மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் தொடர்:13
கருத்து வேறுபாடுகளும்,
மத்ஹபுகளும் பகுதி:1
தக்லீதின் காரணமாக மத்ஹபுகள் உருவானது.மத்ஹபுகள் என்பது கருத்து வேறுபாட்டின் பின்னணியை கொண்டது.மத்ஹப் மறுப்பாளர்கள் தமிழகத்தில் இயக்கத்தை ஆரம்பித்த போது மத்ஹபின் காரணமாக தான் கருத்துவேறுபாடு உருவாகியுள்ளது.குர்ஆன்,ஹதீஸ் ஒன்றாக இருக்கும்போது நான்கு மத்ஹபுகள் எப்படி உருவானது? என்பதாக கண்மூடித்தனமாக விமர்சித்தனர்.வரம்பு மீறி எள்ளிநகையாடினர்.ஆனால்,இன்று மத்ஹப் மறுப்பாளர்களுக்கு மத்தியில் ஏராளமான கருத்துவேறுபாடுகள், கடுமையான விமர்சனங்கள் உருவாகிவிட்டது.நா ன்கு மத்ஹபுகளை களையெடுக்க களத்தில் இறங்கியவர்கள் இன்று பல்வேறு பிரிவுகளாக சிதறிக் கிடக்கின்றனர்.
ஹதீஸ்களில் வெளிப்படையான பொருளை ஏன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எடுப்பதில்லை? அவ்வாறு எடுத்தால் இமாம்களின் பிக்ஹ்,தக்லீதின் தேவை ஏற்படாது.ஓர் இமாம் இவ்வாறு கூறுகிறார்.மற்றொரு இமாம் அதற்கு முரணாக கூறுகிறார்.அதிலும் அர்த்தத்தை விளங்குவதில் குறிப்பாக நான்கு இமாம்களுக்கு மத்தியில் கூட நிலைப்பாடுகள் வேறு வேறாக உள்ளது.சில சமயங்களில் ஓர் இமாம் ஒன்றை ஹலால் என்பதாக கூறுகிறார்.மற்றொரு இமாம் ஹராம் என்பதாக கூறுகிறார் என்பதாக இயல்பாக கேள்வி எழலாம்.இதற்குரிய பதிலை இனி பார்ப்போம்!
முதலில் முன்னோட்டமாக சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.எல்லா சந்தர்ப்பங்களிலும் முரண்படுவது பெருமானாரின் வார்த்தைகளுக்கு மாறுபாடு என்பதாக கருதப்படுமா? அல்லது வார்த்தைகளின் பொருளில் ஏற்படும் முரண்பாடு என்பதாக கருதப்படுமா?ஒருவர் பெருமானாரின் வெளிப்படையான வார்த்தைகளுக்கு முரண்படுகிறார்.எனினும்,அதனுள் பொதிந்துள்ள கருத்துக்களை ஆய்வு செய்து பின்பற்றுகிறார்.இது முரண்பாடா? நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தது அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஹராம் என்பதாக கருதப்படுமா? அல்லது சிறந்ததற்கு மாற்றமானது என கருதப்படுமா? நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் அனைத்து கட்டளைகளும் எல்லா சந்தர்ப்பங்களிலும் பர்ளா?அல்லது விரும்பத்தக்கதா? அறிவுரையா? இது குறித்து ஹதீஸ்களின் ஒளியில் பார்த்தால் கருத்துவேறுபாட்டின் பின்னணியும்,மத்ஹபுகளின் நியாயமும் புரிந்து கொள்ளமுடியும்.
ஆதாரம்:1
عن ابن عمر رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم يوم الأحزاب لا يصلين أحد العصر إلا في بني قريظة فأدرك بعضهم العصر في الطريق فقال بعضهم لا نصلي حتى نأتيها وقال بعضهم بل نصلي لم يرد منا ذلك فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فلم يعنف واحدا منهم
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
அகழ்ப் போர் (முடிந்து வந்த) தினம், நபி(ஸல்) அவர்கள், 'பனூ குறைழா குலத்தினர் வசிக்குமிடத்தை நீங்கள் அடையும் வரை (உங்களில்) எவரும் அஸ்ருத் தொழுகையைத் தொழவேண்டாம்' என்று கூறினார்கள். வழியிலேயே அஸ்ரு(த் தொழுகை) நேரத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது சிலர், 'பனூ குறைழாக் குலத்தினரை அடையும் வரை நாம் அஸ்ருத் தொழ வேண்டாம்' என்று கூறினர். வேறு சிலர், '(தொழுகை நேரம் தவறிப் போனாலும் தொழவேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை; ('வேகமாக அங்கு போய்ச் சேருங்கள்' என்ற கருத்தில் தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்) எனவே, நாம் தொழுவோம்' என்று கூறினர். நபி(ஸல்) அவர்களிடம் இரண்டு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்டபோது அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.(ஆதாரம்:புகாரி,பாகம் :2,பக்கம்:591)
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் لا يصلين أحد என்ற வாசகத்தை நன்றாக ஊன்றி கவனியுங்கள்.இதில் உள்ள நூன் (ن) ஷத்து பெற்று வந்துள்ளது.இதனை அரபி இலக்கணத்தில் நுனே ஸகீலா (نون ثقيلة ) என்று சொல்லப்படும்.இதனின் பொருள் நிச்சயமாக,திண்ணமாக என்ற பொருள் உள்ளது.மேலும் அஹத் (ஒருவரும்) என்ற வார்த்தையானது அனைத்து நபரையும் உள்ளடக்கும் பொருள் உள்ளது.எனவே, ஹதீஸின் நேரடியான அர்த்தம் ஒருவரும் அஸர் தொழுகையை பனூகுரைளாவில் தவிர நிச்சயமாக தொழக்கூடாது.ஆனால் ஸஹாபாக்களில் ஒரு சாரார் பெருமானாரின் வெளிப்படையான வார்த்தைகளுக்கு மாற்றம் செய்துள்ளார்கள்.எனினும்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டிக்கவில்லை.ஸஹாபாக்களில் ஒரு சாரார் புரிந்த அர்த்தத்தை வெளிப்படையில் நம்மால் சிறிதளவு கூட புரியமுடியவில்லை.ஆனால் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டையும் அங்கீகரித்துள்ளார்கள்.
