Monday, April 20, 2020

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்/குற்றச்சாட்டுகளும் பதில்களும்/

மத்ஹபுகளின் அவசியம் தொடர்:1

மார்க்கத்தின்அசலான  அழைப்பானது அல்லாஹ்வை மட்டும்தான் வழிப்படவேண்டும்.
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்,செயல்,அங்கீகாரம் அல்லாஹ்வின் சட்டங்களை விளக்குவதற்குதான்.இதனை எந்த ஒரு முஸ்லிமும் மறுக்கமுடியாது.எது ஹலால்? எது ஹராம்? எது கூடும்? கூடாது?அனைத்திலும் அல்லாஹ்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றவேண்டும்.எவர் அல்லாஹ், ரஸுலுக்கு பகரமாக யாரை தனித்து பின்பற்றினாலும் சுய அதிகாரம் பெற்றவர் என்று நம்பிக்கை கொண்டாலும் அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவார்.எனவே ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் குர்ஆன்,சுன்னாவை பின்பற்றுவது தான் கடமையாகும்.எனினும் குர்ஆன்,சுன்னாவின் சில சட்டங்களை சாமனிய மக்களும் புரிந்துகொள்ளமுடியும்.
அவைகளில் மூடல், முரண்பாடுகள்,மறைமுகபொருள் இருக்காது.அதனின் மொழிப்பெயர்ப்பை படிப்பவர் அர்த்தத்தை தடுமாற்றம் இன்றி புரியமுடியும்.

குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான் لا يغتب بعضكم بعضا 
உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம்.(49:12)

இதனின் மொழிப்பெயர்ப்பை அறிந்தவர் அல்லாஹ் கூறுவதை தடுமாற்றம் இல்லாமல் புரியமுடியும்.ஏனெனில் இதில் மூடல் இல்லை.தெள்ளத்தெளிவாக உள்ளது.முரண்பாடான ஆதாரங்களும் இல்லை.

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
 لا فضل لعربي على عجمي 
அரபி ஒரு அஜமியை (அரபியல்லாதவர்) விட சிறந்தவரல்ல

இதில் எந்தவித குழப்பமும், தடுமாற்றமும் இல்லை.

எனினும்  இதற்கு மாற்றமாக குர்ஆன் சுன்னாவில் அதிகமான சட்டங்களில் மூடல், மறைமுக அர்த்தங்கள்,வெளிப்படையில் முரண்பாடுகள் தென்படலாம்.

அல்லாஹ் கூறுகிறான்:
المطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء   ‌ؕ
. தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்.(2:228)

இதில் قروء (குரூஃ) என்பதற்கு அரபி மொழியில் ஹைள் (மாதவிடாய்) துஹ்ரு (துப்புரவு காலம்) என்ற இரு அர்த்தங்களும் உண்டு.இப்பொழுது வசனத்தின் அர்த்தமானது ஹைள் அல்லது துஹ்ரு. இதில் எதன் பேரில் அமல் செய்வது என கேள்வி எழும்? 

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் கூறுகிறார்கள் 
من لم يترك المخابرة فليؤذن بحرب من الله و رسوله 
முகாபரஹ் (குத்தகை) வியாபாரத்தை விடாதவர் அல்லாஹ் ரசூலிடம் போர்பிரகடனம் செய்யட்டும்.

குத்தகை என்பது பல்வேறு நிலைகள் உள்ளது.இந்த ஹதீஸ் அவைகள் குறித்து அமைதியாக உள்ளது.எந்த நிலை கருத்தாகும்?அனைத்தும் கூடாதா? சில அனுமதியுள்ளதா?  இதில் தெளிவு இல்லை.

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:من كان له أمام فقراءة الامام له قراءة 
இமாமின் கிராஅத் முக்ததிக்கு கிராஅத்தாகும்.

முக்கிய குறிப்பு:இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதாக மத்ஹப் மறுப்பாளர்களால் விமர்சிக்கப்படுகிறது.எனினும் ஆதாரப்பூர்வமானது.

  இந்த ஹதீஸ் தொழுகையில் இமாம் கிராஅத்ஓதினால் முக்ததி அமைதியாக நிற்கவேண்டும் என்பதை பேசுகிறது.  

