின் தொடரைப் பார்க்கும் போது குறிப்பான சூழ்நிலையில் அருளப்பட்டதை வைத்து கியாமத் வரை தக்லீதின் அவசியம் நிரூபணமாகும் என்று கூறலாமா?

பதில்:
உதாரணமாக நபிகளாரின் ஹதீஸ்கள் மார்க்க அடிப்படை ஆதாரம் என்பதற்கு மத்ஹப் மறுப்பாளர்கள்,நாம் உட்பட ஸுரத்துல் ஹஷ்ர்வுடைய "நபியவர்கள் உங்களுக்கு எதை அளித்துள்ளார்களோ அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.அவர்கள் உங்களுக்கு எதை தடுத்தார்களோ அதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்" (59:7) என்ற வசனத்தைத்தான் முக்கிய ஆதாரமாகக் கூறுகிறோம்.

ஆனால் இந்த வசனம் மாலுல்  ஃபைஃ சம்பந்தப்பட்டது (அதாவது) 1. யுத்தகளத்தில் சண்டையிட்டு கைப்பற்றிய பொருளுக்கு கனீமத் எனப்படும். 2.சண்டையிடாமல் ஒப்பந்தம் ஏற்பட்டு எதிரிகளிடமிருந்து கிடைத்த பொருளுக்கு ஃபைஃவுடைய பொருள் எனப்படும்.

கனீமத் பொருள் ஐந்தில் ஒரு பாகம் பைத்துல்மாலுக்கும்,மீதி 4 பாகம் படையினருக்கும் பங்கிடப்படும்.ஆனால், 
ஃபைஃ வுடைய பொருளிலிருந்து படைவீரருக்கு கொடுக்கப்படாது. படைத்தளபதியின் விருப்பப்படி அதை பங்கிடப்படும். பனூ நளீர் கிளையாருடன் யுத்தம் புரிய சென்றபோது சண்டை ஏற்படாமலேயே பரஸ்பரம் ஒப்பந்தம் ஏற்பட்டது.அவர்களின் பொருட்களுடன் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.இது இரண்டாம் வகையை சார்ந்த ஃபைஃவுடைய பொருளாகும்.எனவே, கனீமத்திலிருந்து பங்கு கிடைத்ததைப்போல் பனூ நளீரிடமிருந்து கிடைத்த இந்த ஃபைஃவுடைய பொருளிலிருந்தும் பங்கு கிடைக்கவில்லையே என்று சிலர் எண்ணிய போதுதான் ஸூரத்துல் ஹஷ்ர் உடைய (59:7) வசனம் இறங்கியது.

  ஆக இந்த வசனம் குறிப்பிட்ட பனூ நளீரின் ஃபைஃவுடைய பொருள் சம்பந்தமாக இறங்கி இருந்தாலும் இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள (மா) என்பது பொதுவானதாக இருப்பதால் அதன் கருத்து அந்த சம்பவத்துடன் மட்டும் முடிந்து விடாமல் நபிகளார் சொன்ன அனைத்தையும் ஏற்கவேண்டும் தடுத்து அனைத்தையும் விட்டு தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று பொதுவாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.மாறாக, இச்சம்பவத்துடன் மட்டும் சம்பந்தப்பட்டதாக இருந்தால் "ஃபைஃவுடைய பொருள்களில் எதை தந்தார்களோ அதை வாங்கிக்கொண்டு தராததை கேட்காதீர்கள்" என்று குறிப்பிட்டுச் சொல்லி இருக்க வேண்டும் ஆகவே, தான் ஹள்ரத் இப்னு மஸ்ஊத் (ரளி) அன்ஹு அவர்கள் எல்லா ஹதீஸ்களுக்கும் ஆதாரமாக இந்த (59:7) வசனத்தையே கூறுகிறார்கள். அதாவது அவர்கள் ஒரு உபதேசத்தில், பிறர் முடியை தன் முடியுடன் சேர்த்து நீட்டிக்கொள்பவர் (சவுரிமுடி அணிபவள்), பிற பெண்களுக்கு முடியை இணைத்து விடுபவள், (உடலில்) பச்சை குத்தி விடுபவள், பச்சை குத்திக்கொள்பவள் ஆகியோரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்.என்று கூறியபோது, பேச்சு முடிந்து,ஒரு பெண் எழுந்து நீங்கள் சொல்லும் இவ்விஷயத்தை குர்ஆனில் நாம் பெற்றுக்கொள்ள முடியவில்லையே? என்று கேட்டார் அதற்கு இப்னு மஸ்ஊத் ரளி அவர்கள் நீ குர்ஆனை ஓதியிருந்தால் இதை குர்ஆனில் பெற்றிருப்பாய் என்றார்கள்.உடனே அப்பெண், நான் குர்ஆனை மனனம் செய்த "ஹாஃபிளா" வாகும் எங்கும் கிடைக்கவில்லையே என்று கூற, உடனே இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் (59:7) என்ற வசனத்தை ஓதிக்காட்டி, நான் கூறிய ஹதீஸ், இந்த வசனத்துடன் சம்பந்தப்பட்டது என்று கூறினார்கள்.ஆக அப்பெண் குர்ஆனிலே இல்லையே என்று கேட்டபோது இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் எல்லாம் விஷயம் குர்ஆனில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறாமல் இந்த ஹதீஸ் குர்ஆனில் உள்ளது என்று கூறி அதை நிரூபித்தார்கள்.

 இச்சம்பவத்தின் மூலம் எல்லா ஹதீஸ்களும் குரான் தான் அசல் என்பது தெளிவாகிறது.

 "ஆக இந்த வசனம் பனூநளீரின் ஃபைஃபொருட்கள் விஷயமாக இறங்கி இருந்தாலும் சஹாபாக்களில் மார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் முக்கிய இடம் வகித்த இப்னு மஸ்ஊத் ரளி அவர்கள் இந்த வசனத்தை அச்சம்பவத்துடன் மட்டும் சுருக்கிவிடாமல் எல்லா ஹதீஸ்களுக்கும் இந்த வசனம்தான் ஆதாரம் என்ற ரீதியில் விளக்கினார்கள்.

 இங்கு வினோதம் என்னவெனில் நாம் மட்டுமல்ல மத்ஹப் மறுப்பாளர்கள் உட்பட அனைவருமே நபியவர்களின் ஹதீஸ் இஸ்லாமிய அடிப்படை சட்டங்களில் ஒன்றுதான் என்பதற்கு முக்கிய ஆதாரமாகக் காட்டுவது இந்த (59:7) வசனத்தை தான்.

  இதன் மூலம் எந்த வசனத்தையும் அது இறக்கப்பட்ட சம்பவத்துடன் மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், அதனுடைய வார்த்தைகளில் பொதுக்கருத்தை வைத்துதான் சட்டம் எடுக்க வேண்டும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம் என்பது தெளிவாகும்.
  
   இதுபோன்று தான் இதற்கு ஆதாரமாக நாம் கூறும் இந்த வசனம் குறிப்பான விஷயத்தில் இறங்கி இருந்தாலும்  சுருக்கி விடாமல் பொதுவாக அர்த்தம் கொள்ளலாம்.