தக்லீதின் படித்தரங்கள்
தொடர்:19
நான்கு மத்ஹபுகளில் ஒன்றை மட்டும் ஏன் பின்பற்ற வேண்டும் என்பதை முன்னால் சென்ற ஆய்வின் மூலம் அல்லாஹ்வின் கிருபையால் தெளிவாக புரிந்திருப்போம்.அடுத்து தக்லீத் குறித்து அவசியமான ஒரு தலைப்பை இனி பார்ப்போம்.தக்லீத் செய்பவர்களை கவனித்து தக்லீதில் பலதரப்பட்ட நிலைகள் உள்ளது.அவைகளின் நிலைகளுக்கு ஏற்ப சட்டங்களும் மாறுபடும்.மாறுபட்ட நிலைகளின் வித்தியாசத்தை புரியாமல்தான் மத்ஹபுகள் குறித்து தடுமாற்றமும்,குழப்பங்களும் உருவாகுகிறது.இதனால் அத்தகைய நிலைகள் குறித்து சிறிது விரிவாக அறிவோம்.
முதலாவது:பொதுமக்களின் (சாமானியன்) தக்லீத் (تقليد العوام )
இது தக்லீதின் முதல் நிலை பொதுமக்கள் யார்?
1) அரபி மொழி,இஸ்லாமிய கல்விகள் குறித்து முற்றிலும் ஞானமில்லாதவர்கள்.அவர்கள் மற்ற துறைகளில் திறமையானவர்களாக இருந்தாலும் சரி.
2)அரபி மொழியை அறிந்தவர்கள்.அரபி நூல்களை புரியமுடியும்.எனினும்,தப்ஸீர்,
ஹதீஸ்,பிக்ஹ் இவைகளுடன் தொடர்புடைய மார்க்க கல்விகளை முறையாக ஆசிரியர்களிடம் கற்காதவர்கள்.
3)மார்க்க கல்வியை ஆசிரியர்களிடமிருந்து ஓரளவிற்கு கற்றிருப்பார்கள்.எனினும் தப்ஸீர்,ஹதீஸ்,பிக்ஹ் போன்றவைகளின் அடிப்படைகளை திறம்பட கற்காதவர்கள்.
இந்த மூன்று சாரார்களும் தக்லீத் விஷயத்தில் பொதுமக்கள் தான்.இவர்களுக்கு தக்லீத் செய்வதை தவிர வேறு வழியில்லை.ஏனெனில் நேரடியாக குர்ஆன்,ஹதீஸை அணுகி ஆய்வு செய்யும் திறனோ,தகுதியோ இல்லை.மேலும் முரண்பட்ட ஆதாரங்களுக்கு மத்தியில் இணைக்கத்தை உருவாக்குதல் அல்லது ஒரு கருத்தை மட்டும் முன்னுரிமை அளித்து தீர்ப்பளிக்கும் திறமையும் இல்லை.ஆதலால் பொதுமக்கள் மார்க்க சட்டங்களில் ஏதேனும் முஜ்தஹிதைதான் (ஆய்வாளரை) சார்ந்திருக்க வேண்டும்.
அல்லாமா கத்தாபி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்:
و أما يسوغ له التقليد فهو العامي الذي لا يعرف طرق الأحكام الشرعية فيجوز له أن يقلد عالما و يعمل بقوله ......ولأنه ليس من أهل الاجتهاد فكان فرضه التقليد كتقليد الاعمى فى القبلة فإنه لما لم يكن معه آلة الاجتهاد كان عليه تقليد البصير فيها
ஷரீஅத் சட்டங்களின் வழிமுறைகளை அறியாத சாமானியர் ஏதேனும் அறிஞரை தக்லீத் செய்து அவரின் சொல்லை அமல் செய்வது கூடும்........(குர்ஆன்,சுன்னா வில் அதற்குரிய ஆதாரங்களை எழுதிய பிறகு) ஏனெனில் சாமானியருக்கு ஆய்வுத்திறன் இல்லை.அதாவது பார்வை இழந்தவர் கிப்லாவின் விஷயத்தில் பார்வை உள்ளவரை பின்பற்றுவதை போன்று சாமானியரும் (அறிஞரை) பின்பற்றுவது கடைமையாகும்.
