மத்ஹபுகளின் அவசியம் தொடர்:4
முதல் நிலைதக்லீத் செய்வதற்கு குறிப்பான முஜ்தஹித்
(ஆய்வாளர்) இல்லை.மாறாக,ஒரு மஸ்அலாவில் ஒரு மார்க்க அறிஞரின் வழிமுறையை தேர்ந்தெடுப்பது, மற்றொரு மஸ்அலாவில் வேறு அறிஞரின் வழிமுறையை ஏற்பது இதற்கு تقليد مطلق (தக்லீதே முத்லக்/பொதுவான தக்லீத்) அல்லது تقليد عام (தக்லீதே ஆம்) என்று சொல்லப்படும்.
மற்றொரு நிலை:குறிப்பான ஒரு முஜ்தஹிதான இமாமின் வழிமுறையை அனைத்து மஸ்அலாவிலும் ஏற்று நடப்பது இதற்கு (தக்லீதே ஷஹ்ஸி) தனிநபரை பின்பற்றுவது என சொல்லப்படும்.
குர்ஆனின் ஒளியில் தக்லீதின் ஆதாரம்
முதல் ஆதாரம்:
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْۚ
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்;
உலுல் அம்ர் என்பதன் விளக்கத்தில் இருவிதமான கருத்துக்கள் உள்ளன.
முதல் கருத்து:சில அறிஞர்களிடத்தில் இஸ்லாமிய ஆட்சியாளர்
இரண்டாவது கருத்து:ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரளி),ஹள்ரத் அப்துல்லாஹ் (ரளி), ஹள்ரத் முஜாஹித் (ரஹ்), ஹள்ரத் அதா இப்னு ரபாஹ் (ரஹ்), அதா இப்னு ஸாயிப் (ரஹ்), ஹஸனுல் பஸரி (ரஹ்), அபுல் ஆலியா (ரஹ்) போன்ற ஏராளமான விரிவுரையாளர்களிடமிருந்து உலுல் அம்ர் என்பது புகஹாக்கள் எனும் மார்க்க அறிஞர்கள் என எடுத்து சொல்லப்படுகிறது.
இமாம் ராஜி (ரஹ்) அவர்கள்
உலுல் அம்ர் என்பது புகஹாக்கள் (மார்க்க விற்பன்னர்கள்) என்பதற்கு
பல்வேறுபட்ட காரணங்களின் மூலம் முன்னுரிமை கொடுக்கிறார்கள்.
(தப்ஸீர் கபீர் 3/334)
இமாம் அபூபக்கர் ஜஸ்ஸாஸ்
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:இரண்டு விதமான கருத்துக்களிலும் எந்த ஒரு முரண்பாடும் இல்லை.மாறாக உலுல் அம்ரில் இரண்டு அர்த்தமும் உள்ளடங்கும்.அரசியலமைப்பு சட்டங்களில் அதிகாரிகளுக்கு கட்டுப்படுவது.ஷரீஅத்தின் சட்டங்களில் மார்க்க அறிஞர்களுக்கு கட்டுப்படுவது.
(அஹ்காமுல் குர்ஆன் லிஜஸ்ஸாஸ் 2/256 தலைப்பு:உலுல் அம்ருக்கு கட்டுப்படுத்து)
அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படுவதன் முடிவும் உலமாக்களுக்கு கட்டுப்படுவதுதான்.ஏனெனில் ஆட்சியாளர்களும் ஷரீஅத்தின் சட்டங்களில் உலமாக்களுக்கு கட்டுப்பட்டவர்கள்தான்.
(இஃலாமுல் முவக்கியீன் லி இப்னுல் கைய்யிம் 1/7)
ஆக, அல்லாஹ் ரசூலுக்கு கட்டுப்படுங்கள்.மேலும் அல்லாஹ் ரசூலின் சொல்லிற்கு விரிவுரையாளர்களாக உள்ள உலமாக்கள், அறிஞர்களுக்கு கட்டுப்படுங்கள் என்பதை முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வலியுறுத்தியுள்ளான் என்பதை புரிய முடிகிறது.இதற்கு தான் தக்லீத் என்பதாக சொல்லப்படும்.
