Friday, January 7, 2022

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்


தக்லீதின் படித்தரங்கள்

தொடர்:20

இரண்டாவது: ஆழ்ந்த அறிவாற்றல் உள்ள அறிஞர் (عالم متبحر) இவரைக் கொண்டு கருத்து இஜ்திஹாதின் (ஆய்வு செய்யும்) தரத்தை அடையாதவர் எனினும்,குர்ஆன் சுன்னாவின் ஞானங்களில் திறமையும்,ஆழ்ந்த அறிவும் பெற்று திகழ்பவர்.குறைந்தபட்சம் தமது மத்ஹபின் மஸாயில்களை நன்றாக ஆழ்ந்து படித்து பதியவைத்திருப்பவர்.மேலும் அதில் குறிப்பான ஆற்றலை பெற்றிருப்பார்.இவரின் தக்லீத் பொதுமக்களின் தக்லீதை விட்டு மாறுபட்டது.பின்வரும் விஷயங்களில் தனித்த தகுதிகள் இருக்கவேண்டும். 1)தனது இமாமின் மத்ஹபில் ஒரு விஷயத்தில் பல கூற்றுகள் இருந்தால் அதில் இணக்கத்தை ஏற்படுத்தும் அல்லது முன்னுரிமை கொடுக்கும் வழிமுறைகளை அறிந்திருக்கும் தகுதி இருப்பது. 2)எந்த மஸ்அலாவில் இமாமிடமிருந்து தெளிவான விளக்கம் இல்லையெனில் இமாமின் அடிப்படைகளுக்கு ஏற்ப சட்டங்களை ஆய்ந்தறிவது 3)கடுமையான சூழ்நிலைகளில்,நிர்பந்த நிலைகளில் தேவைகளுக்கு ஏற்ப சில சமயங்களில் மற்ற முஜ்தஹிதின் (ஆய்வாளரின்) சொல்லின் பேரில் பத்வா அளிப்பது.இதற்குரிய நிபந்தனைகள்,அடிப்படையான விதிகள் பத்வா நூல்களில் உள்ளது. 4)இமாமின் எதேனும் ஒரு சொல் தெளிவான,ஸஹீஹான ஹதீஸிற்கு மாற்றமாக உள்ளது.மேலும் அதற்கு எதிரான வேறு ஹதீஸ்களும் இல்லை.அத்துடன் இமாமின் சொல்லின் மீது உள்ளம் நிம்மதி பெறவில்லையெனில் இமாமின் சொல்லை விட்டு ஹதீஸின்படி அமல் செய்யலாம். இது குறித்து ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 
اذا وجد المتبحر فى المذهب حديثا صحيحا يخالف مذهبه فهل له أن يأخذ بالحديث و يترك مذهبه فى تلك المسألة؟ فى هذه المسألة بحث طويل و اطال فيها صاحب خزانة الروايات نقلا عن دستور المساكين فلنورد كلامه من ذلك بعينه 
ஆழ்ந்த அறிவாற்றல் உள்ள அறிஞருக்கு (عالم متبحر) தனது மத்ஹபிற்கு மாற்றமாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கிடைத்தால் அவர் ஹதீஸின் படி செயல்படுவதற்கும் அந்த மஸ்அலாவில் அவரின் மத்ஹபை விட்டுவிடுவதற்கும் அனுமதியுள்ளதா? இந்த மஸ்அலாவில் நெடிய ஆய்வு உள்ளது.'கஜானதுர் ரிவாயத்' ஆசிரியர் அவர்கள் தஸ்தூருல் மஸாகீன் அவர்களிடமிருந்து எடுத்தெழுதி இது குறித்து விரிவாக பேசியுள்ளார்.நாமும் இங்கு அதனை அப்படியே எடுத்தெழுதுகிறோம்..... இதன் பிறகு ஹள்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் இந்த மஸ்அலா குறித்து ஆய்வு செய்தவாறு கூறுகிறார்கள்: ஆழ்ந்த அறிவாற்றல் உள்ள அறிஞர் (عالم متبحر) அந்த மஸ்அலாவில் தனது மத்ஹபை விட்டுவிடுவது கூடாது என்பதாக ஒரு சாரார் கூறுகின்றனர்.
எனினும்,அதிகமான உலமாக்கள் அவருக்கு அனுமதி உண்டுஎன்கின்றனர்.எனினும்,இதில் நிபந்தனைகள் உண்டு.அதனை பேணுவது அவசியமாகும். 

1) அறிஞருக்கு முன்னால் கூறிய தகுதிகள் இருக்கவேண்டும். 

2)எந்த ஹதீஸின் பேரில் இமாமின் கூற்றை விடுகிறாரோ அந்த ஹதீஸ் அனைத்து அறிஞரிடத்திலும் ஆதாரப்பூர்வமாக இருக்கவேண்டும்.
ஏனெனில் சில சமயங்களில் ஏதேனும் ஹதீஸ் வலுவானதா? இல்லையா என்பதில் முஜ்தஹித்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்படும்.வலுவானது என்பவர் அமல் செய்வார்.பலகீனமானது என்பவர் அதனை விட்டுவிடுவார்.இந்த சமயத்தில் முஜ்தஹித் ஹதீஸை பலவீனம் என்பதாக கருதி விட்டுவிட்டார்.இதனால் ஆய்வாளராக இல்லாதவர் மத்ஹபை விட்டு விட்டு ஹதீஸை எடுத்து அமல் செய்வது சரியில்லை.
 
3) அந்த ஹதீஸிற்கு முரணாக குர்ஆன் வசனம் அல்லது வேறு ஹதீஸ் இருக்க கூடாது. 