وفي فتح الباري للحافظ ابن حجر: قال السهيلي وغيره: في هذا الحديث من الفقه أنه لا يعاب على من أخذ بظاهر حديث أو آية ولا على من استنبط من النص معنى يخصصه
ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இதனின் விளக்கத்தை எழுதுகிறார்கள்:இமாம் ஸுஹைலி ரஹ்,மற்றவர்களும் கூறுகிறார்கள்;இந்த ஹதீஸில் கிடைக்கும் விளக்கமானது,குர்ஆன் அல்லது ஹதீஸில் வெளிப்படையான பொருளின் பேரில் மக்கள் அமல்செய்தாலும் எந்த ஒரு குற்றமும் இல்லை.மேலும் தெளிவான விஷயத்திலிருந்து ஆய்வுசெய்து குறிப்பான விஷயத்தை புரிவதும் தவறில்லை.(ஆதாரம்:பத்ஹுல் பாரி16/67)
ஆதாரம்:2
عن أنس أن رجلا كان يتهم بأم ولد رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم لعلي اذهب فاضرب عنقه فأتاه علي فإذا هو في ركي يتبرد فيها فقال له علي اخرج فناوله يده فأخرجه فإذا هو مجبوب ليس له ذكر فكف علي عنه ثم أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إنه لمجبوب ما له ذكر
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணுடன் இணைத்து ஒரு மனிதர் அவதூறு சொல்லப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், "நீங்கள் சென்று அவருடைய கழுத்தை வெட்டிவிடுங்கள்" என்று சொன்னார்கள்.
அவ்வாறே அலீ (ரலி) அவர்கள் சென்ற போது, அவர் (சுற்றுச்சுவர் இல்லாத) ஒரு கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தார். அவரிடம் அலீ (ரலி) அவர்கள், "மேலே வா" என்று தமது கையைக் கொடுத்து அவரை வெளியேற்றினார்கள்.
அப்போது அவர் இன உறுப்பு துண்டிக்கப்பட்டவராக, இன உறுப்பே அற்றவராக இருந்தார். ஆகவே, அலீ (ரலி) அவர்கள் அவரை(க் கொல்லாமல்) விட்டுவிட்டார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர் இன உறுப்பு துண்டிக்கப்பட்டவர்; இன உறுப்பே அற்றவர் ஆவார்" என்று சொன்னார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம் பாகம்:2,பக்கம்:368)
ஹள்ரத் அலி (ரளி) அவர்கள் அந்நபரை கொல்வதற்குரிய காரணத்தை பெற்றுக் கொள்ளவில்லை என்பதால் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளையை நிறைவேற்றாமல் திரும்பி வந்து,நடந்ததை கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில் வருகிறது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: الشاهد يرى مايرى الغائب
மறைவாக இருப்பவர் பார்க்காததை முன்னால் இருப்பவர் பார்த்துள்ளார்.(ஆதாரம்:அல்பிதா யா வந்நிஹாயா 5/304)
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் தெளிவான கட்டளை.அதுவும் குற்றவியல் சட்டம்.அதில் எந்தவித இரக்கம்,கருணைக்கு இடமில்லை என்பது அல்லாஹ்வின் உத்தரவு.எனினும்,அலி (ரளி) அவர்கள் அதனை நிறைவேற்றவில்லை.மேலும் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், கண்டிப்பதற்கு பதிலாக அவரின் கருத்தை ஆமோதித்தார்கள்.அலி (ரளி) அவர்கள் அண்ணலாரின் வெளிப்படையான கட்டளைக்கு மாறு செய்ததால் ஹதீஸை விட்டவர் அல்லது மாறு செய்தவர் என கூறலாமா? (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
ஆதாரம்:3
عن أبي عبد الرحمن السلمي قال خطب علي فقال يا أيها الناس أقيموا الحدود على أرقائكم من أحصن منهم ومن لم يحصن وإن أمة لرسول الله صلى الله عليه وسلم زنت فأمرني أن أجلدها فأتيتها فإذا هي حديثة عهد بنفاس فخشيت إن أنا جلدتها أن أقتلها أو قال تموت فأتيت رسول الله صلى الله عليه وسلم فذكرت ذلك له فقال أحسنت
அபூஅப்திர் ரஹ்மான் அப்துல்லாஹ் பின் ஹபீப் பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
(ஒரு நாள்) அலீ (ரலி) அவர்கள் (எங்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது, "மக்களே! உங்கள் அடிமைகள்மீதும் குற்றவியல் தண்டனையை நிறைவேற்றுங்கள். அவர்கள் திருமணமானவர்களாக இருக்கட்டும்; திருமணமாகாதவர்களாக இருக்கட்டும். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமைப்பெண் ஒருவர் விபச்சாரம் செய்து விட்டார். எனவே, அவருக்குச் சாட்டையடிகள் வழங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள்.
