மத்ஹபுகளின் அவசியம் தொடர்:9
ஸஹாபாக்களின் காலத்தில் தக்லீத் என்ற பெயரில் ஏராளமான அமல்கள் நடந்துள்ளது.ஸஹாபாக்களில் பலர் இல்மை பெறுவதில் அதிகமான நேரத்தை செலவழிக்கவில்லை.ஏதேனும் மஸ்அலாவில் தனது ஆய்வின் பேரில் முடிவு எடுத்து அமல் செய்யவில்லை.மற்ற ஆய்வு செய்யும் ஸஹாபாக்களிடத்தில் கேட்டு அமல் செய்தார்கள்.ஸஹாபாக்களில் தனிநபர்களை பின்பற்றுதல்,பொதுவான (முத்லக்) தக்லீத் இரண்டு நிலைகளும் இருந்துள்ளதற்கு ஹதீஸ் நூல்களில் ஆதாரம் உள்ளது.குறிப்பாக பொதுவான தக்லீதின் ஆதாரங்கள் ஏராளமாக,தாரளமாக உள்ளது.அனைத்தையும் ஒன்று திரட்டினால் நூல் அளவிற்கு உருவாகிவிடும்.எனவே சுருக்கமான சில ஆதாரங்களை மட்டும் பார்ப்போம்.
ஆதாரம்:1
عن ابن عباس قال : خطب عمر بن الخطاب الناس بالجابية وقال : يا أيها الناس ، من أراد أن يسأل عن القرآن فليأت أبي بن كعب ، ومن أراد أن يسأل عن الفرائض فليأت زيد بن ثابت ، ومن أراد أن يسأل عن الفقه فليأت معاذ بن جبل ، ومن أراد أن يسأل عن المال فليأتني ; فإن الله جعلني له واليا وقاسما "
ஹள்ரத் இப்னு அப்பாஸ் ரளி அவர்கள் கூறுகிறார்கள்:உமர் (ரளி) அவர்கள் ஜாபியா எனும் இடத்தில் உரை நிகழ்த்தினார்கள்.மக்களே!
குர்ஆன் குறித்து எதையேனும் கேட்க விரும்பினால்,உபை இப்னு கஃப் ரளி அவர்களை அணுகட்டும்.வாரிசு சட்டங்கள் குறித்து எதையேனும் கேட்க விரும்பினால்,ஜைத் இப்னு ஸாபித்தை (ரளி) அணுகட்டும்.பிக்ஹ் மார்க்க சட்டத்தை குறித்து கேட்க விரும்பினால்,முஆத் இப்னு ஜபல் (ரளி) அவர்களை அணுகட்டும்.செல்வத்தை குறித்து கேட்க விரும்பினால்,என்னை அணுகட்டும்.அல்லாஹ் என்னை அதற்கு பொறுப்பாளராக,பங்கிடுபவராக ஆக்கியுள்ளான். (ஆதாரம்:மஜ்மஉஜ்ஜவாயித் 1/135 தலைப்பு:أخذ كل علم من أهله )
இந்த உரையில் ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள் மக்களுக்கு உரையாற்றிய பொதுவான வழிகாட்டுதல் தப்ஸீர்,வாரிசுரிமை சட்டம்,பிக்ஹ் சட்டங்கள் போன்றவைகளில் தனிச்சிறப்பு பெற்று திகழும் உலமாக்களை அணுகி தெரிந்து கொள்ளவேண்டும்.அனைவரும் ஆதாரங்களை ஆராய்வது இயலாத காரியம்.ஒன்று, ஓரளவிற்கு மார்க்க ஞானம் பெற்றவரும் ஆய்வுத்திறன் உள்ளவர்களை அணுகி ஆதாரங்களை கற்றுக் கொள்வார்கள்.மற்றொன்று, மார்க்க ஞானம் இல்லாதவர் ஆய்வாளர்களின் சொல்லின் பேரில் நம்பிக்கை கொண்டு அமல் செய்வார்கள்.இதற்கான முன்னுதாரணத்தை பார்ப்போம்.