ஏனெனில் அவர் கிப்லாவை சுயமாக அறிவதற்கு ஆற்றல் இல்லை.எனவே பார்வை உள்ளவரை தான் தக்லீத் செய்யவேண்டும்.(ஆதாரம்:அல்ஃபகீ ஹ் வல் முத்தஃபக்காஹ் லில் கதீபுல் பஃதாதி பக்கம்:68)
இந்த நிலையில் உள்ள முகல்லித் (இமாமை பின்பற்றுபவர்) ஆதாரங்கள் குறித்து தடுமாறுவதற்கு அல்லது எந்த முஜ்தஹிதின் ஆதாரங்கள் வலுவானதாக உள்ளது என்பதை ஆராய்வதற்கு வேலை இல்லை.எனவே அவர் ஒரு அறிஞரை குறிப்பாக்கி அனைத்து செயல்களிலும் அவரின் சொல்லை நம்பிக்கை கொள்ளவேண்டும்.எதார்த்தம் என்னவெனில் எதேனும் ஹதீஸ் அவரின் இமாமின் வழிமுறைக்கு மாற்றமாக இருந்தாலும் இமாமின் வழிமுறையை பின்பற்றுவது தான் கடமையாகும்.அந்த ஹதீஸின் சரியான கருத்து எனக்கு புரியவில்லை.(அல்லது) இமாமிடத்தில் அதற்கு எதிரான வலுவான ஆதாரம் உள்ளது என்பதாக நம்பிக்கை கொள்ளவேண்டும்.இமாமின் வழிமுறையை ஏற்கவேண்டும்.ஹதீஸிற்கு மாற்றுவிளக்கம் கொடுக்க வேண்டும் என்பதாக கூறுவது வெளிப்படையில் ஆச்சரியமாக இருக்கலாம்.ஆனால், நிதர்சனம் இதுதான்.ஏனெனில் சாமனியருக்கு இதனை தவிர வேறு வழியில்லை.ஏதேனும் ஹதீஸ் இமாமின் வழிமுறைக்கு மாற்றமாக இருந்தால் அவரின் வழிமுறையை விட்டுவிடலாம் என்பதாக இந்த நபருக்கு விருப்பம் அளித்தால் இதனின் முடிவானது குழப்பத்தில்,வழிகேட்டில் தள்ளிவிடும்.ஏனெனில் குர்ஆன்,சுன்னாவிலிருந்து மஸாயில்களை ஆய்ந்து அறிவது ஆழமான விசாலமான துறையாகும்.வாழ்நாள் முழுவதும் செலவழித்தாலும் ஒவ்வொரு நபரும் தேர்ச்சி பெறமுடியாது.சில சமயங்களில் வெளிப்படையான ஹதீஸின் வார்த்தைகளிலிருந்து ஒரு கருத்தை புரியமுடியும்.எனினும்,குர்ஆன், சுன்னாவின் மற்ற ஆதாரங்களின் ஒளியில் வேறு கருத்தை புரியமுடியும்.இப்போது சாமனியர் ஹதீஸின் வெளிப்படையை மட்டும் பார்த்து அமல் செய்ய ஆரம்பித்தால் வழிகேடு உருவாகிவிடும்.இதனை உறுதிப்படுத்தும் நிகழ்வை மெளலானா மெளலவி தகி உஸ்மான் ஹள்ரத் தாமத் பரகாதுஹும் அவர்கள் "தக்லீத் கீ ஷரயீ ஹைய்ஸிய்யத்" நூலில் பதிவு செய்துள்ளார்கள்.நூல்களை வாசிக்கும் பழக்கம் உள்ள நண்பர் இருந்தார்.அதிலும் குறிப்பாக ஹதீஸ்களை வாசிப்பதில் ஆர்வம் உடையவர்.அத்துடன் அவரின் சிந்தனை "நான் ஹனபி எனினும் ஏதேனும் ஹதீஸ் ஹனபி மத்ஹபிற்கு மாற்றமாக இருந்தால் அதனை விட்டுவிடுவேன்".ஒரு சமயம் எனக்கு முன்னிலையில் ஒரு நபருக்கு கூறினார்:காற்று வெளியேறி வாடை உணரும் வரை அல்லது சப்தம் கேட்கும் வரை உளு முறியாது.அப்பாவித்தனத்தால் தவறான புரிதலில் அகப்பட்டுள்ளார் என்பதை நான் புரிந்து கொண்டேன்.பிறகு அவருக்கு புரியவைக்க முயற்சித்தேன்.ஆனால் அவர் திர்மிதியில் உள்ளது என்பதாக பிடிவாதமாக இருந்தார்.இறுதியில் இது குறித்த அனைத்து ஹதீஸ்களையும் கூறி விரிவாக விளக்கினேன்.உண்மைநிலையை தெளிவுப்படுத்தினேன்.அப்போது கூறினார்.நீண்டகாலமாக இதன்படி அமல்செய்து வருகிறேன்.எத்தனை தொழுகைகளை இது போன்று தொழுதேன் என்பது எனக்கு நினைவில்லை.அடிப்படையில் இவரின் தவறுதலான புரிதல் ஜாமிஉத்திர்மிதியில் வரும் ஹதீஸை சுயமாக ஆய்வு செய்ததின் விளைவு.
لا وضوء الا من صوت او ريح
வாடை (உணர்ந்தால்) அல்லது சப்தம் கேட்டாலே தவிர உளூ இல்லை.(ஆதாரம்:திர்மிதி) இதனுடன் திர்மிதியில் இந்த ஹதீஸையும் அவர் படித்துள்ளார்.