ஆனால், அவருக்கு அப்போதுதான் மகப்பேறு இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தது. அவருக்குச் சாட்டையடி தண்டனையை நிறைவேற்றினால் (எங்கே) அவரை நான் கொன்றுவிடுவேனோ என அஞ்சினேன். (எனவே, தண்டனையைத் தள்ளிவைத்தேன்.) இது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, "நீங்கள் செய்தது சரிதான்" என்று அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்:முஸ்லிம் பாகம்:2,பக்கம்:71)
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வெளிப்படையான கட்டளையில் குறிப்பான விஷயமோ,நிபந்தனையோ இல்லை.எனினும்,ஹள்ரத் அலி (ரளி) அவர்கள் புகஹாக்களில் (மார்க்கவிற்பன்னர்) உள்ளவர்.தனது ஆய்வு, விளக்கத்தின் பேரில் புரிந்தார்.அதாவது பெருமானாரின் கட்டளையானது குறிப்பானது,நிபந்தனையின் பேரில் உள்ளது.ஏனெனில் அடிமைப்பெண் மரணித்தது விடக்கூடாது.குழந்தை பிறந்த சமயத்தில் தண்டனை அளிப்பது, அவளின் முடிவு மரணமாக அமைந்துவிடும்.எனவே தண்டனை அளிக்காமல் திரும்பி வந்தார்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,அலி (ரளி) கூறியதைக் கேட்டு குற்றவாளி,பாவி என திட்டாமல், அவரின் செயலை நல்லது என்பதாக பாராட்டியுள்ளார்.இதற்கு மாற்றமாக அந்த சமயத்தில் அலி (ரளி)அவர்கள் அந்தப் பெண்ணை சாட்டையால் அடித்து வெளிப்படையான கட்டளையை நிறைவேற்றியிருந்தால்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டித்திருக்க வாய்ப்புண்டு. இஜ்திஹாத் (ஆய்வு),கியாஸ், (ஒப்பீடு) கிளைசட்டங்களில் சில ஹதீஸ்களின் வெளிப்படையான வார்த்தைகளுக்கு மாற்றமாக இருப்பது இந்த ஒரு நிகழ்வின் மூலம் தீர்வு கிடைத்துவிடும்.எனினும்,ஆய்வா ளரிடத்தில் ஆய்வுத்திறன்,ஞானம் இருக்கவேண்டும் என்பது மிக அவசியமான ஒன்றாகும்.