ஆதாரம்:2
ابن عمر أنه سئل عن الرجل يكون له الدين على الرجل إلى أجل، فيضع عنه صاحب الحق ويعجله الآخر، فكره ذلك ونهى عنه
ஹள்ரத் ஸாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவர் இன்னொருவருக்கு குறிப்பிட்ட தவணையின் பேரில் கடனை திருப்பி செலுத்துவது கடமையாகும்.கடன் கொடுத்தவர் அதில் குறைத்து,கடன் வாங்கியவருக்கு விரைவாக செலுத்துவதையும் நிபந்தனையிடுவது குறித்து அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) அவர்களிடத்தில் கேட்கப்பட்டது.அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) அவர்கள் இதனை விரும்பவில்லை.அதனை தடுக்கவும் செய்தார்கள்.(ஆதாரம்:முஅத்தா இமாம் மாலிக் பக்கம்:279,ما جاء فى الربا فى الدين)
விளக்கம்:அப்துல்லாஹ் 1000 ரூபாய் ஜைதிடம் குறிப்பிட்ட தவணையில் செலுத்துவதாக வாங்கினார்.அப்போது ஜைத் கூறினார் 1000 ரூபாய்க்கு பகரமாக உடனடியாக இருநூறு ரூபாய் கொடுத்துவிடு என்கிற நிபந்தனை வைப்பது கூடாது.ஏனெனில் 1000 ரூபாய் தவணையின் பேரில் கடன் கொடுத்துவிட்டு உடனடியாக 200 ரூபாய் வாங்குவதில் 800 ரூபாய் வட்டி என்பதான தோற்றம் ஏற்படுகிறது.
உமர் (ரளி) அவர்களிடத்தில் மஸ்அலா கேட்கப்பட்டுள்ளது.இதில்
தெளிவான ஹதீஸ் இல்லை.இதனால் ஹள்ரத் இப்னு உமர் (ரளி) அவர்கள் தனது ஆய்வை முன்வைத்து பதில் அளித்துள்ளார்கள்.இங்கு கேள்வி கேட்பவரும் ஆதாரத்தை கேட்கவில்லை.இப்னு உமர் (ரளி) அவர்களும் ஆதாரத்தை கூறவில்லை.இதற்கு பெயர்தான் தக்லீத் என்று சொல்லப்படும்.
ஆதாரம்:3
عبد الرحمن ، قال: سألت محمد بن سيرين عن دخول الحمام، فقال : كان عمر بن الخطاب رضى الله عنه يكرهه
அப்துர்ரஹ்மான் அவர்கள் கூறுகிறார்கள் நான் முஹம்மத் இப்னு ஸீரின் ரஹ் அவர்களிடத்தில் குளியலறைக்கு (குளிப்பதற்கு) செல்வது கூடுமா? ஹள்ரத் உமர் ரளி அவர்கள் அதனை வெறுத்தார்கள்.(ஆதாரம்:அல்மதாலி புல் ஆலியா லில் ஹாபிள் இப்னு ஹஜர் 1/51,ஹதீஸ் எண்:187)
விளக்கம்:குளியலறை என்பது அறியாமைக்காலத்தில் மிகப்பெரியதாக இருந்தது.அதிகமான மக்கள் ஒன்றாக நிர்வாணமாக குளிப்பார்கள்.இதில் ஆண்கள் கைலி அணிந்து குளிப்பதை வலியுத்தினார்கள்.பொதுவாக பெண்கள் அதில் குளிப்பதை தடுத்தார்கள்.
இங்கு ஹள்ரத் முஹம்மத் இப்னு ஸீரின் சிறந்த தாபியி அவர்கள், உமர் (ரளி) அதனை வெறுத்தார்கள் என்பதை மட்டும் கூறுவது போதுமானது எனக் கருதினார்கள்.இதற்கு ஆதாரத்தை கூறவில்லை.எனினும், இது குறித்து உமர் (ரளி) அவர்களே நபியிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ் உண்டு.
ஆதாரம்:4
عن سليمان بن يسار أن أبا أيوب الأنصاري خرج حاجا حتى إذا كان بالبادية من طريق مكة أضل رواحله، ثم إنه قدم على عمر بن الخطاب يوم النحر فذكر ذلك له فقال له عمر: إصنع كما يصنع المعتمر ثم قد حللت، فإذا أدركت الحج قابلا فاحجج وأهد ما استيسر من الهدى
ஹள்ரத் ஸுலைமான் இப்னு யஸார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:ஹள்ரத் அபூஅய்யூப் அன்சாரி (ரளி) அவர்கள் ஹஜ்ஜை நாடி புறப்பட்டார்கள்.மக்காவின் வழியில் நாஜியா இடத்தை அடைந்த சமயம் அவர்களின் வாகனம் தொலைந்துவிட்டது.அன்னார் துல்ஹஜ் பத்தாம் நாள் தான் (ஹஜ் முடிந்துவிட்டது) உமர் (ரளி) அவர்களிடத்தில் வந்தடைந்தார்கள்.அவரிடத்தில் நடந்ததைக் கூறினார்கள்.ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள் உம்ராவின் அமலை நிறைவேற்றுங்கள்.பிறகு ஹலால் ஆகுங்கள்.ஹஜ்ஜின் காலம் வரும்போது மீண்டும் ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள்.