மற்றொரு ஹதீஸ் 
لا صلوة لمن لم يقرأ بفاتحة الكتاب 
 பாத்திஹா சூரா ஓதவில்லையெனில் தொழுகை கூடாது.

ஒவ்வொருவரும் பாத்திஹா சூரா ஓதவேண்டும் என்பதை புரியமுடிகிறது. 

 இந்த இரண்டு ஹதீஸ்களை முன்வைத்து அணுகும்போது இரண்டுவிதமாக புரியலாம்.ஒன்று முதல் ஹதீஸை முன்வைத்து இரண்டாவது ஹதீஸிற்கு மாற்று விளக்கம் தரவேண்டும்.அதாவது இமாம்,தனித்து தொழுபவர் பாத்திஹா சூரா கட்டாயம் ஓதவேண்டும்.முக்ததி அமைதியாக இருக்கவேண்டும்.
மற்றொன்று இரண்டாவது ஹதீஸை முன்வைத்து முதல் ஹதீஸிற்கு மாற்று விளக்கம் தரவேண்டும்.அதாவது கிராஅத்தில் பாத்திஹா சூராவை தவிர வேறு சூராக்கள் என்பதாகும்.பாத்திஹா சூராவை இமாம்,முக்ததி இருவரும் கட்டாயம் ஓதவேண்டும்.இதில் எதனை கொண்டு அமல் செய்வது என கேள்வி எழலாம்? இது போன்று குர்ஆன்,சுன்னாவில் ஏராளமான சட்டங்கள் உள்ளது.

ஆக குர்ஆன்,சுன்னாவிலிருந்து ஒவ்வொருவரும் சட்டங்களை ஆய்வு செய்து ஆராய்ந்து பின்பற்றுவது மிக கடினமானது.அனைவராலும் இயலாத ஒன்றாகும்.இப்போது ஒன்று தனது அறிவு,ஆய்வுத்திறனை முன்வைத்து இது போன்ற சூழ்நிலைகளில் அமல்செய்வது.அல்லது முன்சென்ற முஜ்தஹிதுகளான (ஆய்வு செய்யும்) இமாம்களின் புரிதலையும், விளக்கத்தையும்  நம்பிக்கை வைத்து அமல் செய்வது.

இரண்டில் எதார்த்தம் என்னவெனில் முதல் நிலையானது மிகவும் அபாயகரமானது.இரண்டாவது நிலையில் பேணிக்கையும் பணிவும் உள்ளது.ஏனெனில் புத்திக்கூர்மை, மனனத்திறன்,ஆய்வுத்திறன்,நேர்மை,இறையச்சம், பேணிக்கை, ஒழுக்கம் இது போன்ற அனைத்திலும் நம்மை விடசிறந்தவர்களாக, உயர்ந்தவர்களாக திகழும்  இமாம்களின் ஆய்வை எடுத்து நடப்பதே ஏற்றமானது,பொருத்தமாகும்.
அதுமட்டுமின்றி இமாம்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் சிறப்பித்துக்கூறப்பட்ட  பொற்காலத்தில் வாழ்ந்தவர்கள்.ஸஹாபாக்களின் காலத்திற்கு நெருக்கமானவர்கள்.ஆனால்,நாம் நபியின் காலத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு பிறகு பிறந்துள்ளோம். எனவே முஜ்தஹித்களான இமாம்களை பின்பற்றுவது தான் அவசியமாகும்.ஆக குர்ஆன்,சுன்னாவில் உள்ள சட்டங்களில் எதனை புரிந்து கொள்வது கடினம்,சிரமம்,மூடல்,
வெளிப்படையான முரண்பாடு,தெளிவற்ற தன்மை உள்ளதோ அவைகளில் தான் இமாம்களை தக்லீத் (பின்பற்றுதல்) செய்கிறோம்.ஆனால் உறுதியான,தீர்க்கமான,தெளிந்த,
மூடலில்லாத,முரண்பாடுகளற்ற,
தடுமாற்றமில்லாத சட்டங்களில் தக்லீத் கிடையாது என்பதில் ஒன்றுப்பட்டுள்ளோம்.
(இன்ஷாஅல்லாஹ் தொடரும்)

No comments:

Post a Comment