ஆதாரம்:4
(ஹதீஸில் சுருக்கமான பகுதி)
عن البراء بن عازب رضي الله عنه قال اعتمر النبي صلى الله عليه وسلم في ذي القعدة فأبى أهل مكة أن يدعوه يدخل مكة حتى قاضاهم على أن يقيم بها ثلاثة أيام فلما كتبوا الكتاب كتبوا هذا ما قاضى عليه محمد رسول الله فقالوا لا نقر بها فلو نعلم أنك رسول الله ما منعناك لكن أنت محمد بن عبد الله قال أنا رسول الله وأنا محمد بن عبد الله ثم قال لعلي امح رسول الله قال لا والله لا أمحوك أبدا
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாக்காரர்களிடம் (மக்காவாசிகளான குறைஷிகளிடம் ஹுதைபிய்யா எனுமிடத்தில்) சமாதான ஒப்பந்தம் செய்தபோது அலீ இப்னு அபீ தாலிப்(ரலி), அவர்களிடையிலான ஒப்பந்தப் பத்திரத்தை எழுதினார்கள். அப்போது, 'அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்' என்று அவர்கள் எழுத, இணைவைப்பவர்கள், 'அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்' என்று எழுதாதீர்கள்' (என்று சொல்லிவிட்டு) முஹம்மத்(ஸல்) அவர்களை நோக்கி), 'நீர் அல்லாஹ்வின் தூதரக இருந்திருந்தால் நாங்கள் உம்முடன் போரிட்டிருக்க மாட்டோம்' என்று கூறினர். எனவே, நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம், 'அதை அழித்து விடுங்கள்' என்று கூறினார்கள். அலீ(ரலி), 'நான் அதை (ஒருபோதும்) அழிக்கப் போவதில்லை' என்று கூறிவிட்டார்கள். (ஆதாரம்:புகாரி,பாகம்:1,பக்கம்: 372)
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,அலி (ரளி) அவர்களின் பெயரை சொல்லியே கட்டளையிடுகிறார்கள்."அலியே! இந்த வார்த்தையை அழித்துவிடு"எனினும், அவர்கள் அண்ணலாரின் கட்டளையை நிறைவேற்றுவதற்கு பதிலாக, சத்தியமிட்டு அழிக்கமாட்டேன் என்கிறார்கள்.நேர்மையுடன் கூறுங்கள்.அலி (ரளி) அவர்களின் மீது என்ன தீர்ப்பு கூறுவது?பத்வா கொடுக்கலாமா? கூடாதா? வெளிப்படையில் அவருக்கு எதிராக தீர்ப்பு அளிக்காமல் இருப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை.ஏனெனில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,அவரின் பெயரை கூறித் தான் உத்தரவிட்டுள்ளார்.எனினும்,அலி (ரளி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கட்டளையை நிறைவேற்றாமல் பிடிவாதமாக உறுதியுடன் இருந்துள்ளார்கள்.பிறகு அவர்களுக்கு எதிராக எப்படி தீர்ப்பளிக்காமல் இருப்பது? (அல்லாஹ் பாதுகாப்பானாக)
இந்நிகழ்வின் எதார்த்தம் என்னவெனில் குரைஷியரின் ஆதாரவாளர்களுக்கு மத்தியில் ஹள்ரத் அலி ரளி அவர்கள் வெளிப்படையில் மறுத்தது, ஒழுக்கம்,பெருமானாரின் மீது கொண்ட அளவற்ற, எல்லையற்ற நேசமுமாகும். இதனால் தான் பெருமானாரின் திருப்பெயரை அழிப்பதற்கு மனம் வரவில்லை.எனினும்,பெருமானாரின் வெளிப்படையான வார்த்தையை கவனியுங்கள் நேசம்,பிரியம் என்பதற்கு சிறிய அடையாளம் கூட ஹதீஸில் இல்லை.ஒட்டுமொத்த சமுதாயம், அலி (ரளி) அவர்கள் ஹதீஸை மறுப்பவர் ஹதீஸிற்கு மாற்றம் செய்பவர் என்பதாக விமர்சிக்கவில்லை.
ஆதாரம்:5
عبد الله بن عمرو رضي الله عنهما بلغ النبي صلى الله عليه وسلم أني أسرد الصوم وأصلي الليل فإما أرسل إلي وإما لقيته فقال ألم أخبر أنك تصوم ولا تفطر وتصلي فصم وأفطر وقم ونم فإن لعينك عليك حظا وإن لنفسك وأهلك عليك حظا قال إني لأقوى لذلك قال فصم صيام داود عليه السلام قال وكيف قال كان يصوم يوما ويفطر يوما ولا يفر إذا لاقى قال من لي بهذه يا نبي الله قال عطاء لا أدري كيف ذكر صيام الأبد قال النبي صلى الله عليه وسلم لا صام من صام الأبد مرتين
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நான் தொடர்ந்து நோன்பு வைப்பதாகவும் இரவெல்லாம் தொழுவதாகவும் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தது; அவர்கள் என்னை அழைத்து வரச் சொல்லியிருக்க வேண்டும்; அல்லது நானாக அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும்! (அவர்கள் என்னை அழைத்து வரச் சொன்னார்களா? நானாகச் சென்று அவர்களைச் சந்தித்தேனா என்பது எனக்கு நினைவில்லை!) நபி(ஸல்) அவர்கள் 'நீர் விடாமல் நோன்பு நோற்பதாகவும் தூங்காமல் தொழுவதாகவும் என்னிடம் கூறப்படுகிறதே! எனவே, நோன்பு வைப்பீராக! அதைவிட்டுவிடவும் செய்வீராக! (இரவில் எழுந்து நின்று வணங்குவீராக! தூங்கவும் செய்வீராக! ஏனெனில், உம்முடைய கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன் உமக்கும் உம்முடைய குடும்பத்தினருக்கும் நீர் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன!' என்று கூறினார்கள். நான், 'இதற்கு எனக்கு சக்தி உள்ளது!' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் 'நீர் தாவூத் நபியின் நோன்பை நோற்பீராக!' என்றார்கள். 'அது எவ்வாறு?' என்று கேட்டேன். 'தாவூத் நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்பார்; ஒரு நாள்விட்டுவிடுவார்! மேலும், (போர்க்களத்தில் எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்க மாட்டார்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! இந்த (வீரம் நிறைந்த) பண்புக்கு எனக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்!' என்றேன்.