சக்தியிருந்தால் ஹதியை (பலிப்பிராணி) அறுத்துப் பலியிடுங்கள்.
(ஆதாரம்:முஅத்தா இமாம் மாலிக் பக்கம்:149,هدى من فاته الحج)
இங்கும் ஹள்ரத் அபூஅய்யூப் அன்சாரி (ரளி) அவர்கள் ஆதாரத்தை கேட்கவில்லை.மாறாக,உமர் (ரளி) அவர்களின் இல்ம்,ஆய்வின் மீது நம்பிக்கை கொண்டு அமல் செய்தார்.இதற்கு தக்லீத் என சொல்லப்படும்.
ஆதாரம்:5
عن مصعب بن سعد قال: كان أبي إذا صلى في المسجد تجوز وأتم الركوع والسجود،وإذا صلى في البيت أطال الركوع والسجود والصلاة قلت: يا أبتاه إذا صليت في المسجد جوزت وإذا صليت في البيت أطلت؟ قال: يا بني إنا أئمة يقتدى بنا.
ஹள்ரத் முஸ்அப் இப்னு ஸஃத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எனது தந்தை (ஸஃது இப்னு அபிவக்காஸ்) மஸ்ஜிதில் தொழும் போது ருகூஃ,ஸுஜுத்,தொழுகையை
பூர்த்தியாக நிறைவேற்றுவார்கள்.எனினும், சுருக்கமாக நிறைவேற்றுவார்கள்.வீட்டில் தொழும் போது ருகூஃ,சுஜுத், தொழுகையை நீட்டி நிறைவேற்றுவார்கள்.நான் கேட்டேன் தந்தையே! மஸ்ஜிதில் தொழுதால் சுருக்கமாகவும்,வீட்டில் தொழுதால் நீட்டி தொழுகிறீர்களே?ஹள்ரத் ஸஃத் (ரளி) அவர்கள் கூறினார்கள்; மகனே!
நாம் இமாம்.மக்கள் நம்மை பின்பற்றுகிறார்கள்.(நாம் நீட்டி தொழுவதை மக்கள் பார்த்தால் அதனை அவசியம் என்பதாக விளங்கிகொண்டு பேண ஆரம்பிப்பார்கள்.) (ஆதாரம்:மஜ்மஉஜ்ஜவாயித் லில் ஹைஸமி 1/182,தலைப்பு:باب الاقتداء بالسلف )
பொது மக்கள் ஸஹாபாக்கள் கூறுவதை மட்டும் தக்லீத் செய்யவில்லை.மாறாக பெரிய ஸஹாபாக்களின் அமலை மட்டும் பார்த்து தக்லீத் செய்தார்கள் எனும்போது,ஆதாரங்களை ஆய்வு செய்யும் கேள்வியே எழாது.இதனால் தான் பெரிய ஸஹாபாக்கள் தங்களது அமலில் நுணுக்கமாக பேணிக்கையை கடைப்பிடித்தார்கள்.