اذا كان أحدكم فى المسجد فوجد ريحا بين اليتيه فلا يخرج حتى يسمع صوتا أو يجد ريحا
உங்களில் ஒருவர் மஸ்ஜிதில் இருக்கும்போது அவரது பித்தட்டுகளுக்கு மத்தியில் (காற்று பிரியும்) சப்தம் கேட்காதவரை அல்லது வாடையை உணராதவரை (உளூ செய்வதற்கு) வெளியேற வேண்டாம்.
இந்த ஹதீஸின் வெளிப்படையான வார்த்தைகளை கவனித்து உளூ முறிவதற்கு அடிப்படை (காற்று பிரிந்து) வாடை வருதல் அல்லது சப்தம் கேட்குதல் என்பதாக தவறுதலாக புரிந்து கொண்டார்.எனினும்,அனைத்து புகஹாக்களும் ஒன்றுப்பட்டுள்ளனர்.இந்த ஹதீஸின் கருத்து இதுவல்ல.மாறாக உண்மையென்னவெனில் உளூ முறிந்துவிட்டதாக தடுமாற்றமும்,ஊசலாட்டமும் கொண்டவர்கள் குறித்து நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகும்.இதனை ஹதீஸின் பல்வேறு அறிவிப்புகளை, வாசகங்களை ஒன்றுதிரட்டிதான் இதற்குரிய தீர்வை கூறமுடியும்.வெறும் குர்ஆன்,ஹதீஸின் மொழிப்பெயர்ப்பை மட்டும் சாமானியர் படித்தால் வழிகேட்டிலும்,தவறான புரிதலிலும் அகப்பட்டு விடுவார்.இதேபோன்றுதான் எதேனும் ஹதீஸ் தனது இமாமின் வழிமுறைக்கு மாற்றமாக இருப்பதைக் கண்டு இமாமின் வழிமுறையை விட ஆரம்பித்தால் அவரும் வழிகேட்டில் அகப்பட்டுக்கொள்வார்.இதற்கு ஏராளமான ஆதாரங்களை கூறமுடியும்.எனினும் சுருக்கமாக கூறிவிட்டோம்.
இதனை குறித்து எளிதாக புரிவதற்கு ஓர் உதாரணம்
உலகில் எதேனும் நபர் ஒரு சட்டத்தை அறிய விரும்பினால் அந்த நாட்டின் சட்டத்தை கற்ற திறமையான நபரை அணுகுவார்கள்.மாறாக நேரடியாக சட்டநூல்களை ஆராய்வதற்கு முயற்சிக்க மாட்டார்கள்.
சட்டவியல் அறிஞர் எதேனும் சட்டத்தை கூறினால் அதனை நம்பி ஏற்று அமல்செய்வது கடமையாகும்.பிறகு எதார்த்தமாக சட்டநூல் கையில் கிடைத்தது.அதில் உள்ள வாசகம் அறிஞரின் கருத்திற்கு எதிராக இருந்தாலும் அவரின் கருத்தை நிராகரிக்கமாட்டார்.மாறாக,அவர் கூறியபடி செயல்படுவார்.மேலும் சட்டநூல்களை முறையாக கற்கவில்லை என்பதால் இதனை தம்மால் சரியாக புரியமுடியவில்லை என்பதாகத்தான் உறுதியாக எண்ணுவார்.அதுமட்டுமின்றி இந்த துறையில் திறமை, விசாலமான ஞானம் தேவை.இந்த உதாரணம் சட்டநூல்களை விட குர்ஆன்,சுன்னாவிற்கு மிகவும் பொருத்தமானது.ஷரீஅத்தின் சட்டங்களை சுயமாக ஆராய்ந்து அமல்செய்வதற்கு மிகப்பெரிய திறமை அவசியமாகும்.எனவேதான் நமது புகஹாக்கள் பொதுமக்கள் நேரடியாக குர்ஆன், ஹதீஸின் சட்டங்களை அறிவதற்கு பதிலாக முஜ்தஹித்களை தக்லீத் செய்யவேண்டும் என்பதாக கூறுகின்றனர்.இதனால்தான் சாமானியருக்கு எதேனும் முஃப்தி தவறான தீர்ப்பளித்தால் அதனின் குற்றம் தீர்ப்பு அளித்தவருக்கு மட்டும் தான்.சாமானியர் தங்கடவாதியாக கருதப்படுவார்.ஆனால் அவர் எதேனும் ஹதீஸை பார்த்து அதனின் கருத்தை தவறாக புரிந்து அமல்செய்தால் குற்றவாளியாக கருதப்படுவார்.ஆகவே பொதுமக்கள் மீது தக்லீத் செய்வதுதான் கடமையாகும்.
No comments:
Post a Comment