இதனின் தொடர்ச்சியாக வரும் வசனம்
فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ
உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும்,(அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள்
மேற்கூறிய வசனத்திற்கு விரிவரையாக வந்துள்ள வசனத்தின் (فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ) வாசகத்தின் விளக்கம்
இமாம் அபூபக்கர் ஜஸ்ஸாஸ்
(ரஹ்) அவர்கள் உலுல் அம்ர் என்பது புகஹாக்கள் என்பதை வலியுறுத்தியவாறு பின்வருமாறு கூறுகிறார்கள்;
قوله تعالى ذلك فإن تنازعتم فى شئ فردوه إلى الله و رسول يدل على أن أولى الأمر هم الفقهاء لأنه أمر سائر الناس بطاعتهم ثم قال فإن تنازعتم الخ فأمر اولى الامر برد المتنازع فيه إلى كتاب الله و سنة نبيه صلى الله عليه وسلم إذا كانت العامة ومن ليس من أهل العلم ليست هذه منزلتهم لانهم لا يعرفون كيفية الرد إلى كتاب الله والسنة ووجوه دلائلهما على أحكام الحوادث فثبت أنه خطاب للعلماء
قوله تعالى ذلك فإن تنازعتم فى شئ فردوه إلى الله و رسول يدل على أن أولى الأمر هم الفقهاء لأنه أمر سائر الناس بطاعتهم ثم قال فإن تنازعتم الخ فأمر اولى الامر برد المتنازع فيه إلى كتاب الله و سنة نبيه صلى الله عليه وسلم إذا كانت العامة ومن ليس من أهل العلم ليست هذه منزلتهم لانهم لا يعرفون كيفية الرد إلى كتاب الله والسنة ووجوه دلائلهما على أحكام الحوادث فثبت أنه خطاب للعلماء
உலுல் அம்ருக்கு கட்டுப்படுங்கள் என்பதாக கூறியவுடன் அல்லாஹ் கூறுவது உங்களுக்கு ஏதேனும் சட்டங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அல்லாஹ் ரசூலின் பக்கம் திரும்புங்கள் என்பதுதான்.
உலுல் அம்ர் என்பது புகஹாக்கள் என்பதற்கு மிகப்பெரிய ஆதாரம் அல்லாஹ் மக்களை அவர்களுக்கு கட்டுப்படும்படி வலியுறுத்திய பிறகு فإن تنازعتم என்பதாக கூறி மக்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்படும் விஷயத்தில் அல்லாஹ் ரசூலின் பக்கம் திரும்பவேண்டும்.இது புகஹாக்களுக்குரிய கட்டளையாகும்.ஏனெனில் பொதுமக்களுக்கு இதனை குறித்து போதுமான மார்க்க அறிவு இல்லை.குர்ஆன் சுன்னாவின் பக்கம் திரும்பும் வழிமுறை என்ன? என்ற ஞானம் இல்லை.நவீன பிரச்சனைகளுக்குரிய தீர்வுகளின் ஆதாரங்களை ஆராய்ந்து பார்க்கும் ஆற்றல் அறிவு இல்லை.எனவே அல்லாஹ் புகஹாக்களுக்கு தான் கட்டளையிடுகிறான் என்பது நிரூபணமாகிறது.
(சுருக்கமான கருத்து)
(அஹ்காமுல் குர்ஆன் 2/257)
ஆய்வுத்திறன் இல்லாதவர்கள் கருத்து வேறுபாடுள்ள சட்டங்களில் நேரடியாக குர்ஆன்,ஹதீஸை அணுகி முடிவு எடுக்கவேண்டும் என்பது பொருத்தமில்லை.எனவே முதல் வசனம் முகல்லித்
(இமாமை பின்பற்றுபவர்) தக்லீத் செய்யவேண்டும் என்பதையும் இரண்டாவது வசனம் முஜ்தஹித்கள் ஆய்வு செய்யவேண்டும் என்பதையும் பேசுகிறது.