ஆதாரம்:6
أن عمر بن الخطاب رأى على طلحة بن عبيد الله ثوبا مصبوغا وهو محرم . فقال عمر : ما هذا الثوب المصبوغ يا طلحة ؟ فقال طلحة : يا أمير المؤمنين . إنما هو مدر . فقال عمر : إنكم أيها الرهط أئمة [ ص: 37 ] يقتدي بكم الناس . فلو أن رجلا جاهلا رأى هذا الثوب ، لقال : إن طلحة بن عبيد الله كان يلبس الثياب المصبغة في الإحرام . فلا تلبسوا أيها الرهط شيئا من هذه الثياب المصبغة
ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் அவர்கள் இஹ்ராமில் நிறமுள்ள ஆடையை அணிந்துள்ளதை பார்த்தார்கள்.தல்ஹா! நிறம் உள்ள ஆடையாக உள்ளதே? என உமர் (ரளி) கேட்டார்கள்.ஹள்ரத் தல்ஹா அவர்கள், அமீருல் முஃமினீன்! மங்கலான நிறம் உள்ளதை தான் அணிந்துள்ளேன் (வாசனை நீங்கிய ஆடையை அணியலாம்) என பதில் அளித்தார்கள்.ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள் கூறினார்கள்; நீங்கள் இமாம்.மக்கள் உங்களை பின்பற்றுகிறார்கள்.அறியாத மனிதர் இந்த ஆடையை பார்த்து, தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் அவர்கள் இஹ்ராமில் நிறம் உள்ள ஆடையை அணிந்துள்ளார் என கூறுவார்.எனவே இது போன்ற நிறம் உள்ள ஆடைகளை அணியாதீர்கள்.
(ஆதாரம்:அல்இஸ்தீஆப் லி இப்னு அப்துல்பர் 2/315, அல்இஸாபா லில் ஹாபிள் இப்னு ஹஜர் 2/361)
மேற்கூறப்பட்ட நிகழ்வில் நமக்கு தெளிவாக புரிகிறது.
ஸஹாபாக்களில் மார்க்க ஞானம்,பிக்ஹில் தனித்துவம் பெற்று விளங்குபவர்களின் தீர்ப்புக்கள், ஆய்வுகள் மட்டுமின்றி செயல்களும் பின்பற்றப்பட்டது.இவைகளில் ஆதாரங்களை அறிய வேண்டிய கேள்வியே பிறக்காது.இதனால் தான் பெரும் ஸஹாபாக்கள் தங்களது அமல்களில் மிகவும் பேணுதலாக இருந்தார்கள்.தங்களை போன்றவர்களையும் பேணுதலை கடைப்பிடிக்க வலியுறுத்தினார்கள்.
ஆதாரம்:7
إني قد بعثت عمار بن ياسر أميراً، وعبد الله بن مسعود معلماً ووزيراً، وهما من النجباء من أصحاب رسول الله من أهل بدر، فاقتدوا بهما وأطيعوا واسمعوا قولهما
ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள்,ஹள்ரத் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களை கூபாவிற்கு அனுப்பினார்கள்.மேலும் கூபாவாசிகளுக்கு கடிதம் எழுதினார்கள்.நான் உங்களிடத்தில் அம்மார் இப்னு யாஸிர் (ரளி) அவர்களை அமீராக,(தலைவராக) அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களை ஆசிரியராக, மந்திரியாக அனுப்பியுள்ளேன்.இருவரும் பெருமானாரின் உயர்வுமிக்க தோழர்களாக திகழ்பவர்கள்.பத்ருப்போரில் கலந்துக்கொண்டவர்கள்.
இருவரின் சொல்லையும் பின்பற்றுங்கள்.இருவரின் பேச்சையும் கேளுங்கள்.(ஆதாரம்:
ஆதாரம்:8
فمن عرض له منكم قضاء بعد اليوم فليقض بما في كتاب الله فإن جاء أمر ليس في كتاب الله فليقض بما قضى به نبيه صلى الله عليه وسلم فإن جاء أمر ليس في كتاب الله ولا قضى به نبيه صلى الله عليه وسلم فليقض بما قضى به الصالحون فإن جاء أمر ليس في كتاب الله ولا قضى به نبيه صلى الله عليه وسلم ولا قضى به الصالحون فليجتهد رأيه
ஹள்ரத் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் மார்க்க தீர்ப்பின் உசூல்களை கூறியவாறு சொன்னார்கள் உங்களில் ஒருவருக்கு தீர்ப்பளிக்கும் (தேவை) ஏற்பட்டால் அல்லாஹ்வின் வேதத்தின்படி தீர்ப்பளிக்கட்டும்.. அதுகுறித்து குர்ஆனில் இல்லையைனில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லை வைத்து தீர்ப்பளிக்கட்டும்.அது குறித்து குர்ஆன்,நபியின் வழிமுறையில் இல்லையெனில் நல்லோர்களின் தீர்வுகளுக்கு ஏற்ப தீர்ப்பளிக்கட்டும்.அல்லாஹ்வின் வேதம்,நபியின் வழிமுறை,நல்லோர்களின் தீர்வுகள் அது குறித்து இல்லையெனில் தனது ஆய்வை முன்வைத்து ஆராயட்டும்.(ஆதாரம்:ஸுனன் நஸாயி 2/305,பாடம்:ادب الاقضية الحكم باتفاق أهل العلم )
இந்த அறிவிப்பில் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் நான்கு நிலைகளை விளக்குகிறார்கள்.