'காலமெல்லாம் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்கள் (இந்த சம்பவத்துக்கிடையே) எப்படிக் கூறினார்கள் என்பதை நான் அறியமாட்டேன். என்றாலும் 'காலமெல்லாம் நோன்பு நோற்றவர் நோன்பு நோற்றவரல்லர்!' என்று நபி(ஸல்) அவர்கள் இருமுறை கூறினார்கள் (என்பது மட்டும் எனக்கு நினைவிருக்கிறது!)' என்று அதா(ரஹ்) கூறினார்.(ஆதாரம்:புகாரி,பாகம்: 1,பக்கம்:265)
இந்த தெளிவான ஆதாரப்பூர்வமான அறிவிப்பின் மூலம் தொடர்படியாக நோன்பு வைப்பது தடை என புரியமுடிகிறது.ஆனால்,உம்மத்தி ல் காலமெல்லாம் நோன்பு வைத்த பெரியோர்கள் இருந்துள்ளனர்.ஹள்ரத் இமாம் ஷுஅபா இப்னுல் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள்,
ஹள்ரத் இமாம் வகீஃ இப்னுல் ஜர்ராஹ் (ரஹ்) அவர்கள்,ஹள்ரத் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இவர்கள் அனைவரும் ஹதீஸ்களை வல்லுனர்கள்.இது போன்ற ஏராளமான உதாரணங்களை கூறமுடியும்.
காலமெல்லாம் நோன்பு நோற்பவரின் நோன்பாகாது என்பதாக பெருமானாரின் வெளிப்படையான வார்த்தைகளுக்கு மாற்றமாக ஹதீஸ்கலை வல்லுனர்கள் நடந்துள்ளார்கள்.இப்போது அனைவரையும் ஹதீஸிற்கு மாற்றம் செய்தார்கள் என்பதாக கூறலாமா? அல்லது பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நோக்கம், நமது உம்மத்தின் மீது எளியதையும், பிரியத்தையும் நாடி நோன்பு நோற்பதை தடுத்துள்ளார்கள் என்பதாக கூறலாமா? இதில் எவை பொருத்தமாக இருக்கும்?
ஆதாரம்:6
நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் இயற்கை மரபுகளை விளக்கியவாறு கூறினார்கள்: نتف الابط அக்குல் முடியை பிடிங்குவது.(ஆதாரம்:புகாரி,பா கம்:2, பக்கம் 875)
அரபி மொழியில் نتف (நத்ஃப்) என்பதற்கு முடிகளை பிடிங்குதல் என்பது பொருளாகும்.ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் அக்குல் முடியை சிரைத்தல் (حلق الابط) என்பது வரவில்லை.எனினும், பெருமானாரின் உம்மத் இதன்படி அமல் செய்யவில்லை.அதுமட்டுமின்றி மத்ஹப் மறுப்பாளர்கள் கூட அமல் செய்யமுடியவில்லை.ஹதீஸின்படி அமல்செய்ய வேண்டும் என வாதிடுபவர்கள் முடியை பிடிங்குதலை அமல் செய்யவில்லை.இப்போது அனைவரும் ஹதீஸை புறக்கணித்து விட்டார்களா?
இமாம் நவவி (ரஹ்) அவர்கள்,இமாம் ஷவ்கானி (ரஹ்) அவர்கள் இதனின் விளக்கவுரையில் எழுதியுள்ளார்கள்:
والله أعلم أما نتف الإبط فسنة بالاتفاق والأفضل فيه النتف لمن قوى عليه ويحصل أيضا بالحلق وبالنورة وحكى عن يونس ابن عبد الأعلى قال دخلت على الشافعي رحمه الله وعنده المزين يحلق إبطه فقال الشافعي علمت أن السنة النتف ولكن لا أقوى على الوجع
சக்தியுள்ளவர் அக்குல் முடியை பிடிங்குவது ஒன்றுபட்ட கருத்தின்படி சுன்னத்தும், சிறந்ததுமாகும்.சிரைப்பது,மழிப் பதால் நோக்கம் நிறைவேறிவிடும்.யூனுஸ் இப்னு அப்துல் அஃலா அவரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது;நான் ஷாபி (ரஹ்) அவர்களிடத்தில் சென்றிருந்தேன்.அப்போது நாவிதன் அவரின் அக்குல்முடியை சவரக்கத்தியால் தூய்மை செய்து கொண்டிருந்தார்.ஹள்ரத் இமாம் ஷாபியி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்;முடியை பிடிங்குவது தான் சுன்னத் என்பதை அறிகிறேன்.எனினும் சிரமத்தை பொறுத்துக்கொள்ள இயலவில்லை.(ஆதாரம்:ஷர்ஹு முஸ்லிம்,1/129, நைலுல்அவ்தார் 2/124)
பெருமானாரின் ஹதீஸில்,ஆற்றல் உள்ளவருக்கு அக்குல் முடியை பிடிங்குவது சுன்னத் என்பதாக குறிப்பான விஷயம் இல்லை.எனினும், ஹதீஸின் விளக்கவுரையாளர்கள் ஹதீஸின் அர்த்தத்தில் நிபந்தனையை இணைத்துள்ளனர்.எனவே முழு உம்மத்தும் ஹதீஸின் வெளிப்படையான வார்த்தையின் பேரில் அமல்செய்யவில்லை என்பதால் ஹதீஸை விட்டவர்களா?மறுத்தவர்களா? இந்த ஹதீஸின் உண்மையான விஷயத்தை ஹதீஸ்கலை வல்லுனர்கள் ஆய்வு செய்து கூறுகிறார்கள்; எவ்வாறு செய்தாலும் சரி முடியை அகற்றுவது தான் அசலான நோக்கமாகும்.