முக்கிய குறிப்பு:ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களின் விளக்கமானது முஆவியா இப்னு ஸாலிஹ்,அலி இப்னு அபூதல்ஹா அவர்களின் வழியாக வந்துள்ளது இதனை இப்னு ஜரீர் அவர்கள் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.இது வலுவான ரிவாயத் என்பதாக இமாம் ஸுயூத்தி அவர்களின் இத்கான் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது ஆதாரம்:
4:83 وَاِذَا جَآءَهُمْ اَمْرٌ مِّنَ الْاَمْنِ اَوِ الْخَـوْفِ اَذَاعُوْا بِهٖ ۚ وَلَوْ رَدُّوْهُ اِلَى الرَّسُوْلِ وَاِلٰٓى اُولِى الْاَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِيْنَ يَسْتَنْۢبِطُوْنَهٗ مِنْهُمْؕ
4:83. மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்; அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஆராய்ந்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள்
வசனத்தின் பின்னணி
மதீனா தய்யிபாவில் நயவஞ்சகர்கள் போர் குறித்து வதந்திகளை பரப்பினார்கள்.முஸ்லிம்களில் சிலர் வதந்திகளை உண்மை என்பதாக எண்ணி பரப்பினர்.இதனால் அங்கு பாதுகாப்பின்மையும் அச்சநிலையும் உருவானது.அப்போது இந்த வசனம் அருளப்பட்டது.போர் அச்சநிலை சூழல் குறித்து செய்தி வந்தால் உலுல் அம்ரிடம் கொண்டு செல்லவேண்டும்.இது குறித்து ஞானம் உள்ளவர்கள் ஆராய்ந்து எதார்த்தத்தை கூறுவார்கள்.அதற்கு ஏற்ப செயல்புரிய வேண்டும்.
இந்த வசனம் குறிப்பான விஷயத்தில் இறங்கியது.எனினும் விரிவுரை,பிக்ஹ் இன் விதியானது வசனங்களின் சட்டங்கள்,மஸாயில்களிலிருந்து வசனம் இறங்கிய பிண்ணனியில் குறிப்பான நிலைகளுக்குரியது என கருதாமல் பொதுவானது என்பதாக புரியவேண்டும்.ஆய்வுத்திறன் ஆய்வுக்கண்ணோட்டம் இல்லாதவர்கள் ஆய்வுத்திறன் உள்ளவர்களை அணுகவேண்டும்.இதற்கு பெயர்தான் தக்லீத் (இமாமை பின்பற்றுதல்) என்பதாகும்.
குறுக்கு வாதமும் நமது நடுநிலையான பதிலும்
முன்பின் தொடரைப் பார்க்கும் போது குறிப்பான சூழ்நிலையில் அருளப்பட்டதை வைத்து கியாமத் வரை தக்லீதின் அவசியம் நிரூபணமாகும் என்று கூறலாமா?
பதில்:
உதாரணமாக நபிகளாரின் ஹதீஸ்கள் மார்க்க அடிப்படை ஆதாரம் என்பதற்கு மத்ஹப் மறுப்பாளர்கள்,நாம் உட்பட ஸுரத்துல் ஹஷ்ர்வுடைய "நபியவர்கள் உங்களுக்கு எதை அளித்துள்ளார்களோ அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.அவர்கள் உங்களுக்கு எதை தடுத்தார்களோ அதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்" (59:7) என்ற வசனத்தைத்தான் முக்கிய ஆதாரமாகக் கூறுகிறோம்.
ஆனால் இந்த வசனம் மாலுல் ஃபைஃ சம்பந்தப்பட்டது (அதாவது) 1. யுத்தகளத்தில் சண்டையிட்டு கைப்பற்றிய பொருளுக்கு கனீமத் எனப்படும். 2.சண்டையிடாமல் ஒப்பந்தம் ஏற்பட்டு எதிரிகளிடமிருந்து கிடைத்த பொருளுக்கு ஃபைஃவுடைய பொருள் எனப்படும்.
கனீமத் பொருள் ஐந்தில் ஒரு பாகம் பைத்துல்மாலுக்கும்,மீதி 4 பாகம் படையினருக்கும் பங்கிடப்படும்.ஆனால்,
ஃபைஃ வுடைய பொருளிலிருந்து படைவீரருக்கு கொடுக்கப்படாது. படைத்தளபதியின் விருப்பப்படி அதை பங்கிடப்படும். பனூ நளீர் கிளையாருடன் யுத்தம் புரிய சென்றபோது சண்டை ஏற்படாமலேயே பரஸ்பரம் ஒப்பந்தம் ஏற்பட்டது.அவர்களின் பொருட்களுடன் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.இது இரண்டாம் வகையை சார்ந்த ஃபைஃவுடைய பொருளாகும்.எனவே, கனீமத்திலிருந்து பங்கு கிடைத்ததைப்போல் பனூ நளீரிடமிருந்து கிடைத்த இந்த ஃபைஃவுடைய பொருளிலிருந்தும் பங்கு கிடைக்கவில்லையே என்று சிலர் எண்ணிய போதுதான் ஸூரத்துல் ஹஷ்ர் உடைய (59:7) வசனம் இறங்கியது.