4)அந்த ஹதீஸின் கருத்தானது தெள்ளத் தெளிவாக இருக்கவேண்டும். மனம் உவந்து ஏற்கும் வேறு கருத்து அதற்கு இருக்ககூடாது.ஏனெனில் சில சமயங்களில் ஒரு ஹதீஸில் பல்வேறு அர்த்தங்களுக்கு வாய்ப்பு உண்டு.முஜ்தஹித் ஆய்வில் ஒரு கருத்தை குறிப்பாக்கி இருப்பார்.இதனால் அவரின் மத்ஹப் ஹதீஸிற்கு மாற்றமாக உள்ளது என சொல்லப்படாது.இப்போது முகல்லித் (இமாமை பின்பற்றுபவர்) ஹதீஸின் வேறு கருத்தை தேர்ந்தெடுப்பது பொருத்தமில்லை.ஏனெனில் தக்லீத் என்பது மார்க்க சட்டங்களில் குர்ஆன்,ஹதீஸின்வழிகாட்டுதல்களில் பல்வேறு அர்த்தங்களுக்கு வாய்ப்புள்ள போது ஒரு அர்த்தத்தை தேர்வு செய்வதில் தனது புரிதலை புறந்தள்ளி எதேனும் ஆய்வாளரின் புரிதலின் மீது நம்பிக்கை கொள்வதற்கு சொல்லப்படும்.எனவே இந்த சமயத்தில் முஜ்தஹிதை தக்லீத் செய்தாலும் ஹதீஸிற்கு மாற்றமாக இருப்பதாக கூறப்படாது. 

5)இதே போன்று ஹதீஸின் பேரில் எந்த சொல்லை தேர்வு செய்தாலும் அது நான்கு மத்ஹபுகளின் இஜ்மாவிற்கு (ஒன்றுபடுதல்) மாற்றமாக இருக்க கூடாது.ஏனெனில் நான்கு மத்ஹபுகளை விட்டு வெளியே செல்வதால் குழப்பங்கள்,கெடுதிகள் உருவாகிவிடும்.
இது குறித்து முன்னால் சென்று விட்டது.

இந்த நிபந்தனைகளுடன் ஆழ்ந்த அறிவாற்றல் உள்ள அறிஞருக்கு (عالم متبحر) தனது இமாமின் சொல்லை விடுவது சரியானது.இது சம்பந்தமாக அறிஞர்களின் தெளிவான வழிகாட்டுதல்கள் உண்டு. ஷைகுல் இஸ்லாம் அல்லாமா நவவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் 
قال الشيخ ابو عمر و فيمن وجد من الشافعية حديثا يخالف مذهبه نظر أن كملت الات الاجتهاد فيه مطلقا أو فى ذلك الباب أو المسئلة كان له الاستقلال بالعمل به و أن لم يكمل و شق عليه مخالفة الحديث بعد أن بحث فلم يجد لمخالفته عنه جوابا شافيا فله العمل به إن كان عمل به أمام مستقل غير الشافعي و يكون هذا عذر له فى ترك مذهب أمامه هنا و هذا الذي قاله حسن متعين 
ஷைகு அபூஅம்ர் (ரஹ்) (இப்னுஸ்ஸலாஹ்) கூறுகிறார்கள்:ஷாபியி மத்ஹபை சார்ந்த அறிஞருக்கு அவரின் மத்ஹபிற்கு மாற்றமாக ஹதீஸ் கிடைத்தால் அவர் இஜ்திஹாதின் (ஆய்வின்) நிபந்தனைகள் பெற்றவரா அல்லது குறிப்பாக அந்த தலைப்பில் அல்லது குறிப்பாக அந்த மஸ்அலாவில் இஜ்திஹாதின் தகுதி அடைந்தவரா என பார்க்கப்படும்.அவ்வாறு இருந்தால் அவர் ஹதீஸின்படி அமல் செய்யமுடியும்.ஆனால்,அதில் இஜ்திஹாதின் நிபந்தனைகள் முழுமைபெறவில்லை....... ஆனால் முழுமையாக ஆராய்ந்த பிறகும் ஹதீஸிற்கு திருப்தியான பதில் கிடைக்கவில்லை.அந்த ஹதீஸிற்கு மாற்றமாக இருப்பது தெரிந்தால் அவர் ஹதீஸின் பேரில் அமல்செய்யமுடியும்.எனினும்,இமாம் ஷாபியி அல்லாமல் வேறு தனித்த இமாம் அதனை அமல் செய்திருக்க வேண்டும்.ஏனெனில் அவர் தனது இமாமின் மத்ஹபை (அந்த மஸ்அலாவில்) விடுவதற்கு தகுந்த காரணமாகிவிடும்.(அல்லாமா நவவி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்) ஷைகு அபூஅம்ர் (இப்னுஸ்ஸலாஹ்) அவர்கள் கூறியது நல்ல விஷயமாகும்.அதன் பேரில் அமல் செய்யலாம். (ஆதாரம்:அல்மஜ்மூஉ ஷரஹுல் முஹத்தப் 1/105) ஹழ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களும் இதனை தேர்ந்தெடுத்துள்ளார்கள். 
 المختار ههنا قول ثالث هو ما اختاره ابن الصلاح و تبعه النووى و صححه 
இந்த மஸ்அலாவில் பொருத்தமானது மூன்றாவது சொல் அதனை இப்னுஸ் ஸலாஹ் (ரஹ்) அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.அல்லாமா நவவி (ரஹ்) அவர்களும் அதனையே பின்பற்றினார்கள்.அதனையே சரியானது என்பதாக கூறினார்கள்.(ஆதாரம்:இக்துல் ஜீத் பக்கம்:57)

No comments:

Post a Comment