ஆதாரம்:7
فعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمْ الْمَوْتَ مِنْ ضُرٍّ أَصَابَهُ , فَإِنْ كَانَ لا بُدَّ فَاعِلا فَلْيَقُلْ : اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتْ الْحَيَاةُ خَيْرًا لِي , وَتَوَفَّنِي إِذَا كَانَتْ الْوَفَاةُ خَيْرًا لِي
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் தமக்கு நேர்ந்துவிட்ட ஒரு துன்பத்தின் காரணத்தால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித் தான் ஆகவேண்டும் என்றிருந்தால், "இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!" என்று கேட்கட்டும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஆதாரம்:புகா ரி,பாகம்:2,பக்கம்:847)
இந்த ஹதீஸில் சிரமம் (ضر) என்ற வார்த்தை பொதுவாக வந்துள்ளது.எனவே உலக காரியங்கள்,தீனுடைய காரியங்கள் அனைத்தும் உள்ளடங்கும்.மரணத்தை ஆசைப்படக்கூடாது என்பதாக வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது.எனினும்,ஹதீஸ் விரிவுரையாளர்கள், சிரமம் என்பதை உலகாரியங்கள் என்பதாக குறிப்பாக கருதுகிறார்கள்.
ஹாபிள் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:ஹள்ரத் அலி (ரளி) அவர்களின் காலத்தில் உள்நாட்டு விவகாரங்களில் சிக்கல் உருவானது, குழப்பங்கள் பெருகியது,கிரிமினல் குற்றங்கள் மலிந்தது,இவர் இப்படிக் கூறினார் இவ்வாறு கூறப்பட்டது (என நினைத்ததையெல்லாம் பரப்பினர்) இது போன்ற சூழ்நிலையினால் மரணத்தை அன்னார் ஆசைப்பட்டார்கள்.
இது போன்று இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் மரணத்தை ஆதரவு வைத்தார்கள் لما اشتد عليه الحال و لقي من مخالفيه الأهوال அன்னாருக்கு நெருக்கடி ஏற்பட்டு, எதிரிகளின் மூலம் சிரமங்கள் வந்தபோது மரணத்தை ஆசைப்பட்டார்கள்.
மரணத்தை ஆசைப்படுவதை தடுத்ததின் நோக்கம்
والمراد بالضر ههنا ما يخص العبد فى بدنه من مرض و نحوه لا فى دينه ........الخ
(ஆதாரம்:அல்பிதாயாவந்நிஹாயா பாகம்:1,பக்கம்:219)
சிரமத்தினால் (மரணத்தை ஆசைப்பக்கூடாது) என்பது மனிதனுக்கு உடல் ரீதியாக ஏற்படும் துன்பம் நோய் போன்றவைகளால்தான்.
தீனின் சிரமம் நோக்கம் இல்லை.(நாம் வாழ்வதில் தீனில் பாதிப்பு ஏற்படுவதை பயந்து மரணத்தை ஆசைப்படுவது தவறில்லை)
தீன்,துன்யா சிரமம் என்பதாக ஹதீஸ் பிரித்து கூறவில்லை.ஹதீஸில் சிரமம் என்பது பொதுவாக கருதப்படுமானால் அலி (ரளி) அவர்கள்,புகாரி (ரஹ்) போன்றவர்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸிற்கு மாற்றமாக செயல்பட்ட தோற்றம் தென்படுகிறது.பிரித்துக்காட்டு ம் காரணம் ஹதீஸ்களில் தேடினால் ஒருபோதும் கிடைக்காது.எனினும் ஹதீஸ் விரிவுரையாளர்கள்,உம்மத்தின் புகஹாக்கள் எனும் மாரக்க விற்பன்னர்கள் இதனை ஆய்வின்படி புரிந்துள்ளனர்.