முதலாவது, அல்லாஹ்வின் வேதம்
இரண்டாவது,சுன்னத்
மூன்றாவது,நல்லோர்களின் தீர்வுகள்
நான்காவது, ஆய்வு செய்வது முதலில் அல்லாஹ்வின் வேதம் பிறகு சுன்னத் என்பது அல்லாஹ்வின் வேதத்தை அணுகி சுன்னத்தை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதாக சுய அறிவுடையவர் எவரும் கூறமாட்டார்.ஏனெனில் அல்லாஹ்வின் வேதத்திற்கு தனது அறிவால் விளக்கம் கூறி அதற்கு எதிராக சுன்னத் உள்ளது என வாதிடுவது முறையில்லை.மாறாக அல்லாஹ்வின் வேதத்தின் விளக்கத்தை சுன்னத்தின் ஒளியில் புரியவேண்டும்.விபச்சாரத்தின் தண்டனை குர்ஆனில் 100 கசையடி என்பதாக உள்ளது.இதனால் சுன்னத்தின் பக்கம் செல்ல தேவையில்லை என்பதாக கூறி கல்லெறிதல் குர்ஆனுக்கு எதிராக இருப்பதால் ஆதாரமற்றது என்பதாக வாதிடுவது ஒன்றுப்பட்ட உம்மத்திற்கு மாற்றமானது என்பது வெளிப்படுகிறது.இதே போன்றுதான் ஆய்வாளர்களான நல்லோர்களின் தீர்வுகள் மூன்றாவது அந்தஸ்தில் இருப்பது குர்ஆன்,சுன்னாவை விளக்கியவாறு அவர்களின் தீர்ப்புகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்பதாக புரிந்து கொள்ளக்கூடாது.மாறாக குர்ஆன்,சுன்னாவின் விளக்கமானது நல்லோர்களின் தீர்ப்புகளுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம்.தக்லீத் என்பதும் இவ்வாறுதான் அமைந்துள்ளது.அதாவது குர்ஆன்,சுன்னாவில் உறுதிமிக்க,தீர்க்கமான ஆதாரங்கள் தெளிவாக இல்லாத போதும்,மாறுப்பட்ட கருத்துக்களுக்கு வாய்ப்பு இருக்கும் போதும் குறிப்பான அர்த்தத்தை அறிவதற்கு முஜ்தஹிதின் ஆய்வாளர் சொல்லை ஏற்கவேண்டும்.
மேலும் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களின் கட்டளையானது ஆய்வாளக்குரியது.
அதுமட்டுமில்லாமல் தக்லீத் அறியாதவர் மட்டுமின்றி உலமாக்கள் தனது ஆய்வு கருத்தின் மீது நம்பிக்கை கொள்ளாமல் தன்னை விட சிறந்த முன்னோர்களின் பக்கம் திரும்பவேண்டும்.
(உலமாக்களின் தக்லீத்,
அறியாதவர்களின் தக்லீத் இரண்டிற்கும் மத்தியில் வித்தியாசம் உண்டு.இன்ஷா அல்லாஹ் பிறகு பார்ப்போம்.)