ஆக இந்த வசனம் குறிப்பிட்ட பனூ நளீரின் ஃபைஃவுடைய பொருள் சம்பந்தமாக இறங்கி இருந்தாலும் இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள (மா) என்பது பொதுவானதாக இருப்பதால் அதன் கருத்து அந்த சம்பவத்துடன் மட்டும் முடிந்து விடாமல் நபிகளார் சொன்ன அனைத்தையும் ஏற்கவேண்டும் தடுத்து அனைத்தையும் விட்டு தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று பொதுவாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.மாறாக, இச்சம்பவத்துடன் மட்டும் சம்பந்தப்பட்டதாக இருந்தால் "ஃபைஃவுடைய பொருள்களில் எதை தந்தார்களோ அதை வாங்கிக்கொண்டு தராததை கேட்காதீர்கள்" என்று குறிப்பிட்டுச் சொல்லி இருக்க வேண்டும் ஆகவே, தான் ஹள்ரத் இப்னு மஸ்ஊத் (ரளி) அன்ஹு அவர்கள் எல்லா ஹதீஸ்களுக்கும் ஆதாரமாக இந்த (59:7) வசனத்தையே கூறுகிறார்கள். அதாவது அவர்கள் ஒரு உபதேசத்தில், பிறர் முடியை தன் முடியுடன் சேர்த்து நீட்டிக்கொள்பவர் (சவுரிமுடி அணிபவள்), பிற பெண்களுக்கு முடியை இணைத்து விடுபவள், (உடலில்) பச்சை குத்தி விடுபவள், பச்சை குத்திக்கொள்பவள் ஆகியோரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்.என்று கூறியபோது, பேச்சு முடிந்து,ஒரு பெண் எழுந்து நீங்கள் சொல்லும் இவ்விஷயத்தை குர்ஆனில் நாம் பெற்றுக்கொள்ள முடியவில்லையே? என்று கேட்டார் அதற்கு இப்னு மஸ்ஊத் ரளி அவர்கள் நீ குர்ஆனை ஓதியிருந்தால் இதை குர்ஆனில் பெற்றிருப்பாய் என்றார்கள்.உடனே அப்பெண், நான் குர்ஆனை மனனம் செய்த "ஹாஃபிளா" வாகும் எங்கும் கிடைக்கவில்லையே என்று கூற, உடனே இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் (59:7) என்ற வசனத்தை ஓதிக்காட்டி, நான் கூறிய ஹதீஸ், இந்த வசனத்துடன் சம்பந்தப்பட்டது என்று கூறினார்கள்.ஆக அப்பெண் குர்ஆனிலே இல்லையே என்று கேட்டபோது இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் எல்லாம் விஷயம் குர்ஆனில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறாமல் இந்த ஹதீஸ் குர்ஆனில் உள்ளது என்று கூறி அதை நிரூபித்தார்கள்.
இச்சம்பவத்தின் மூலம் எல்லா ஹதீஸ்களும் குரான் தான் அசல் என்பது தெளிவாகிறது.
"ஆக இந்த வசனம் பனூநளீரின் ஃபைஃபொருட்கள் விஷயமாக இறங்கி இருந்தாலும் சஹாபாக்களில் மார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் முக்கிய இடம் வகித்த இப்னு மஸ்ஊத் ரளி அவர்கள் இந்த வசனத்தை அச்சம்பவத்துடன் மட்டும் சுருக்கிவிடாமல் எல்லா ஹதீஸ்களுக்கும் இந்த வசனம்தான் ஆதாரம் என்ற ரீதியில் விளக்கினார்கள்.
இங்கு வினோதம் என்னவெனில் நாம் மட்டுமல்ல மத்ஹப் மறுப்பாளர்கள் உட்பட அனைவருமே நபியவர்களின் ஹதீஸ் இஸ்லாமிய அடிப்படை சட்டங்களில் ஒன்றுதான் என்பதற்கு முக்கிய ஆதாரமாகக் காட்டுவது இந்த (59:7) வசனத்தை தான்.
இதன் மூலம் எந்த வசனத்தையும் அது இறக்கப்பட்ட சம்பவத்துடன் மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், அதனுடைய வார்த்தைகளில் பொதுக்கருத்தை வைத்துதான் சட்டம் எடுக்க வேண்டும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம் என்பது தெளிவாகும்.
இதுபோன்று தான் இதற்கு ஆதாரமாக நாம் கூறும் இந்த வசனம் குறிப்பான விஷயத்தில் இறங்கி இருந்தாலும் சுருக்கி விடாமல் பொதுவாக அர்த்தம் கொள்ளலாம்.
No comments:
Post a Comment