ஆதாரம்:8
ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) அவர்களின் அறிவிப்பு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,அவரிடத்தில் எத்தனை நாட்களில் நீர் குர்ஆனை ஓதிமுடிப்பீர்? எனக்கேட்டார்கள்.அவர் கூறினார்; ஒவ்வொரு இரவிலும் குர்ஆனை ஓதி முடிப்பேன்.பிறகு அண்ணலார் கூறினார்கள்;اقرا فى كل سبع ليال مرة வாரத்தில் ஒருமுறை குர்ஆனை ஓதிமுடிப்பீராக என்றார்கள்.(ஆதாரம்:புகாரி,2/ 755)
மற்றோர் அறிவிப்பில் வருகிறதுفاقرا فى سبع ولا تزد على ذلك வாரத்தில் ஒருமுறை குர்ஆனை ஓதிமுடிப்பீராக!அதனைவிட அதிகப்படுத்தாதீர்!(ஆதாரம்:புகா ரி,2/756)
இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் பல்வேறுபட்ட அறிவிப்புகளை குறித்து கூறுகிறார்கள்;
قال بعضهم فى ثلاث وفى خمس و أكثرهن على سبع
மூன்று நாட்கள் என்பதாக சிலரும், ஐந்து நாட்கள் என்பதாக சிலரும், ஏழு நாட்கள் என்பதாக அதிகமானவர்கள் (ஒரு முறை குர்ஆனை ஓதி முடிப்பதாக) கூறுகிறார்கள்.(ஆதாரம்:புகாரி 2/756)
ஹள்ரத் உஸ்மான் (ரளி) அவர்கள்,ஹள்ரத் தமீமுத்தாரி (ரளி) அவர்கள், ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரளி) அவர்கள் ஓர் இரவில் குர்ஆனை முழுமையாக ஓதிமுடிப்பவர்களாக இருந்துள்ளார்கள்.
இமாம்களில் ஹள்ரத் ஷாபியி (ரஹ்) அவர்கள் ரமலானில் அறுபது முறை குர்ஆனை ஓதி முடிக்கும் வழக்கமுடையவர்களாக இருந்துள்ளார்கள்.(ஆதாரம்:தத்கி ரதுல் ஹுஃப்பாள் 1/329)
இமாம் வகீஃ இப்னுல் ஜர்ராஹ் (ரஹ்)அவர்கள் ஓர் இரவில் குர்ஆனை ஓதி முடிப்பவர்களாக இருந்தார்கள்.(ஆதாரம்:பக்தாத் 13/470)
யஹ்யா இப்னு ஸயீதுல் காத்தான் (ரஹ்) அவர்கள் இருபத்துநான்கு மணிநேரத்தில் ஒருதடவை குர்ஆனை ஓதி முடிப்பவர்களாக இருந்தார்கள்.
(ஆதாரம்:பக்தாத் 14/141)
இமாம்கள் ஹதீஸிற்கு மாறுசெய்தார்கள் என்பதாக கூறவேண்டும்.(அல்லாஹ் பாதுகாப்பானாக) ஹதீஸின் வெளிப்படையான கருத்தைப் பார்த்தால் அவ்வாறு தான் புரியமுடியும்.எனினும்,பெருமானா ர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நோக்கம் உம்மத்தின் மீதுள்ள கருணை பரிவு இரக்கத்தின் வெளிப்பாடாகும்.மாறாக,ஹராம் என்பதன் பேரில் தடுக்கவில்லை என்பதாக அறிஞர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர்.இவ்வாறு புரிவதுதான் பொருத்தமானதாகும்.
ஆதாரம்:9
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றை தடுத்திருப்பார்கள் அதனின் தரம் என்ன? என்பதில் விளக்கம் இருக்காது.அதாவது தடை என்பது ஹராமா? அல்லது சிறந்ததற்கு மாற்றமா? ஆனால், ஆய்வாளர்கள் தங்களது மார்க்க ஞானத்திற்கு ஏற்ப,விளக்கத்திற்கு ஏற்ப தீர்ப்பளிப்பார்கள்.
نهينا عن اتباع الجنا ئز ولم يعزم علينا
உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். ஜனாஸாவைப் பின் தொடந்து செல்ல (பெண்களாகிய) நாங்கள் (நபி(ஸல்) அவர்களால்) தடுக்கப்பட்டிருந்தோம்: ஆனால் வன்மையாக நாங்கள் தடுக்கப்படவில்லை.(ஆதாரம்:புகா ரி,பாகம்:1,பக்கம்:70)
மற்றோர் அறிவிப்பில் வருகிறது.
كنا ننهى عن اتباع الجنائز ولم يعزم علينا
உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். ஜனாஸாவைப் பின் தொடந்து செல்ல (பெண்களாகிய) நாங்கள் (நபி(ஸல்) அவர்களால்) தடுக்கப்பட்டுகொண்டிருந்தோம்.