ஆதாரம்:9
كان ابن عمر لا يقرأ خلف الإمام ، قال : فسألت القاسم بن محمد عن ذلك ، فقال : إن تركت فقد تركه ناس يُقتدى بهم ، وإن قرأت فقد قرأناس يُقتدى بهم و كان القاسم ممن لا يقرء
ஹள்ரத் ஸாலிம் இப்னு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு உமர் (ரளி) அவர்கள் இமாமிற்கு பின்னால் கிராஅத் ஓதமாட்டார்கள்.எனவே அதனை குறித்து காஸிம் இப்னு முஹம்மத் அவர்களிடத்தில் கேட்டேன்.காஸிம் அவர்கள் கூறினார்கள்; நீர் (இமாமின் பின்னால் கிராஅத் ஓதுவதை ) விட்டுவிட்டாலும் அனுமதி உண்டு.ஏனெனில் பின்பற்றப்படுபவர்களும் கிராஅத் ஓதுவதை விட்டு இருக்கிறார்கள்.நீர் (இமாமின் பின்னால் கிராஅத்) ஓதினாலும் அனுமதி உண்டு.ஏனெனில் பின்பற்றப்படுபவர்களும் கிராஅத் ஓதியுள்ளார்கள்.மேலும் காஸிம் அவர்களே இமாமிற்கு பின்னால் கிராஅத் ஓதமாட்டார்கள்.(ஆதாரம்:முஅத்தா இமாம் முஹம்மத் பக்கம்:96, தலைப்பு:باب القراءة خلف الإمام )
ஹள்ரத் காஸிம் இப்னு முஹம்மத் மூத்த தாபியீன்களிலும், மதீனாவின் பிரபல்யமான புகஹாக்களில் ஏழு நபர்களில் உள்ளவர்.ஆதாரங்கள் முரணாக இருக்கும் போது ஏதேனும் ஒரு இமாமை (நல்லெண்ணத்தில்) பின்பற்றுவது அனுமதியுள்ளது என்பதை அன்னாரின் சொல் தெளிவாக விளக்குகிறது.
ஆதாரம்:10
وقد سئل الحسن مرّة: «أنشرب من ماء هذه الساقية فى المسجد؟ فإنها صدقة؟ فقال الحسن: قد شرب أبو بكر وعمر رضي الله عنهما من سقاية أم سعد ، فمه ؟
கன்ஜுல் உம்மாலில் தபகாது இப்னு ஸஃத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பானது வந்துள்ளது
ஹள்ரத் ஹஸன் (ரஹ்) அவர்களிடத்தில் ஒருவர் கேட்டார்.நீங்கள் மஸ்ஜிதிலிருந்து தண்ணீர் குடிக்கிறீர்களே? ஏனெனில் அது தர்மமாக இருக்கிறது.ஹஸன் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்;ஹள்ரத் அபூபக்கர் (ரளி), ஹழ்ரத் உமர் (ரளி) உம்முஸஃதில் (மஸ்ஜிதில்) தண்ணீர் அருந்தியுள்ளார்கள். எனவே (நான் குடித்தால்) என்ன ஆகும்? (ஆதாரம்:கன்ஜுல் உம்மால் 3/318,பாடம்:الزكوة )
ஹள்ரத் ஹஸன் (ரஹ்) அவர்கள், ஹள்ரத் அபூபக்கர் (ரளி),ஹள்ரத் உமர் (ரளி) அவர்களின் செயலை தவிர வேறு ஆதாரத்தை கூறவில்லை.இரு பெரியோர்களையும் தக்லீத் செய்வதை போன்றாகும்.
ஆதாரம்:11
والذين حفظت عنهم الفتوى من أصحاب رسول الله صلى الله عليه وسلم مائة ونيف وثلاثون نفسا ، ما بين رجل وامرأة
அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்;
130 மேற்பட்ட ஸஹாபாக்களின்
பத்வாக்கள் (தீர்ப்புகள்) பாதுகாக்கப்பட்டுள்ளன.
அவர்களில் ஆண்களும்,பெண்களும் உள்ளனர்.
(ஆதாரம்:இஃலாமுல் முவக்கியீன் லி இப்னுல் கைய்யிம் 1/9)
ஸஹாபாக்களின் பத்வாக்களில் இருவிதமான நடைமுறைகளும் இருந்தன.சில சமயம் அவர்களின் தீர்ப்புகளுடன் குர்ஆன்,
சுன்னாவிலிருந்து ஆதாரம் இருக்கும்.சில சமயம் ஆதாரத்தை கூறாமல் தீர்ப்புகள் மட்டும் இருக்கும்.இது குறித்து உதாரணங்களை முன்னால் கூறிவிட்டோம்.முஅத்தா இமாம் மாலிக்,கிதாபுல் ஆஸார் லில் இமாம் அபூ ஹனீபா,முஸன்னப் அப்துர்ரஜ்ஜாக்,முஸன்னப் இப்னு அபீஷைபா,ஷர்ஹு மஆனில் ஆஸார் லித்தஹாவி,அல்மதாலிபுல் ஆலியா லில் ஹாபிள் இப்னு ஹஜர் போன்றவர்களின் நூல்களில் அதிகப்படியான ஆதாரங்கள் உண்டு.
No comments:
Post a Comment