ஆனால் வன்மையாக நாங்கள் தடுக்கப்படவில்லை.(ஆதாரம்:முஸ் லிம்,பாகம்:1, பக்கம்:304)
ஹள்ரத் இமாம் நவவி(ரஹ்) அவர்கள் இதனின் விரிவுரையில் எழுதுகிறார்கள்:
معناه نهانا رسول الله صلى الله عليه وسلم عن ذلك نهى كراهة تنزيه لا نهى عزيمة و تحريم
(ஆதாரம்:ஷர்ஹு முஸ்லிம் பாகம்:1,பக்கம்:304)
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,எங்களை ஜனாஸாவில் பின்தொடர்வதை தடுத்தார்கள் என்பதின் விளக்கமானது;மக்ரூஹ் தன்ஜீஹ் (அனுமதிக்கு நெருக்கமானது) என்பதாகும்.மக்ரூஹ் தஹ்ரீம் (ஹராமிற்கு நெருக்கமானது), வலியுறுத்தி தடுக்கவில்லை.
ஹள்ரத் உம்மு அதிய்யா (ரளி) அவர்கள் தனது ஆய்வுத்திறன்,மார்க்க அறிவின் மூலம் பெருமானாரின் தடையின் சட்டத்தை கூறியுள்ளார்கள்.இந்த தடை ஹராம் என்பதல்ல.மாறாக சிறந்ததற்கு மாற்றமானது.எனினும் ஹதீஸில் பொதுவாக தடைமட்டும் தான் வருகிறது.அதில் பிரித்தறியும் வித்தியாசமில்லை.
இறுதியாக,ஹதீஸ்களின் வெளிப்படையான வார்த்தையை மட்டும் அமல் செய்பவர்களின் ஓர் உதாரணத்தை மட்டும் கூறி இந்த தலைப்பை நிறைவுசெய்கிறோம்.
جابر، عن رسول الله صلى الله عليه وسلم؛ أنه نهى أن يبال في الماء الراكد
ஜாபிர் (ரளி) அவர்கள்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதை அறிவிக்கிறார்கள்:தேங்கிய தண்ணீரில் சிறுநீர் கழிப்பதை தடுத்தார்கள்.(ஆதாரம்: முஸ்லிம்,பாகம்:1,பக்கம்:138)
அனைத்து ஆய்வுத்திறன் மிகுந்த புகஹாக்கள் எனும் மார்க்க விற்பன்னர்கள்,ஹதீஸ்கலை வல்லுனர்களிடத்தில் இந்த ஹதீஸின் கருத்தானது;தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பது தடுக்கப்பட்டதைப் போன்று மலம் கழிப்பதும் தடுக்கப்பட்டதாகும்.தடைசெய்யப் பட்ட விலங்குகளின் சிறுநீரின் சட்டமும் அவ்வாறுதான்.சிறுநீர் வழிந்தோடி தண்ணீரில் சென்றுவிடும் எனில்,அருகில் நின்று சிறுநீர் கழிப்பது கூடாது.ஏதேனும் கோப்பையில் சிறுநீர் கழித்து நீரில் ஊற்றினாலும் தடையாகும்.ஏனெனில் அனைத்து நிலைகளிலும் தண்ணீர் அசுத்தமாகிவிடும்.எனினும்,பி ரபல்யானவர் தாவூத் இப்னு அலி ளாஹிரி போன்றவர்களிடத்தில் வெளிப்படையான வார்த்தையில் அகப்பட்டு இதற்கு எதிரான கண்ணோட்டத்தை எடுத்துள்ளனர்.
இமாம் நவவி ஷாபியி (ரஹ்) அவர்கள் எழுதிகிறார்கள்:
حكي عن داود بن علي الظاهري أن النهى مختص ببول الانسان بنفسه وأن الغائط ليس كالبول وكذا إذا بال في اناء ثم صبه في الماء أو بال بقرب الماء وهذا الذي ذهب إليه خلاف اجماع العلماء وهو أقبح ما نقل عنه في الجمود على الظاهر والله أعلم
தாவூத் இப்னு ளாஹிரிடமிருந்து சொல்லப்படுகிறது;தடையானது மனிதனின் சிறுநீருடன் குறிப்பானது.மலம் சிறுநீரின் சட்டத்தில் நுழையாது.இதே போன்று ஒருவர் பாத்திரத்தில் சிறுநீர் பிடித்து ஊற்றினால்,தண்ணீருக்கு அருகில் சிறுநீர் கழித்து வழிந்தோடி தண்ணீரில் சென்றாலும் பிரச்சனையில்லை.தாவூத் ளாஹிரியின் இந்த வழிமுறை இஜ்மாவிற்கு (ஒன்றுப்பட்டது) எதிரானது.
(ஆதாரம்:ஷர்ஹு முஸ்லிம்,பாகம்:1, பக்கம்:138)
இதே போன்று தான் நாய்,கழுதை மற்றவைகளின் சிறுநீரும் தேங்கிய தண்ணீரை அசுத்தமாக்காது என்பதாகவும் கூறுகின்றனர்.
வெளிப்படையான வார்த்தைகளை எடுத்து மிகப்பெரிய தவற்றை செய்துள்ளனர்.ஷரீஅத்தின் உயிரோட்டத்தை எவ்விதமாக தகர்த்துள்ளனர் என்பதை இதன்மூலம் புரியமுடிகிறது.
No comments:
Post a Comment